தலை­வர்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தில்லை, உரு­வா­கி­றார்கள். அதுவே உலக மரபு. ஆனால், தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து ஒரு தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்கு சிலர் முயன்­றி­ருக்­கின்­றனர்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் துவா­ரகா என்ற அறி­மு­கத்­துடன், வெளி­யி­டப்­பட்ட காணொளி ஒன்று, சில நாட்­க­ளாக சமூக ஊட­கங்­களில் விவா­தங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

சிலர் அதனை சிலா­கிக்­கின்­றனர். பலர் வெறுப்பை உமிழ்­கின்­றனர்.

பிர­தான ஊட­கங்கள் இந்தக் காணொ­ளி­யையோ அந்த உரையில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­க­ளையோ பெரி­தாக கணக்கில் எடுத்துக் கொள்­ள­வில்லை.

ஏனென்றால், இது ஏற்­கெ­னவே ஊகிக்­கப்­பட்ட ஒன்று.

மாவீரர் நாளன்று துவா­ர­காவின் உரையை செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி வெளி­யி­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு புல­னாய்வு அமைப்­புகள் பாது­காப்பு அமைச்­சுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக சில நாட்­க­ளுக்கு முன்­னரே ஆங்­கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளி­யா­னது.

ஆனால், தங்­க­ளுக்கு அவ்­வா­றான எந்த எச்­ச­ரிக்­கையும் வெளி­நாட்டுப் புல­னாய்வு அமைப்­பு­க­ளிடம் இருந்து கிடைக்­க­வில்லை என்று பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் தான், மாவீரர் நாளன்று, “தேசத்தின் புதல்வி துவா­ரகா பிர­பா­கரன்” என்ற அறி­மு­கத்­துடன் ஒரு காணொளி உரை வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த காணொளி செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பத்­துடன் உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக துறைசார் வல்­லு­நர்கள் சிலர் கூறி­யி­ருக்­கின்­றனர்.

இல்­லை­யில்லை, இந்த உரை நேரில் பதிவு செய்­யப்­பட்­டது தமக்குத் தெரியும் என்று இன்னும் சிலர் கூறு­கின்­றனர்.

துவா­ரகா உயி­ருடன் இருக்­கிறார் என சில காலத்­துக்கு முன்னர் ஒரு தகவல் கசிய விடப்­பட்­டது. இப்­போது, அவர் தான் இவர் என்று ஒரு உருவம் உல­கிற்கு அறி­முகம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

சரி, துவா­ரகா உயி­ருடன் இருந்தால், இது­வரை ஏன் அவர் அமை­தி­யாக இருந்தார்? இப்­போது ஏன் அவர் வெளியில் வர­வேண்டும்?

2009இல் போர் முடி­வுக்கு வந்தபோது, புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் சட­லத்தை அர­சாங்கம் காண்­பித்த போது, அதனை போலி­யா­னது என்றும், அவர் இன்னும் உயி­ருடன் இருக்­கிறார் என்றும் சிலர் நம்ப வைக்க முயன்­றனர்.

பிர­பா­க­ரனின் மர­ணத்தை தமிழ் மக்­களால் ஏற்றுக்கொள்ள முடி­ய­வில்லை என்­பது உண்மை. அதுவே அவர் சாக­வில்லை என்ற பிர­சா­ரத்தின் மீது பலரும் நம்­பிக்கை கொண்­ட­தற்குக் காரணம்.

14 ஆண்­டு­க­ளாக அவர் உயி­ருடன் இருக்­கிறார், மீண்டும் வருவார் என்று கூறிக் கூறியே காலத்தைக் கடத்தி விட்­டனர்.

இனி­மேலும் அந்தப் பருப்பு வேகாது என்று தெரிந்து விட்ட நிலையில் தான், இப்­போது துவா­ர­காவைக் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்­றனர். அவ்­வா­றாயின் இது­வரை கூறப்­பட்டு வந்­தது போல, இனி பிர­பா­கரன் வர­மாட்டார் என்று எடுத்துக் கொள்ள வேண்­டுமா?

இனி, துவா­ர­காவை வைத்து தான் அர­சியல் செய்யப் போகின்­றனர். அதற்­கான முன்­னோடி தான், துவா­ர­கா­வுக்கு தலை­மகள், தேசத்தின் புதல்வி என்ற அடை­மொ­ழிகள்.

துவா­ர­காவின் உரையில், மக்­க­ளுக்­காக போராடப் போவ­தாக கூறப்­பட்­டி­ருக்­கி­றது. அது வர­வேற்­கத்­தக்­கது.

தமிழ் மக்­க­ளுக்­காக, அவர்­களின் உரி­மைகளுக்­காக யாரும் போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கலாம். ஆனால் அவர்கள் எல்­லோரும் தலை­வ­ராகிவிட முடி­யாது. ஏனென்றால், தலை­வர்கள் யாரும் பிறப்­ப­தில்லை. இன்­னொ­ரு­வரால் உரு­வாக்­கப்­ப­டு­வதும் இல்லை. தலை­வர்கள் தாங்­க­ளா­கவே உரு­வா­கி­றார்கள். தங்­களின் செயல்­க­ளினால் தான் அவர்கள் தலை­மைத்­துவ இடத்தை தங்­க­ளுக்­கென்று உரு­வாக்கிக்கொள்­கின்­றனர். பிர­பா­க­ரனை எடுத்துக்கொண்டால், அவர் பெரும்­பா­லான தமிழ் மக்­களால் ஏற்றுக்கொள்­ளப்­பட்ட தலை­வ­ராக இருந்தார்.

அவ­ரது போராட்­டமும், அதில் இருந்த உறு­தியும், அதற்­காக செய்யத் துணிந்த தியா­கமும், தலை­மைத்­துவ ஆற்­றலும் தான் அவரைத் தேசியத் தலைவர் எனக் கொண்­டாடும் நிலைக்கு உயர்த்­தி­யது.

1970களின் தொடக்­கத்­தி­லேயே ஆயுதப் போராட்­டத்தில் இறங்­கிய அவர், சுமார் 15 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் தான், பெரும் தலைவர் என்ற நிலையை அடைந்தார்.

விடு­தலைப் புலி­களின் தலை­வரின் மகள் என்­ப­தற்­காக துவா­ரகா தமி­ழர்­களின் தலை­வ­ராகி விடுவார் என்­றில்லை. அவ்­வா­றா­ன­தொரு வாரிசு அர­சி­யலை நிலை­நி­றுத்த பிர­பா­கரன் முயன்­றதும் இல்லை.

தனக்குப் பின்னால் என்று தன் பிள்­ளை­களை அவர் கைகாட்­ட­வு­மில்லை. அவர் ஒரே ஒரு­முறை தான், தனக்கு பின்­ன­ரான தலை­மையை சுட்­டிக்­காட்­டினார்.

1987ஆம் ஆண்டு இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­துக்கு இணங்க வைப்­ப­தற்­காக இந்­தியா தனது விமா­னப்­படை ஹெலி­கொப்­டரை அனுப்பி, பிர­பா­க­ரனை சுது­ம­லையில் இருந்து அழைத்துச் சென்­றது.

இந்­திய விமா­னப்­படை ஹெலி­கொப்­டரில் ஏறு­வ­தற்கு முன்னர் அவர், தாம் தாயகம் திரும்பும் வரை, மாத்­தயா இயக்­கத்தை வழி­ந­டத்­துவார் என்று கூறி­யி­ருந்தார். மாத்­த­யாவின் விவ­கா­ரத்­துக்குப் பின்னர், அவர் யாரையும் அடுத்த தலை­வ­ராக கைகாட்ட விரும்­ப­வில்லை.

அவ்­வாறு தனது குடும்­பத்­தி­னரை முன்­னி­லைப்­ப­டுத்த அவர் விரும்­பி­யி­ருந்தால், அவர்­களை பிர­பா­கரன் மக்கள் முன் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருப்பார்.

சாள்ஸ் அன்­ர­னியின் செயற்­பா­டுகள் மட்டும் இயக்­கத்தில் ஓர­ள­வுக்கு வெளிப்­ப­டை­யாக இருந்­த­னவே தவிர, துவா­ரகா அல்­லது பாலச்­சந்­திரன் வெளி­யு­ல­கிற்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எனவே பிர­பா­க­ரனின் அடை­யா­ளத்தை வைத்துக் கொண்டு, துவா­ர­காவை தலை­மகள் என்று அறி­மு­கப்­ப­டுத்­து­வது அபத்தம்.

பிர­பா­க­ரனின் மகள் என்­ப­தற்­காக அவர், தலை­வ­ராகி விட முடி­யாது. அதற்­கான தகை­மையும், தலை­மைத்­துவ ஆற்­றலும், அர்ப்­ப­ணிப்பும், அவ­சியம்.

பிர­பா­க­ர­னுக்கு இருந்த ஜன­வ­சீ­கரம், நடை­யிலும், உரை­யிலும் காணப்­படும் கம்­பீரம், பேச்சில் இருக்கும் தெளிவு எல்­லாமே, தலை­மைத்­து­வத்­துக்­கான பண்­பு­க­ளாக வெளிப்­பட்­டன.

அவற்றில் எதை­யுமே, துவா­ர­காவின் உரையில் காண முடி­ய­வில்லை.

செயற்­கை­யாக உரு­வாக்­கப்­பட்ட ஒரு உரு­வத்­தி­னாலோ, தலை­மை­யிலோ அவ்­வா­றான பண்­பு­களை ஒரு­போதும் வெளிப்­ப­டுத்த முடி­யாது.

உயிர்ப்­பற்ற – வெறும் வார்த்­தை­களால் தலை­மைத்­து­வத்தைக் கட்­டி­யெ­ழுப்­பவும் முடி­யாது. அதற்­கென ஒரு வசீ­கரம் இருக்க வேண்டும். ஈர்ப்பு வர வேண்டும்.

துவா­ர­கா எனக் கூறப்படுபவரின் இந்த வெளிப்­ப­டுத்தல், தமி­ழர்­க­ளுக்­கென ஒரு தலை­மையை உரு­வாக்கும் நோக்கம் கொண்­ட­தல்ல.

அவ்­வா­றான நோக்­கத்தைக் கொண்­டி­ருந்தால், இந்த வெளிப்­ப­டுத்­தலில் அதிக கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்கும். பிர­பா­க­ரனின் மாவீரர் நாள் உரையும் சரி, அவ­ரது படங்கள் வெளி­யி­டப்­படும் போதும் சரி, புலிகள் மிக கவ­ன­மாக இருப்­பார்கள்.

தலை­மைத்­துவ ஆற்­ற­லுக்கு பங்கம் ஏற்­ப­டுத்தக் கூடிய விதத்­தி­லான படங்­க­ளையோ, வீடி­யோக்­க­ளையோ புலிகள் ஒரு போதும் வெளி­யிட்­ட­தில்லை.

ஆனால், துவா­ரகா எனக் கூறப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட காணொ­ளியில் அத்­த­கைய எந்த நேர்த்­தியும் இல்லை. உரையில் கூறப்­பட்ட விட­யங்­களில் இருந்த கனதி, உச்­ச­ரிப்பில் இருக்­க­வில்லை.

14 ஆண்­டுகள் மறைந்­தி­ருந்த ஒருவர், வெளியே வரும் போது, ஆற்­ற­லுள்­ளவர் என எடுத்த எடுப்­பி­லேயே, கணிக்­கத்­தக்க ஒரு­வ­ரா­கவே வெளி­வந்­தி­ருக்க வேண்டும்.

14 ஆண்­டு­க­ளாக அவரை தலை­வ­ராக உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால், புடம் போடுதல் மிகத் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும்.

ஆனால், துவா­ரகா என்ற பெயரில் வெளிக் கொண்டு வரப்­பட்ட உருவம், அந்தப் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் முயற்சி மாத்­தி­ரமே.

எதற்­காக துவாகா இப்­போது வெளியே கொண்டு வரப்­பட்­டி­ருக்­கிறார்? இது முக்­கி­ய­மான கேள்வி.

2009இல் விடு­தலைப் புலிகள் இயக்கம் அழிக்­கப்­பட்ட பின்னர், தமிழர் மத்­தியில் ஒரு பெரிய வெற்­றிடம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இந்தக் கால­கட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த அர­சியல் தீர்வும் கிட்­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் சிதை­வ­டைந்து போய் விட்­டது.

தமிழ் மக்­க­ளுக்குச் சரி­யான தலை­மைத்­துவம் இல்லை என்ற கவலை மக்கள் மத்­தியில் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

பிர­பா­க­ரனின் தேவையை முன்­னெப்­போதும் இல்­லா­த­ள­வுக்கு மக்கள் இன்று உணர்­கி­றார்கள். பல­மான ஒரு தலை­மைத்­துவம் தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும் என்ற கருத்து வலுப்­பட்டு வரு­கி­றது.

இத்­த­கைய தரு­ணத்தில் தான் துவா­ரகா என்ற பெயரில் ஒரு தலை­மைத்­து­வத்தை அறி­மு­கப்­ப­டுத்த முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

இதற்கு என்ன காரணம், இதனால் யாருக்கு என்ன இலாபம்?

பலரும் இதனை புலம்­பெயர் தமி­ழர்கள் சிலரின் வேலை என்று நம்­பு­கி­றார்கள். இன்னும் சிலர் இது இந்­திய அல்­லது இலங்கைப் புல­னாய்வு அமைப்­பு­களின் சதி என்­கி­றார்கள்.

பிர­பா­க­ரனின் மர­ணத்தை உறுதி செய்­யாமல், அவர் உயி­ருடன் இருக்­கிறார் எனக் கூறி, ஒரு கும்பல் புலம்­பெயர் மக்­க­ளிடம் நிதி வசூல் செய்­வ­தாக தொடர்ச்­சி­யாக ஒரு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வந்­தது.

இப்­போது, துவா­ர­காவை வைத்து அவர்கள் நிதி திரட்ட முனை­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்டு கூறப்­ப­டு­கி­றது.

இது வெறு­மனே நிதி திரட்­டு­வ­தற்­கான வேலை அல்ல. அது­மட்­டு­மன்றி இது தனியே புலம்­பெயர் தமி­ழர்கள் சிலரின் கைங்­க­ரி­யமும் அல்ல.

அதற்கு அப்­பாலும், சில மறை­க­ரங்கள் இதற்குப் பின்னால் இருக்­கின்­றன.

அவர்­களின் இலக்கு, தமிழ் மக்­களை நிரந்­த­ர­மாக குழப்ப நிலைக்குள் வைத்­தி­ருப்­பது தான்.

கடந்த 14 ஆண்­டு­க­ளாக அவர்கள் பிர­பா­கரன் இருக்­கி­றாரா இல்­லையா என்ற விவா­தத்தை உரு­வாக்கி, அதனை வெற்­றி­க­ர­மாக செய்து கொண்­டி­ருந்­தனர்.

பிர­பா­கரன் வருவார், மீண்டும் போராட்­டத்தை முன்­னெ­டுப்பார் என்று நம்பி நம்­பியோ பலர், அமை­தி­யாக இருந்து விட்­டனர். அடுத்த கட்டம் பற்றிச் சிந்­திப்­ப­தற்கு அவர்கள் முனை­ய­வில்லை.

அந்த நிலையை தொடர்ச்­சி­யாகப் பேணு­வ­தற்கு இப்­போது துவா­ரகா தேவைப்­பட்­டி­ருக்­கிறார்.

துவா­ரகா என்ற கற்­பனை தலை­மையை உலாவ விடு­வதன் மூலம், அவர்கள் தமி­ழர்­க­ளுக்­கான ஒரு வலு­வான, ஆற்­ற­லுள்ள தலைமை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வதை தடுக்க முற்­ப­டு­கி­றார்கள்.

இதன் மூலம் அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளையும் அடி­மைப்­ப­டுத்­தவும், தமி­ழர்­களை ஒன்­று­ப­டாமல் கூறுகளாக்கி வைத்திருக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள்.

தமிழர்களுக்கு வலுவான தலைமை தேவை என்ற உணர்வை இல்லாமல் செய்வது இன்னொரு தலைமை கட்டியெழுப்பப்படுவதை சிக்கலுக்குள்ளாக்கும்.

அதனைத் தான் துவாரகாவின் மூலம் அதனைச் செய்ய முயன்றிருக்கின்றனர். இதன் மூலம் தமிழர்களை குழப்பி- பிளவுபடுத்தி ஒன்றுபட முடியாமல் செய்ய முற்படுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் கமல் குணரட்ண வெளியிட்ட கருத்து ஒன்று முக்கியமானது.

“பிரபாகரனின் போராட்ட முறை தவறாக இருக்கலாம், ஆனால் அவர் தனது கொள்கைக்காக உண்மையாக போராடினார், அதற்காகவே அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் அர்ப்பணித்தார், பிரபாகரனின் மகிமையை கெடுத்து விடாதீர்கள் என்று, புலம்பெயர் தமிழர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

எதிரியும் மதிக்கும் தலைவராக இருந்தவர் பிரபாகரன். அவ்வாறான ஒருவரை, அவரது குடும்பத்தினரை வைத்து சிலர் ஈனப் பிழைப்பு நடத்த முனைகின்றனர்.

துவாரகா என்ற பெயரில் வெளிப்படுத்தப்பட்ட உரை அதனைத் தான் உறுதி செய்கிறது.

-என்.கண்ணன்-

Share.
Leave A Reply