இஸ்ரேல் படை- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால் மீண்டும் போர் தொடங்கி இருப்பதால் தற்போது இஸ்ரேல் இராணுவத்தினர் காசா முழுவதும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
தரை வழியாகவும், வான்வெளி வழியாகவும் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசா நகரம் இனி மேம்படுத்த முடியாத அளவில் கடும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. அந்த நகரமே சின்னாபின்னமாகி விட்டது.
இந்த போரில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலியாகி உள்ளனர. இதுவரை 17,997 பேர் போரில் இறந்து விட்டதாக காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை வலியுறுத்தி வந்த போதிலும் அந்நாடு தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்த 240 பேரில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 105 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீன கைதிகளை அந்நாடு விடுதலை செய்தது.
இந்த சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகின்றனர்.
ஹமாசிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்த பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் பிணைக்கைதிகளை அவர்கள் உயிருடன் பிடிக்க முடியாது என ஹமாசின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் காசாவில் புதிய போர் நிறுத்தம் கொண்டு வரவும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் கட்டார் நாடு ஈடுபட்டு வருகிறது.
ஆனால் ஹமாஸ் எச்சரிக்கையை புறந்தள்ளிவிட்டு காசா மீது இன்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே ஹமாஸ் தலைவருக்காக உயிரை இழக்காதீர்கள். சரணடையுங்கள் என ஹமாஸ் அமைப்பினருக்கு நெதன்யாகு எச்சரித்துள்ளார்.