“போர் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஹமாஸின் முடிவுக்கான தொடக்கம்தான் இது.” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கடுத்த நாளிலிருந்து இன்றுவரை பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல்.
பாலஸ்தீனத்தின் காஸாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்தப் போரில், கிட்டத்தட்ட 18,000 பாலஸ்தீனர்கள் இறந்திருக்கின்றனர்.
அதேசமயம், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் இஸ்ரேலியர்களை விடுவித்தால் போரைக் கொஞ்சம் நிறுத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்
அதன்படி, தாங்கள் பிடித்துவைத்திருந்த 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபர்களை ஹமாஸ் விடுவித்துக்கொண்டிருந்த வரை இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்திவைத்தது.
ஹமாஸ் இன்னும் முழுமையாக பணயக் கைதிகளை விடுவிக்காததாகக் கூறப்படும் நிலையில், ஹமாஸை ஒழித்துக்கட்டுவோம் என இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடர்ந்துவருகிறது.
இரண்டு நாள்களுக்கு முன்புகூட, ஐ.நா-வில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் காஸாவில் போர்நிறுத்தம் கொண்டுவரத் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை வீழ்த்தியது.
அமெரிக்காவின் இந்த முடிவை ஆதரித்த நெதன்யாகு, “ஹமாஸ் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்துவோம். அவர்களை அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம்” எனக் கூறியிருந்தர்.
இந்த நிலையில், `ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்காக (Yahya Sinwar) யாரும் சாகாதீர்கள்’ என்றும், `சரணடைந்துவிடுங்கள்’ என்றும் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து நெதன்யாகு நேற்று தனது அறிக்கையில், “போர் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஹமாஸின் முடிவுக்கான தொடக்கம்தான் இது. எனவே, ஹமாஸிடம் ஒன்றைச் சொல்கிறேன். இது அவ்வளவுதான் முடிந்துவிட்டது.
யாஹ்யா சின்வாருக்காக நீங்கள் சாக வேண்டாம், சரணடைந்துவிடுங்கள். கடந்த சில நாள்களில், டஜன் கணக்கான ஹமாஸ் குழுவினர் எங்கள் படைகளிடம் சரணடைந்திருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், ஹமாஸ் குழுவினர் சரணடைந்ததற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிடாததால், ஹமாஸ் முற்றிலுமாக அதை மறுத்திருக்கிறது.