“சென்னை:சென்னை நகர மக்கள் 2015-ம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பை மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.

வங்கக்கடலில் இருந்து சென்னைக்கு மிக அருகே கடந்த சனிக்கிழமை மாலை மிக்ஜம் புயல் நெருங்கி வந்தபோதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கி விட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்தது.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமையும் இடைவிடாமல் 30 மணி நேரத்துக்கு மேல் அடைமழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்ததால் முக்கிய சாலைகள் தவிர தெருக்கள் அனைத்திலும் ஆறு போல வெள்ளம் ஓடியது. இதனால் குடியிருப்புகள் அனைத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக கடைகள் திறக்காததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

கடந்த திங்கட்கிழமை மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. 99 சதவீத மக்களின் இயல் வாழ்க்கையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. போக்குவரத்தும் முடங்கியதால் அனைத்து பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம் மறுநாள் வடிந்து விடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தடவை பெரும்பாலான இடங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.

கடந்த 3 நாட்களாக சென்னையில் சுமார் 1 கோடி பேர் இந்த பாதிப்பை சந்தித்தனர். இன்று 4-வது நாளாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 லட்சம் வீடுகள் இன்னமும் வெள்ளத்தில் சூழ்ந்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த வீடுகளில் சுமார் 50 லட்சம் பேர் சிக்கி உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக பால், குடிநீர், மின்சாரம் இல்லாமல் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மழை தண்ணீர் அவர்களது வீடுகளை சுற்றி பல அடி உயரத்துக்கு தேங்கி நிற்பதால் மீட்பு படையினரும் உடனடியாக செல்ல முடியாத நிலை இன்று காலை வரை நீடித்தது.

பல இடங்களில் படகுகள் மூலம் உணவு, குடிநீர், பால் விநியோகம் செய்யப்பட்டது. என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை சென்று சேரவில்லை. இதனால் இன்றும் 4-வது நாளாக அவர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதையடுத்து தென் சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகம் செய்யும் பணி இன்று காலை நடந்தது.

இதற்கிடையே போலீசார் 9 டிரோன்கள் மூலம் ஆபத்தான நிலையில் யாராவது அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையிலும் மீட்பு பணி நடந்து வருகிறது.

மீட்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவை, நெய்வேலியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் ராட்சத எந்திரங்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் இன்று குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடசென்னையில் மணலி, மணலி புதுநகர், மாத்தூர், பர்மா நகர், இருளர் காலனி, சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்றுடன் 4 நாட்களாக அவர்கள் வெளியில் வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வட சென்னையில் மாநகராட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் வழங்கப்பட்டாலும் தண்ணீர் தேங்கி உள்ள குடியிருப்புக்குள் அவற்றை கொண்டு செல்ல முடியவில்லை.

தென்சென்னையில் தாம்பரம் வரதராஜபுரம் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மண்ணிவாக்கத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாம்பரம் 4-வது மண்டலத்தில் சி.டி.ஒ. காலனி, குட்வில் நகர், கிருஷ்ணாநகர், சமத்துவ பெரியார் நகர், அஞ்சுகம் நகர், முடிச்சூர் ராயப்பா நகர், விநாயகர் புரம் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இன்று4-வது நாளாக கடுமையாக போராடியும் இந்த பகுதிகளில் வெள்ளத்தை வடிய வைக்க இயலவில்லை.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ராம் நகர், கோவிலம்பாக்கம், பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. அங்குள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாதவரம், செங்குன்றம், புழல், வடகரை, வடபெரும்பாக்கம், விளாங்காடுபாக்கம், கண்ணம்பாளையம், தர்க்காஸ், கோமதியம்மன் நகர் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பகுதி மக்கள் தண்ணீருக்குள் இருக்கிறார்கள்.

இப்படி 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதுபோல அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளூர் மீட்பு படையுடன் இணைந்து இன்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அடுக்குமாடிகளில் இருப்பவர்கள் மொட்டை மாடிக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். செல்போன் இல்லாததும், பால், குடிநீர் இல்லாததும் அவர்களை வாட்டி வதைத்தபடி இருக்கிறது. வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்றும் பணிகள் முடிவடைய இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் 3 நாட்கள் ஆகலாம்.80 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தண்ணீர் வடிந்த பகுதிகளில் தொடர்ந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவிகள் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர்.”,

 

Share.
Leave A Reply