மாவீரர் நாளை தடை செய்வதற்கு வடக்கு கிழக்கு முழுவதும், பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து, நீதிமன்றங்கள் அதற்கு ஒத்துழைக்காத போதும், தம்மால் இயன்றளவுக்கு குழப்பங்களை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவேந்தல் உரிமை பற்றி வெளியிட்டிருக்கும் கருத்து நகைப்புக்கிடமான ஒன்றாகவே உள்ளது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்க முடியாது என்று அவர் சிங்கள ஊடகத்துக்குக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க இதற்கு முன்னரும் பலமுறை தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை மறுக்க முடியாது என்றும், அதனை தடை செய்ய முடியாது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அவரது அரசாங்கத்தில், மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்வதற்கு உச்சபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலையும், தியாகதீபம் திலீபன் நினைவேந்தலையும் இவ்வாறு தான் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தடுக்க முயன்றது.
வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்கள், மாவீரர் நாளுக்கு தடைவிதிக்க கோரி நீதிமன்றங்களை நாடியிருந்தன.
அவற்றில் சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாத்திரம் 17 பேருக்கு நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டது.
அந்த தடையை நீக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அதனை காரணமாக வைத்து, சம்பூர் – ஆலங்குளம் துயிலுமில்லத்தில், மாவீரர் நாள் நிகழ்வுகளை பொலிஸார் முழுமையாகத் தடுத்தனர்.
அதுபோலவே அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்திலும், மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை பொலிஸார் தடுத்தனர்.
மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களையோ, அடையாளங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றே நீதிமன்றங்கள் கூறியிருந்தன.
கார்த்திகை பூ உள்ளிட்ட சின்னங்களை பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் தடுக்கவில்லை.
ஆனாலும், கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பொலிஸார் தீவிரமாக முயற்சித்தனர். வடக்கிலும் கூட அலம்பில் உள்ளிட்ட இடங்களில் பொலிஸ் கெடுபிடிகள் காணப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவேந்தல் உரிமையைப் பற்றிப் பேசுகிறார். அதனை மதிப்பது போல கருத்து வெளியிடுகிறார்.
ஆனால், அவரது கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸார், மாவீரர் நினைவேந்தல்களை தடுக்க முற்படுகின்றனர்.
இந்த இரட்டைப் போக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
ஆட்சியில் உள்ள அரசாங்கம், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மதிப்பதாக இருந்தால், பொலிஸாரின் இவ்வாறான செயற்பாட்டை தடுத்திருக்க வேண்டும். பொலிஸாருக்கு கொம்பு சீவி விட்டு, அரசாங்கம் நல்ல பிள்ளை போல நடிக்கிறது. இந்த இரட்டை வேடம் தான், தமிழர்களால் காலம் காலமாக வெறுக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க எப்போதும், தமிழர்களுடன் இந்த இரட்டை வேடத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.
அவர் விடுதலைப் புலிகளுடன் சமாதானம் பேசிக் கொண்டே, அவர்களை கருவறுக்கும் பலமுனைத் திட்டத்தை செயற்படுத்தினார்.
ஒரு பக்கத்தில் கருணாவைக் கொண்டு புலிகளைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தினார். இன்னொரு பக்கத்தில், புலிகளுக்கு எதிராக சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கினார். மற்றொரு பக்கத்தில், பேச்சுக்களைத் தொடங்கி விட்டு, அதனை தொடராமல் முடக்கினார். தீர்வைத் தருவதாக கூறி அங்குமிங்கும் அலைக்கழித்து விட்டு, புறங்கையை காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த வஞ்சகச் செயற்பாடுகளால் தான், 2005 ஜனாதிபதி தேர்தலில் அவரைத் தோற்கடிப்பதற்குப் புலிகள் தீர்மானித்தனர். இதனால் அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கச் செய்தனர். தமிழர் தரப்புடன் ரணில் விக்கிரமசிங்க நேர்மையாகவோ இதய சுத்தியுடனோ பேச்சுக்களை முன்னெடுத்திருக்கவில்லை.
அவர் இப்போதும் மாறவில்லை. அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் போவதாக கூறுகிறார். தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்க முடியாது என்றும் கூறுகிறார்.
ஆனால், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்கவும் இல்லை, அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுமில்லை.
அவரைக் கேட்டால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுகிறேன் என்கிறார். விரைவில் பேசி அரசியல் தீர்வை கொண்டு வருவேன் என்கிறார்.
ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க ஒரு அங்குலம் கூட முன்நோக்கி நகரவில்லை.
அதுபோலத் தான் நினைவேந்தல் உரிமையை மறுக்காதவர் போலக் காட்டிக் கொண்டாலும், அரசாங்கம் மாவீரர் நினைவுகூரலைத் தடுக்க பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவினால், பொலிஸாரைக் கட்டுப்படுத்த முடியாதா? அவரது கட்டளையை பொலிஸ் ஏற்றுக் கொள்ளாதா?
பொலிஸாரின் நடவடிக்கைகளில் தாம் தலையிடவில்லை என்று ஜனாதிபதியினால் கூற முடியாது.
ஏனென்றால் அவரது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணாக பொலிஸாரால் செயற்பட முடியாது, அரசாங்கத்தின் கொள்கை பொலிஸாரால் மீறப்படுகின்ற போது, அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு அதனை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது.
அதேவேளை, பொலிஸ் மற்றும் நீதித்துறைகளின் சுதந்திரத்தில் தாம் தலையிடவில்லை என்ற காரணத்தையும் ஜனாதிபதியினால் முன்வைக்க முடியாது.
ஏனென்றால், பொலிஸ் மா அதிபர் நியமன விடயத்தில் ஏற்படுத்தி வருகின்ற குழப்பங்கள், அரசாங்கத்தின் கேலிக்கூத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. பொலிஸ் திணைக்களத்தை சுயாதீனமாக செயற்பட இடமளிப்பவராக இருந்தால், இவ்வாறான நிலை தோற்றம் பெற்றிருக்காது.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது.
இவ்வாறான நிலையில் பொலிஸ் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் தலையீடு செய்யாமல் இருப்பதற்காகவே, ஜனாதிபதி ரணில் மாவீரர் நாள் நிகழ்வுகள் விடயத்தில் அவற்றின் நடவடிக்கைகளை தடுக்காமல் இருந்தார் என்ற காரணத்தை முன்வைக்க முடியாது.
தனது அதிகாரத்தைக் கொண்டு, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்க, எவ்வாறு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கப் போகிறார்?
நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்தும் முழு அதிகாரம் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவிடம் இருக்கிறது.
அவரால் தனது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும்.
அந்தக் கட்டளைகளை முப்படைகளினால் கூட மீற முடியாது. ஆனால் அத்தகைய கட்டளைகளை அவர் பிறப்பிக்கவுமில்லை, பிறப்பிக்கப் போவதுமில்லை.
அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள நிறைவேற்று அதிகாரம் கூடப் போதாது. அதற்கு பாராளுமன்றத்தில் அவருக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் ஊடாகவே அரசியல் தீர்வுக்கு அங்கீகாரத்தையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையையும் பெற்றுக் கொள்ள முடியும். ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ள ஒற்றை உறுப்பினரை வைத்துக் கொண்டு அவரால் அதனைச் சாதிக்க முடியாது.
அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு அவர் பொதுஜன பெரமுனவையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியிடமோ கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்.
யதார்த்தம் இவ்வாறுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு, நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த முடியாதவரா அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க போகிறார்?