இலங்­கை–­இந்­திய ஒப்­பந்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா அதி உச்ச தலை­யீட்டை மேற்­கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு அர­சியல், சிவில், புலம்­பெயர் தரப்­பினர் கூட்­டாக இந்­தியத் தலை­நகர் புது­டில்­லியில் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

தமி­ழர்­க­ளுக்­கான அர்த்­த­முள்ள நிரந்­தரத் தீர்­வினை வழங்­கு­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்கு இந்­தியா வகி­பாகம் அளிக்­க­வேண்­டு­மென்றும் மாகா­ண ­ச­பை­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­ப­டா­துள்­ள­மை­யினால் தற்­கா­லிக ஏற்­பா­டாக இடைக்­கால நிர்­வாக சபையை ஸ்தாபிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­ வேண்­டு­மெ­னவும் அவர்கள் கோரி­யுள்­ளனர்.

புது­டில்லி சென்ற இந்த குழுவின் சார்பில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­வரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அங்­குள்ள பத்­தி­ரி­கை­யாளர் சங்­கத்தில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் இந்­தக்­க­ருத்­துக்­களை கூறி­யி­ருக்­கின்றார்.

இங்கு கருத்து தெரி­வித்த சி.வி. விக்­கி­னேஸ்­வரன் ,இலங்­கையில் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் சீன சார்பு நிலையில் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ஆனால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இந்­தி­யாவின் தென்­ப­கு­திக்கு அருகில் உள்­ளன. அத்­தோடு கலா­சார, சமய, மொழி உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளிலும் இந்­தி­யா­வுடன் மிக நெருக்­க­மான தொடர்­பு­களை கொண்­டுள்­ளன.

அந்­த­வ­கையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் இந்­தியா எம்மை ஆத­ரிக்கும் என்ற நிலைப்­பாட்டில் நம்­பிக்­கை­யுடன் உள்­ளனர்.

இந்­திய– இலங்கை ஒப்­பந்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா முழு முயற்சி எடுக்­க­வேண்டும். இதன் மூலமே தமி­ழர்­க­ளி­னதும் இந்­தி­யா­வி­னதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முடியும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இலங்கைத் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காணும் விட­யத்தில் இந்­தியா உரிய பங்­க­ளிப்­புக்­களை வழங்­க­வேண்டும் என்று தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இலங்­கை–­இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழான 13ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் அவர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்த விடயம் தொடர்பில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு கடந்த வருடம் தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து கடி­த­மொன்­றையும் அனுப்­பி­வைத்­தி­ருந்­தனர். அத்­துடன் இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை சந்­தித்து பேசு­வ­தற்­கான விருப்­பத்தை தெரி­வித்து கடி­த­மொன்றை அனுப்­பு­வ­தற்கும் முயற்சி எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த முயற்சி இன்­னமும் கைகூ­ட­வில்லை.

தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி. வி. விக்­கி­னேஸ்­வரன் இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு கடிதம் எழு­தி­யி­ருந்தார்.

இது குறித்து தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளி­டையே கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஆனால் பிர­தமர் மோடியை சந்­திப்­ப­தற்கு சந்­தர்ப்பம் தரக்­கோரும் இந்தக் கடிதம் இன்­னமும் அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தில் சில தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் தலை­மைகள் முரண்­பட்­டுள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக இந்­தி­யாவின் அழுத்­­தத்தின் பேரில் 1987ஆம் ஆண்டு இலங்­கை–­இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தது.

இதன் கீழ் 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் மாகா­ண­சபை முறைமை அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இந்த மாகா­ண­சபை முறை­மையை இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான அடிப்­ப­டை­யாக கொள்­ளலாம் என்­பதே தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் நிலைப்­பா­டாக உள்­ளது.

இத­னால்தான் 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தி மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான முழு அதி­கா­ரத்­தையும் வழங்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால் அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள 13ஆவது திருத்தச் சட்­டத்தைக் கூட முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தெற்கின் தலை­மைகள் தயா­ராக இல்லை.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் பத­வி­யேற்­ற­யை­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று அறி­வித்­தி­ருந்தார். 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­துவேன் என்றும் உறுதி வழங்­கி­யி­ருந்தார்.

இவ்­வாறு உறுதி வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து 13 ஆவது திருத்­தத்­துக்கு எதி­ராக பெளத்த பீடா­தி­ப­திகள் போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­தனர்.

13ஆவது திருத்தச் சட்ட நகலை பெளத்த பிக்­குகள் ஆர்ப்­பாட்டம் நடத்தி எரி­யூட்­டி­யி­ருந்­தனர். இவ்­வா­றான எதிர்ப்­புக்கள் கார­ண­மாக தற்­போது 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் கூட இழுத்­த­டிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இத­னால்தான் இலங்­கை–­இந்­திய ஒப்­பந்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இந்­திய மத்­திய அர­சாங்கம் முழு முயற்சி எடுக்­க­வேண்டும் என்று தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­யினர் கோரி­வ­ரு­கின்­றனர். அதன் ஒரு கட்­ட­மா­கவே புது­டில்­லிக்கு விஜயம் செய்­துள்ள வடக்கு, கிழக்கு அர­சியல், சிவில், புலம்­பெயர் தரப்­பினர் இதற்­கான கோரிக்­கையை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர்.

இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தியா அன்­று­தொட்டு இன்­று­வரை ஏதோ ஒரு­வ­கையில் செயற்­பட்டு வரு­கின்­றது.

இறுதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட விட­யத்­திலும் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு இருக்­கின்­றது. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு ­வ­ரு­வ­தற்கு இந்­தியா பேரு­தவி புரிந்­த­தாக அன்­றயை பாது­காப்பு செய­லா­ளரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான கோட்­டா­ப­ய­ ரா­ஜ­பக் ஷ ,முன்னாள் அமைச்சர் பசில் ரா­ஜ­பக் ஷ, முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சேகா ஆகியோர் நேர­டி­யா­கவே தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டுவ­ரு­வ­தற்கு பங்­க­ளிப்­பாற்­றிய இந்­தியா, யுத்­தத்­துக்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு பங்­க­ளிப்பு செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போ­தைய நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மானால் ஆரம்ப கட்­ட­மாக 13ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் அதற்­கான சூழ்­நிலை தெற்கில் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

ஏனெனில் இந்­தி­யா­வுக்கு இலங்கை அர­சியல் தலை­வர்கள் மாறி­மாறி வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருக்­கின்­றனர்.

யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ரா­ஜ­பக் ஷ புது­டில்­லிக்கு விஜயம் செய்து அன்­றைய இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங்கை சந்­தித்து பேசி­ய­போது 13ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் சென்று பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண தயார் என்று அறி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்றே அவ­ருக்கு பின்­வந்த தலை­வர்­களும் இந்­தி­யா­வுக்கு இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தனர்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியும் தன்னை சந்­தித்த முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ரா­ஜ­பக் ஷ, தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரி­டமும் 13ஆவது திருத்தச் சட்­டத்தின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஆனாலும் இது­வ­ரையில் 13ஆவது திருத்தச் சட்­டத்தை கூட முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மாறி மாறி ஆட்­சிக்கு வந்த இலங்கை அர­சாங்­கங்கள் முன்­வ­ர­வில்லை. இத­னால்தான் இந்­தியா உரிய அழுத்­தத்தை கொடுத்து இதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுக்­க­வேண்டும் என்று தமிழ்த் தரப்­பினர் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றனர்.

ஆனால் இந்­திய மத்­திய அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்­தில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு நேர­டி­யாக உரிய அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தாக தெரி­ய­வில்லை. பூகோ­ள ­ரீ­தி­யான விட­யங்­களை கருத்தில் கொண்டு இலங்கை மீது உரிய அழுத்­தங்­களை கொடுக்கும் விட­யத்தில் இந்­தியா பின்­ன­டிப்­புக்­களை மேற்­கொள்­வ­தா­கவே தமிழ்த் தரப்பில் குற்றம் சாட்­டப்­பட்டு வரு­கின்­றது.

வடக்கு,கிழக்கில் தமி­ழர்­களின் பூர்விக நிலங்கள் தொல்­பொருள் என்ற பேரில் சுவீ­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அங்கு ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. பெளத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை காணும் விடயத்தில் அக்கறை செலுத்தாது ஆக்கிரமிப்புக்கள் தொடர்வதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான செயற்பாடாக அமைந்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இந்தியாவானது உரிய அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் இலங்கை– இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தமிழ்த் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகள் முயற்சிக்கின்றன.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது உரிய தீர்மானங்களை எடுத்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

Share.
Leave A Reply