5 மாநில தேர்தல்களில், தெலங்கானா தவிர்த்து காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், இனி இந்தி பேசக்கூடிய 12 மாநிலங்களிலும் பா.ஜ.க மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது.
இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா, அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க, தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸிடம் ஆட்சியைப் பறித்திருக்கிறது. மேலும், மத்தியப் பிரதேசத்திலும் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், இனி இந்தி பேசக்கூடிய 12 மாநிலங்களிலும் பா.ஜ.க மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இமாச்சல பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.
வெறும் மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தன் தனிப்பெரும்பான்மையிலும், பீகார் மற்றும் ஜார்கண்டில் ஆளும் அரசுடன் கூட்டணியில் அங்கம் வகித்தும் ஆட்சி செய்துவருகிறது.
இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா, “ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியமைத்து வட இந்தியாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ்யின் சரிவின் காரணமாக ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சியாக உருவாகியிருப்பது தற்போதைய அரசியல் களத்தில் கவனம் பெற்றிருப்பதையும் மறுக்க முடியாது.
இரண்டு மாநிலங்களில் அரசை நிறுவியிருக்கும் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் ஆம் ஆத்மியும், தேர்தல் களத்தில் பெரும் சரிவைக் கண்டுவரும் காங்கிரஸும் இந்திய அளவில் அரசியல் கணக்கை மாற்றிவருகின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்தியாவில் தற்போது பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி (BSP), சிபிஐ(M), தேசிய மக்கள் கட்சி (NPP) மற்றும் ஆம் ஆத்மி ஆகிய ஆறு தேசிய கட்சிகள் இருப்பது குறிப்பிடதக்கது.