தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஹமாஸ் 76 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்கள் ஆதரித்த நான்கு சுயேச்சைகளும் வென்றார்கள். அராபத்தின் ஃபதா கட்சிக்கு 43 இடங்களே கிடைத்தன.
இஸ்ரேல் என்ற தேசத்தையே நிராகரித்தாலும், யூதர்களின் ஆதிக்கத்தை வெறுத்தாலும், ஹமாஸ் அமைப்பு ஆரம்பித்த முதல் ஏழு ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் போலீஸாரைத் தாண்டி பொதுமக்கள் யாரையும் தாக்கியதில்லை. 1994 பிப்ரவரியில் இது மாறியது.
மேற்குக் கரையின் ஹெப்ரான் பகுதியில் இஸ்ரேல் அரசால் குடியேற்றம் செய்யப்பட்ட பரூச் கோல்டுஸ்டெயின் என்ற யூத மத அடிப்படைவாதி, ரமலான் மாதத்தில் ஒரு மசூதியில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.
29 பேர் இறந்தனர், 125 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் பாலஸ்தீனர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் வீதிக்கு வந்து போராடினர்.
போராட்டக்காரர்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். பரூச் கோல்டுஸ்டெயின் நடத்திய தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் யிஷாக் ராபின் கண்டித்தாலும், ஹெப்ரான் பகுதியில் இருக்கும் யூதக் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற பாலஸ்தீனர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
The aftermath of the 1994 Dizengoff Street bus bombing in Tel Aviv
Wikimedia Commons
இந்த ஹெப்ரான் தாக்குதலுக்கும் மரணங்களுக்கும் பழிவாங்கப் போவதாக அறிவித்தது ஹமாஸ். ‘இனிமேலும் இஸ்ரேலின் ராணுவத்தினர், பொது மக்கள் என்று பிரித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை.
போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் பாலஸ்தீனர்களை நீங்கள் கொல்லும்போது, நாங்களும் அப்படியே தாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறோம்’ என்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் ஹமாஸின் தற்கொலைப்படை தாக்குதல்கள் அதிகரித்தன. ஹமாஸின் காஸிம் பிரிகேட்ஸ் தலைவர் யாஹ்யா ஆயாஷ் 96-ம் ஆண்டில் இஸ்ரேல் உளவுத்துறையால் கொல்லப்பட, ஹமாஸின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன.
1997-ம் ஆண்டு இன்னொரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அப்போதும், தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தான் பிரதமராக இருந்தார்.
ஹமாஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரான காலித் மாஷல் அப்போது ஜோர்டானில் வசித்தார். அவரை ரகசியமாகக் கொல்லுமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத்துக்கு நெதன்யாஹு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு கனடா சுற்றுலாப் பயணிகள் போலச் சென்ற மொஸாத் ஏஜென்டுகள் இருவர், தலைநகரின் பரபரப்பான வீதி ஒன்றில் காலித் மாஷல் மீது கெமிக்கலை ஸ்ப்ரே செய்தனர்.
நரம்பு நோயை ஏற்படுத்தி சாகடிக்கும் கெமிக்கல் அது. ஜோர்டான் அரசு அந்த ஏஜென்டுகளைக் கைது செய்தது. மன்னர் ஹுசைன் இந்த தாக்குதலை மிகப்பெரிய சர்வதேசப் பிரச்னை ஆக்கினார்.
அந்த நேரத்தில் ஹமாஸ் தலைவர் ஷேக் அகமது யாசின் இஸ்ரேல் சிறையில் இருந்தார். ‘காலித் மாஷல் மீது ஸ்ப்ரே செய்யப்பட்ட கெமிக்கலை செயலிழக்கச் செய்யும் மருந்தை அவருக்கு உடனே கொடுக்க வேண்டும்.
சிறையிலிருந்து யாசினை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மொஸாத் ஏஜென்ட்டுகளை தூக்கில் போடுவேன்’ என்று இரட்டை நிபந்தனைகளை விதித்தார் ஜோர்டான் மன்னர்.
இஸ்ரேல் பணிந்தது. (இதே ஜோர்டான் இரண்டே ஆண்டுகளில் அமெரிக்காவின் நெருக்கடிக்குப் பணிந்து ஹமாஸ் தலைவர்களை நாடு கடத்தியது. அவர்கள் வேறு வழியின்றி சிரியா சென்றனர்.)
ஷேக் அகமது யாசின் (Sheikh Ahmed Yassin)
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு காஸா திரும்பிய யாசினுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நீடிக்கும்வரை ஹமாஸின் தாக்குதல் நீடிக்கும்.
நாங்கள் அமைதியை வேண்டுகிறோம், அமைதியை நேசிக்கிறோம். பாலஸ்தீனர்கள் அமைதியான வழியில் எங்கள் உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு இஸ்ரேல் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார் யாசின்.
ஆனால், பாலஸ்தீன நிலத்தில் ரத்தம் சிந்துவது நிற்கவில்லை. 2004-ம் ஆண்டு காஸாவில் தொழுகைக்குச் சென்றபோது யாசினை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொன்றது இஸ்ரேல்.
அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி உருவாக்கப்பட்டபோதே, அங்கு தேர்தல்கள் மூலம் அரசு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இஸ்ரேலின் அதிகாரத்துக்கு உட்பட்ட சுயாட்சிப் பகுதி என்றாலும், பாலஸ்தீனத்துக்கு ஓர் அதிபர் உண்டு, சட்டமன்றம் உண்டு. ஆரம்ப காலங்களில் நடைபெற்ற அதிபர் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணித்த ஹமாஸ், யாசர் அராபத் மரணத்துக்குப் பிறகு நடைபெற்ற 2006 சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுத்தது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. ஹமாஸை போட்டியிட அனுமதிக்கலாமா என்று நீண்ட விவாதம் நடத்தி, பிறகு அனுமதி கொடுத்தார்கள்.
காஸாவில் இருந்த யூதக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அங்கு வசித்தவர்களை இஸ்ரேல் நிலப்பரப்புக்கு அப்போதுதான் அழைத்திருந்தது இஸ்ரேல் அரசு. அதைத் தங்கள் ஆயுதப் போராட்டங்களின் வெற்றியாக ஹமாஸ் சொல்லிக்கொண்டது.
‘காஸா விடுவிக்கப்பட்டது போல ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் இஸ்ரேல் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்து தேர்தலில் நின்றது. அதேசமயத்தில், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அது சொல்லவே இல்லை.
யாசர் அராபத்
ஹமாஸின் வேட்பாளர் பட்டியலில் பாலஸ்தீன கிறிஸ்தவர் ஒருவரும் இடம் பிடித்திருந்தார். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஹமாஸ் 76 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
அவர்கள் ஆதரித்த நான்கு சுயேச்சைகளும் வென்றார்கள். அராபத்தின் ஃபதா கட்சிக்கு 43 இடங்களே கிடைத்தன.
‘பாலஸ்தீன மக்கள் தவறான கட்சியைத் தேர்வு செய்துவிட்டார்கள் என்று அவர்களை தண்டிக்க வேண்டாம். ஹமாஸுக்கு நிர்வாகம் செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரக நாடு ஆகியவை அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தன. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே பிரதமராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், பாலஸ்தீன சுயாட்சி அரசுக்கு செய்துவந்த நிதியுதவியை அடுத்த மாதமே அமெரிக்காவும் கனடாவும் நிறுத்தின.
மூன்று மாதங்கள் கழித்து ஐரோப்பிய யூனியனும் நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் அதிபராக பொறுப்பு வகிக்கும் ஃபதா கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அப்பாஸ், பல குற்றச்சாட்டுகள் கூறி பிரதமர் பதவியிலிருந்து இஸ்மாயில் ஹனியேவை நீக்கினார்.
இதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் இறந்தார்கள். கடைசியில் காஸா பகுதியை ஹமாஸ் வசப்படுத்த, மேற்குக்கரையின் நிர்வாகத்தை ஃபதா கட்சி ஏற்றது. அதன்பிறகு தேர்தலே நடக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் போலவே ஒரு பொலிட்பீரோவை அதிகார அமைப்பாகக் கொண்டு ஹமாஸ் இயங்குகிறது. இஸ்மாயில் ஹனியே தலைமையில் 15 பேர் கொண்ட குழுவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறது.
காஸா மற்றும் மேற்குக்கரையில் வசிக்கும் பாலஸ்தீனர்களின் பிரச்னைகள், இஸ்ரேல் சிறையில் வாடும் கைதிகள் விவகாரம் என்று எல்லாவற்றையும் இதுதான் கவனிக்கிறது.
இஸ்ஸாம் அல்-டாலிஸ் என்பவரை பாலஸ்தீன சுயாட்சிப் பகுதிக்கான பிரதமராக ஹமாஸ் அறிவித்திருக்கிறது. காஸாவை அவர்தான் நிர்வாகம் செய்கிறார்.
ஹமாஸ் இளைஞர்கள் பயிற்சி முகாம் (File Photo)
அரபு நாடுகளிலும் பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்கும் சேவை அமைப்புகள் பலவும் ஹமாஸுக்கு நிதி திரட்டிக் கொடுக்கின்றன. ஏவுகணைகள் உள்ளிட்ட எல்லா ஆயுதங்களையும் ஈரான் கொடுத்து உதவுகிறது. ஈரானுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கிறது.
ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி இஸ்ரேல் ராணுவம் கொன்றபடி இருக்கிறது. தாக்குதல்களில் தப்பி இப்போது இருக்கும் இந்த அமைப்பின் முக்கியமான சில தலைவர்கள்:
இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh):
தற்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இவர்தான். கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் வசிக்கிறார். காஸாவில் ஓர் அகதிகள் முகாமில் பிறந்தவர்.
காஸாவில் உள்ள இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்கப்பட, அதில் சேர்ந்தார்.
பிற்காலத்தில் அதே பல்கலைக்கழகத்துக்கு டீன் பொறுப்பில் அவரை நியமித்தது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் தலைவர் யாசினுக்கு நெருக்கமானவர்.
பலமுறை சிறை சென்றிருக்கிறார். ஒருமுறை நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இவர் கை சேதமடைந்தது.
பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் வென்றபோது பிரதமர் ஆனார். தற்போது ஹமாஸ் நடத்திய தாக்குதலை கத்தாரில் தன் அலுவலகத்தில் இருந்தபடி ஹனியே பார்த்து கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
நீண்ட காலமாக இஸ்ரேல் உளவுத்துறையின் கொலை முயற்சியிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்து வருகிறார் ஹனியே.
மஹ்மூத் அல்-ஜாஹர் (Mahmoud al-Zahar):
ஹமாஸ் அமைப்பை நிறுவிய தலைவர்களில் ஒருவர். பாலஸ்தீனத்தில் ஹமாஸ் ஆட்சி அமைத்தபோது, அதன் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியவர். தற்போது 60 வயதாகும் ஜாஹர், காஸாவில் பிறந்தவர்.
எகிப்தில் மருத்துவம் படித்த அறுவை சிகிச்சை நிபுணர். ஹமாஸ் தலைவர் யாசினுக்கு பர்சனல் டாக்டராக இருந்தவர்.
கடந்த 2003-ம் ஆண்டு இஸ்ரேல் விமானப்படை இவர் வீட்டில் குண்டுவீசியதில் வீடு நொறுங்கியது. ஜாஹர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால், மூத்த மகன் இறந்துவிட்டார். ஹமாஸ் அமைப்பில் இருந்த இன்னொரு மகனும் இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பிறகு பலியானார். தீவிர மத நம்பிக்கையாளரான ஜாஹர், ‘எப்போதும் ஹமாஸ் அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடக்கூடாது’ என்ற நிலைப்பாடு உள்ளவர்.
Also Read
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் 6: ஹமாஸ் வளர்ந்த கதை – சேவை அமைப்பு முதல் ஆயுதக்குழு வரை!