அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலுக்கும் – ஹமாஸிற்குமான போராக உருவெடுத்து நடந்து வருகிறது.
இரண்டு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இறுதியில் பாலத்தீனப் பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வைத் தருமா?
இஸ்ரேல் மற்றும் பாலத்தீன மக்களுக்கு தனித்தனி நாடுகளை உருவாக்குவதற்கான முழக்கமான இரு நாடுகள் ஃபார்முலாவை ஆதரிப்பவர்கள், இப்போது நடந்து வரும் போர் தங்களது கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இரு நாடுகள் கோட்பாடு, 1967ல் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கோட்டிற்கு அப்பால் உள்ள பகுதிகளான மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளைக் கொண்டு சுதந்திரமான பாலத்தீன அரசை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.
அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையை அடைந்து, இஸ்ரேலுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே ‘அமைதியின் புதிய தொடக்கத்தை’ அறிவித்தார்.
“கால் நூற்றாண்டு காலமாக, நிபுணர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் கருத்துகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்,” என்று நேதன்யாகு கூறினார். மேலும் அவர் கூறுகையில், “எதிர்கால பாலத்தீனத்தின் நிலம் ஜோர்டானுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் இருக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர்களால் கூறப்பட்டது. ஆனால் இந்த அணுகுமுறையால் இதுவரை ஒரு சமாதான உடன்படிக்கையை கூட அடைய முடியவில்லை.” என அவர் தெரிவித்தார்
நேதன்யாகு கூறுகையில், “2020-இல் நான் முன்வைத்த திட்டம் மிக விரைவாக எங்களை மிகப்பெரிய வெற்றிக்கு இட்டுச் சென்றது. நான்கு மாதங்களில் அரபு நாடுகளுடன் நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்.” என அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்கள், ஆபிரகாம் உடன்படிக்கைகள் என்று அழைக்கப்படும் ஒப்பந்தங்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் அதன் இஸ்ரேலிய-பாலத்தீன அமைதி முயற்சிகள் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகும். ஆனால் இந்த உடன்படிக்கைகள் அமெரிக்காவால் செய்யப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களின் அதே விதியை சந்தித்தன.
2020ஆம் ஆண்டு போடப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தங்கள்
செப்டம்பர் 15: இஸ்ரேல் – ஐக்கிய அரவு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் – பஹ்ரைன் இடையே உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தம்
22 டிசம்பர்: இஸ்ரேலுக்கும் மொரோக்கோவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தம்
டிசம்பர் 24: இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் இடையிலான உறவுகலை சீராக்குவதற்கான ஒப்பந்தம்
முந்தைய அரபு – இஸ்ரேல் ஒப்பந்தங்கள்
மார்ச் 26, 1979: எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம்
13 செப்டம்பர் 1993: இஸ்ரேல் மற்றும் பிஎல்ஓ அமைப்பிற்கும் இடையிலான ஒஸ்லோ 1 ஒப்பந்தம்
26 அக்டோபர் 1994: இஸ்ரேல் – ஜோர்டன் இடையிலான அமைதி ஒப்பந்தம்
24 செப்டம்பர் 1995: ஒஸ்லோ 2 ஒப்பந்தம் (இஸ்ரேல் – பிஎல்ஓ)
நெதன்யாகு குறிப்பிட்ட அந்த 4 ஒப்பந்தங்களும் பாலத்தீனர்களை இஸ்ரேலை அழிக்கும் கற்பனை எண்ணத்தை கைவிட்டு அமைதிப் பாதையில் அவர்களை செல்ல வைக்கும் என அவர் தெரிவித்தார்.
பின்னர் அந்த ஐநா கூட்டத்தில் அவர் ஒரு “புதிய மத்திய கிழக்கின்” வரைபடத்தைக் காட்டினார். இதன் பொருள் பாலத்தீனம் இப்போது சரணடைகிறது, அதனுடன் இரு நாடு தீர்வு கோட்பாடும் முடிவிற்கு வந்துவிட்டது என்பதாகும்.
இதற்கிடையில், கடந்த ஏழு அமெரிக்க ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது பைடன் அரசாங்கம் இஸ்ரேல்-பாலத்தீன பிரச்னையில் குறைவான வேலைகளைச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
பிப்ரவரியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அளித்த அறிக்கையில், இரு நாடுகளின் கோட்பாடு அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீர்த்து வைக்கப்படுவதற்கு வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றியது.
செப்டம்பர் மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் கோட்பாடு குறித்து பேசப்படவில்லை.
இப்போது நிலைமை நிறைய மாறிவிட்டது.
நவம்பர் 3 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறுகையில், “இரு நாடுகள் கோட்பாடு மட்டுமே சாத்தியமான முன்னோக்கி செல்லும் பாதை என்று அமெரிக்கா தொடர்ந்து நம்புகிறது.” எனத் தெரிவித்தார்.
ஆனால் முரண்பாடுகளும் தடைகளும் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அமைதிக்கான வாய்ப்புகளைத் தடுக்கின்றன. இந்த விவகாரம் தற்போது சிக்கலானதாக மாறியுள்ளது.
அமைதிக்கான வாய்ப்புகள் எப்படி குறைந்தன?
யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் தலைமையிலான பாலத்தீன சுதந்திர அமைப்பான பிஎல்ஓவின் ஃபதா பிரிவுக்கு இடையேயான இரு நாடுகள் தீர்வுக்கான திட்டம் 1993 இல் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அங்கீகரித்தபோது வரையப்பட்டது.
ஆனால் ஒஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை அதன் தர்க்கரீதியான முடிவை எட்டவில்லை. மாறாக, முன்பை விட கடினமான பிரச்சனைகளை உருவாக்கியது.
‘அமைதிக்கான நிலம்’ ஒப்பந்தம் இஸ்ரேலிய பிரதேசத்தில் பாலத்தீன அதிகாரத்தின் சுயராஜ்ய ஆட்சியை நிறுவியது. 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றியது இந்தப் பகுதியைத்தான்.
ஆனால், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் யூத குடியேற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தன. மேலும் நிரந்தர அந்தஸ்து தொடர்பான பிரச்சினைகள் சில காலத்திற்கு கிடப்பில் போடப்பட்டன.
1948-ஆம் ஆண்டின் முதல் அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பிறகு இஸ்ரேலின் இருப்பு மற்றும் 1947-இல் பிரிவினைக்கு ஐக்கிய நாடுகள் சபை வாக்களித்த பின்னர் பாலத்தீன அகதிகளின் நிலை பற்றிய பிரச்சினையும் இதில் அடங்கும்.
1967 இல் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இது இரு தரப்பினருக்கும் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதில் இரண்டு தரப்பாலும் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
இறுதியாக, பல வருட வெளியுறவு முயற்சிகளுக்கு பிறகு, இந்த பிரச்சினைகள் 2000 ஆம் ஆண்டில் கேம்ப் டேவிட்டில் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனின் மத்தியஸ்தத்தின் கீழ் விவாதிக்கப்பட்டன. ஆனால் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எஹுட் பராக் மற்றும் பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் அராஃபத் ஆகியோரின் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியவில்லை.
இந்த தோல்விக்கு அனைவரும் மற்றவர்களை குற்றம் சாட்டினர். அத்தகைய நல்ல ஒப்பந்தத்தை அராபத் நிராகரித்ததாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதைவிட சிறந்த சலுகை அவருக்கு கிடைத்திருக்காது என பில் க்ளிண்டன் தெரிவித்தார்.
அராஃபத் பலவீனமான நிலையில் இருந்து பேரம் பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்ரேலுடன் வரலாற்றில் எந்த இரு நாடுகளையும் விட நெருக்கமான உறவைப் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டு நாடுகள் தீர்வை நோக்கி நகர்வதை கடினமாக்கும் பல விஷயங்கள் இருந்தன.
இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ் 1987 இல் காசாவில் உருவானது. அராஃபத்தின் PLO அமைப்பு அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட சில மென்மையான நிலைப்பாடுகள் மற்றும் சலுகைகளுடன் ஹமாஸ் உடன்படவில்லை.
ஒஸ்லோவுக்குப் பிறகு என்ன நடந்தது?
2000 ஆம் ஆண்டில், இரண்டாவது இன்டிஃபதா எனப்படும் பாலத்தீன எழுச்சி வெடித்தபோது, இஸ்ரேலிய அரசியலின் மையம் கணிசமாக வலதுசாரிகளின் பக்கம் மாறியது.
ஒஸ்லோ உடன்படிக்கைக்குப் பின்னால் இஸ்ரேலின் தொழிலாளர் கட்சி ஆதரவைக் கொண்டிருந்தது. ஆனால் படிப்படியாக இந்த கட்சி ஆதரவை இழந்தது. ஆனால் யூத குடியேற்றங்களுக்கான ஆதரவிற்கு மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தது.
அந்த நேரத்தில் வாக்காளர்கள் வலதுசாரி லிக்குட் கட்சியின் தலைவரும் அராஃபத்தின் தீவிர எதிர்ப்பாளருமான ஏரியல் ஷரோனுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஷரோன் மட்டுமே தங்களை சிக்கலில் இருந்து விடுவிக்க முடியும் என்று அவர்கள் உணர்ந்தனர்.
கலகக்கார பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் இராணுவ வலிமையை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் ஷரோனின் அமைச்சரவை இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் உள்ள யூத குடியேற்றங்களை பாலத்தீனர்களிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் இறங்கியது.
அராஃபத் 2004 இல் இறக்கும் வரை பாலத்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமல்லாவிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
காசாவில் வாழும் 1.5 மில்லியன் பாலத்தீனியர்களிடமிருந்து சில ஆயிரம் குடியேறிகளை ஷரோன் பிரித்தார். சுற்றளவில் தனது வீரர்களையும் நிறுத்தினார். மேற்குக் கரையில் தனிமைப்படுத்தப்பட்ட நான்கு குடியிருப்புகளும் வெளியேற்றப்பட்டன.
யூதக் குடியேற்றங்களில் வாழும் மக்களை பாலஸ்தீனர்களிடமிருந்து பிரிக்கும் இந்த செயல்முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிக மக்கள்தொகை கொண்ட பாலத்தீன பிரதேசத்திற்குள் இஸ்ரேலிய பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலிய பெரும்பான்மையினரை பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது.
ஷரோனின் உயர்மட்ட ஆலோசகர் அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளரிடம் ஒரு அரசியல் பேரம் பேசுவதற்கு ‘ஒரு குறிப்பிட்ட அளவு ஃபார்மால்டிஹைட்’ தேவை என்று கூறினார்.
இருப்பினும், ஷரோனின் நடவடிக்கை லிகுட் மற்றும் குடியேற்றங்களைப் பிரித்தவர்களின் ஆதரவாளர்களைப் பிரித்தது. ஷரோன் கவலைப்படவில்லை. 2006 தேர்தலில் வெற்றி பெற, புதிய கட்சியை உருவாக்கினார்.
தேர்தலுக்கு முன்பு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. மேற்குக் கரையிலும் இதேபோன்ற திட்டத்தை அவர் மனதில் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தால், அதை செயல்படுத்துவது குறித்த முடிவை ஷரோன்தான் எடுத்திருப்பார்.
அராஃபத்தின் வாரிசான மஹ்மூத் அப்பாஸ், இது ஒஸ்லோ கோட்பாடுகளை மீறுவதாகக் கூறினார். ஆனால் காசாவின் ஹமாஸ் தலைவர்கள் இந்த நடவடிக்கையை தங்கள் எதிர்ப்பின் வெற்றி என்று பாராட்டினர்.
ஆனால் எகிப்தின் ஒத்துழைப்போடு இஸ்ரேல் காஸாவில் முற்றுகையை வலுப்படுத்தியது மற்றும் வன்முறை தொடர்ந்தது. தீவிரவாதிகள் தாக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் தரப்பிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசத் தொடங்கின. மறுபுறம், பாலஸ்தீன கிளர்ச்சியை ஒடுக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நாடியது.
ஆனால் இதற்கிடையில், மேற்குக் கரையில் ஹமாஸ் வேகமாக வளர்ந்து வந்தது.
2006 இல், ஃபத்தாஹ் அரசியல் கட்சி மீது வாக்காளர்கள் ஏமாற்றமடைந்ததால், பாலத்தீனிய அதிகாரசபை தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மையைப் பெற்றது. அவர்களின் பார்வையில், ஃபத்தா பாலத்தீன சுதந்திரத்தையும் ஊழலற்ற நிர்வாகத்தையும் வழங்கத் தவறிவிட்டது.
பாலத்தீன உறுதிமொழிகளுக்குக் கட்டுப்படுமாறும் வன்முறையை கைவிட்டு இஸ்ரேலை அங்கீகரிக்கவும் சர்வதேச அழுத்தம் ஹமாஸ் மீது விழத் தொடங்கியது. இதற்கு ஹமாஸ் தயாராக இல்லை.
ஹமாஸ் பாலத்தீன அதிகார சபையை காஸாவிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியது. இது ஃபத்தாவின் நிர்வாகத்தில் இருக்கும் மேற்குக் கரையிலிருந்து காஸாவை பிரித்தது.
ஹமாஸின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், எதிர்வரும் நாட்களில் அது அரசியல் தீர்வை நோக்கித் திரும்பலாம் எனக் கூறப்படுகிறது.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வாய்ப்பையும், 1967 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒரு பிரதேசத்தை நிறுவுவதற்கான ஆலோசனையையும் அது உள்ளடக்கியிருக்கலாம்.
ஆனால் மேற்குக்கரையில் யூத மக்கள்தொகை மற்றும் எல்லையை விரிவுபடுத்தும் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று ஹமாஸ் தனது சாசனத்தை மாற்றவில்லை.
காலப்போக்கில், காசாவில் இஸ்ரேலின் கண்காணிப்பு இல்லாததை ஹமாஸ் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதன் இராணுவத் திறனை விரைவாக வளர்த்துக் கொண்டது. இதற்காக லெபனானின் ஹெஸ்புலாவின் உதவியை ஹமாஸ் பெற்றது.
தற்போது உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலை என்ன?
அக்டோபர் 7ம் தேதியும் அதன் விளைவுகளும் நீண்டகாலமாக நீடித்து வரும் இஸ்ரேல்-பாலத்தீன மோதலை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் இதன் காரணமாக பல விஷயங்கள் இப்போது கவனத்திற்கு வந்துள்ளன.
காஸா பகுதியில் உள்ள தனது குடிமக்களுக்கு என்ன நடந்தாலும், ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் தரப்பில் பரவலான ஒருமித்த கருத்து உள்ளது.
நெதன்யாகுவின் வலதுசாரி ஆதரவாளர்கள் காசாவின் மக்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு ஆதரவாக உள்ளனர். பாலத்தீனத் தரப்பு அதை இன்னொரு நக்பாவாகப் பார்க்கிறது.
நக்பா என்பது “பேரழிவு” என்பதற்கான அரபு மொழியாகும், இது 1947 இன் பிற்பகுதியிலிருந்து 1949 இன் முற்பகுதி வரை சுமார் ஏழு மில்லியன் பாலத்தீனியர்கள் இஸ்ரேலாக மாறும் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தைக் குறிக்கிறது.
நெதன்யாகுவின் கொள்கைகள் நிறவெறி அரசுக்கு இட்டுச் செல்கின்றன என்று இஸ்ரேலில் உள்ள இடதுசாரிகள் அஞ்சுகின்றனர். ஹமாஸை அகற்றுவது ஹமாஸ், பாலத்தீன அதிகாரம் மற்றும் இஸ்ரேல் போன்ற மூன்று அமைப்புகளுக்கு பதிலாக இரண்டு அமைப்புகளுக்கு இடையே மோதல் சூழ்நிலையை உருவாக்கும். அப்போது இஸ்ரேலும் ஹமாஸும் மட்டுமே எஞ்சும். இதன் மூலம் இரண்டு நாடுகளின் கோட்பாடு மீண்டும் முன்னுக்கு வரும்.
எழுத்தாளரும் முன்னாள் தொழிலாளர் கட்சி ஆதரவாளருமான ஆபிரகாம் பெர்க் பிபிசியிடம் பேசுகையில், இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் உண்மையான அதிர்ச்சியிலிருந்து மீள நேரம் தேவை என்று கூறினார். ஆனால் இறுதியில் அவர்கள் இரு நாடுகளின் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இதுதான் வன்முறையை தடுக்க ஒரே நிரந்தர தீர்வு.
“நீண்ட கால அமைதியை உறுதிப்படுத்தும் எந்த அரசியல் சூத்திரம் வெளிப்பட்டாலும், பெரும்பாலான இஸ்ரேலியர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்,” என்று அவர் கூறினார்.
காஸா மீதான இராணுவ நடவடிக்கையின் விளைவுகளை பாலத்தீனர்கள் எதிர்கொள்கின்றனர். மேற்குக் கரையில் அவர்கள் அங்கு குடியேறிய யூதர்களுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தையும் வன்முறையையும் எதிர்கொள்கிறார்கள். அதை டிவியிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களை உருவாக்குகிறது.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை காஸா மற்றும் மேற்குக் கரையில் வாழும் பாலஸ்தீனியர்கள் மீது அரபு உலக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (AWRAD) நடத்திய ஆய்வின்படி, இரு நாடு தீர்வுக்கான ஆதரவு பங்கேற்பாளர்களில் 68 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது.
அடுத்தது என்ன?
பாலத்தீனர்கள் தங்களது கோரிக்கைகளுக்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதையும் கவனத்தில் கொள்வார்கள்.
ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கணக்கெடுப்பில், முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும் போது இளம் அமெரிக்கர்களிடையே இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்து வரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
இந்த விஷயத்தில் அமெரிக்கா நடுநிலையான மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என்று 40 சதவீத இளைஞர்கள் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர்.
2023ல் நடந்த நிகழ்வுகள் இஸ்ரேலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்குமா என்பதை இப்போதே கணிக்க முடியாது.
எவ்வாறாயினும், அமைதியைக் கோரும் பாலஸ்தீனர்களுக்கு வெளிப்படையான அமைதியான பேச்சுவார்த்தையை தவிர வேறு வழி இல்லை.
இதுபோன்ற மோதல்களைத் தீர்ப்பதில் வல்லுனரான இரிகாட் கூறுகையில், “சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிறார்.
மேலும், “இஸ்ரேலின் எல்லைகளைத் தீர்மானிக்கும் மற்றும் அதன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு நடவடிக்கை தேவை. உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் சமாதான முன்னெடுப்புகள் பற்றிய அதே அமெரிக்க கருத்துகளை தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
முடிவில்லாமல் தொடரும் இஸ்ரேல் – பாலத்தீனம் பிரச்னைக்கு ஒரே தீர்வு ‘இரு நாடுகள் கோட்பாடு’ என்ற அந்த பழைய பார்முலாதான் என்கிறார் அவர்.
பிபிசி தமிழ்