போருக்குப் பின்னரான விளைவுகளை இலங்கை இராணுவமும், அரசாங்கமும் மாத்திரமன்றி சிங்கள மக்களும் இப்போது எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
போர் எப்போதும் அழிவுகளைக் கொண்டது. சாவுகள், இழப்புகள் இல்லாமல் எந்தப் போரும் இல்லை.
போரில் ஈடுபட்டவர்கள், நீண்டகாலமாக போருக்குத் தயார்படுத்தப்பட்ட நிலையில், திடீரென ஒரு நாள் போர் முடிவுக்கு வரும் போது, அந்த அமைதிச் சூழல் அவர்களுக்கு வெறுமையானதாக தோன்றும்.
போர்க்காலத்தில் பழகிய நண்பர்களின் இழப்புகளின் துயர், போரில் தாங்கள் யாரையாவது கொலை செய்திருந்தால் மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சி, கோபம், என்று பலவகையான மன அழுத்தங்களுக்கு அவர்கள் உள்ளாகின்ற நிலை காணப்படும்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கெடுத்த 30 வீதமான அமெரிக்க படை வீரர்கள் இவ்வாறான உளவியல் பாதிப்புகளை எதிர்கொண்டனர் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
போர் ஒன்றின் போதும், அதன் பின்னரும் இவ்வாறான உளவியல் பாதிப்புகள் நேரிடுவது வழமை.
இவ்வாறான நிலையை சரிப்படுத்துவதற்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் இராணுவத்தின் மருத்துவப் படைப்பிரிவு தனியான அலகுகளைக் கொண்டிருக்கின்றன.
ஆயினும், இலங்கை இராணுவம், போருக்குப் பிந்திய உள நெருக்கீடுகளை சரியாக அணுகவில்லை என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் பல எடுத்துக் காட்டுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளாகி விட்டன.
ஆனாலும், அந்தப் போரின் பாதிப்புகளில் இருந்து அரச படையினராலோ, அவர்களைச் சார்ந்த சமூகத்தினாலோ விடுபட முடியாமல் இருக்கிறது.
இலங்கையில் இன்று அதிகரித்திருக்கின்ற குற்றச்செயல்களுக்கு போருக்குப் பின்னரான உளநெருக்கீடுகளே முக்கியமான காரணம்.
இந்த உண்மையை அரசாங்கம் மறைத்து வருகிறது.ஏனென்றால், அதை ஒப்புக்கொள்ளும் போது, படையினரைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும், போர்க்கால மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்து வருகின்ற நிலையில், அந்த உண்மையை ஒப்புக் கொண்டால், குற்றச் செயல்களுக்குப் பொறுப்பேற்கும் நிலை வரலாம்.
அதைவிட, அரசாங்கம் ஏன் போருக்குப் பின்னரான உள ஆற்றுப்படுத்தலை முன்னெடுக்கத் தவறியது என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, படையினர் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளை அரசாங்கம் முடிந்தவரை மூடி மறைக்கவே முற்படுகிறது.
ஆனாலும், படையினர் மற்றும் படையில் இருந்து விலகியவர்கள், தப்பியோடியவர்களால் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றச் செயல்கள், நிலைமையின் விபரீதத்தை வெளிப்படுத்துகிறது.
வரவு,செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 27 ஆயிரம் படையினர் படைகளை விட்டுத் தப்பியோடியிருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
போர் நடந்த போது கூட இவ்வாறான நிலைமை இருக்கவில்லை என்றும், இது குறித்து ஆராயப்பட்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் வலியுறுத்தியிருந்தார்.
இராணுவத்தின் தலைமை அதிகாரி பதவி, 40 நாட்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கிறது என்றும், அதற்கான காரணம் என்ன என்றும் அவர் கடந்த மாத பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் வினவியிருந்தார்.
அதற்குப் பின்னர், இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், 140 அதிகாரிகள் உள்ளிட்ட 15 ஆயிரத்து 360 படையினர் தப்பிச் சென்றிருக்கின்றனர் என்பதே அந்த தகவல்.
இராணுவத்தில் 99 அதிகாரிகளும், 12 ஆயிரத்து 463 சிப்பாய்களும், கடற்படையில், 26 அதிகாரிகளும், 1,770 சிப்பாய்களும், விமானப்படையில் 15 அதிகாரிகளும் 907 சிப்பாய்களும் – இந்தப் பத்து மாத காலப்பகுதியில் முப்படைகளிலும் இருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இந்த இரண்டு தரவுகளும் சரியானதாக இருந்தால், 2021இற்குப் பின்னர், இதுவரையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் தப்பியோடியிருக்க வேண்டும்.
2030இல் மொத்த படைபலத்தை 1 இலட்சத்து 50 ஆயிரமாக குறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அண்மையிலும் கூட கூறியிருக்கிறார்.
அதாவது இராணுவத்தின் எண்ணிக்கை 1 இலட்சமாகவும், கடற்படையின் எண்ணிக்கை 30 ஆயிரமாகவும், விமானப்படையின் எண்ணிக்கை 20 ஆயிரமாகவும் பேணப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.
தற்போது முப்படைகளினதும் மொத்த படைபலம் என்ன என்ற தகவலை அவர் வெளியிடாத போதும், 2 இலட்சத்து 50 ஆயிரத்தை விட அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.
பொதுவாக ஒரு இராணுவத்தில் படைக்குறைப்பு செய்யப்படும் போது பல்வேறு பிரச்சினைகள், ஏற்படும். இராணுவத்துக்குள்ளே இருப்பவர்கள் குழப்பமடைவார்கள்.
படைக்குறைப்புத் திட்டத்தை இந்த அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்னர் அறிவித்த போது, அதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
படைக்குறைப்பு சாத்தியம் இல்லை என்றும், வேண்டாத விபரீதங்கள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இவ்வாறான நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இராணுவத்தை விட்டு தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற தகவல், அரசாங்கத்துக்கு சாதகமானது தானே என்று சிலர் சிந்திக்க கூடும்.
முன்கூட்டியே படையில் இருந்து விலகுவோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஆனால், படையை விட்டுத் தப்பியோடியவர்களுக்கு அந்த கொடுப்பனவு எதுவும் தேவையில்லையே என்று அவர்கள் சிந்திக்கின்றனர்.
அந்தக் கோணத்தில் அது அரசாங்கத்துக்குச் சாதகமானது தான்.
எல்லா இராணுவங்களிலும் தப்பியோடுதல் என்பது முக்கியமான பிரச்சினை தான். அவ்வாறு தப்பியோடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஒரு நாட்டின் இராணுவத்துக்கு சர்வதேச மதிப்பும், அங்கீகாரமும் அவ்வளவாக கிடைக்காது.
போர் ஒன்றுக்கு முகம் கொடுத்திருக்கின்ற இராணுவத்தில் தப்பியோடும் நிகழ்வுகள் அதிகமாக இருக்கும். இலங்கை இராணுவத்திலும் அவ்வாறான நிலை முன்னர் காணப்பட்டது.
ஆனால், இப்போது போர் இல்லை, பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையிலும் படையில் இருந்து அதிகளவானோர் தப்பியோடுகின்றனர் என்றால், அது நிச்சயமாக ஆராயப்பட வேண்டிய விடயம்.
ஒன்றில் அவர்கள் அமைதிச் சூழலில் பணியாற்ற முடியாதவர்களாக இருக்க வேண்டும். அதாவது எந்த நேரத்திலும் போர் மன நிலையும், வெறித்தனமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு இராணுவத்தில் அமைதியாக இருப்பது பிடிக்காது. எதையாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் உளவியல் ரீதியாக இருந்து கொண்டிருக்கும்.
இராணுவத்துக்குள் அதனை செய்ய முடியாத போது, அவர்கள் வெளியே சென்று தங்களின் வீர, தீரத்தை வெளிப்படுத்த முனைவார்கள்.
அல்லது, இராணுவக் கட்டமைப்பில் ஒழுங்கு சீர்குலைந்திருக்க வேண்டும். சரியான உணவு. மற்றும் பராமரிப்பு வசதிகள் கிடைக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறான அதிருப்தியும் படையை விட்டு தப்பியோடும் நிலையை ஊக்குவிக்கும்.
படை அதிகாரிகள் அதிகளவில் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும், சாதாரண படையினருக்கு வசதிகள் கிடைப்பதில்லை என்றும், பாராளுமன்ற பாதுகாப்புத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.
அப்போது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ணவும், இராணுவத் தளபதி விக்கும் லியனகேயும், தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் முறையிட்டிருந்தார்.
இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பாக விசாரணைக் குழுவொன்றும் சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாதுகாப்பு சேவைகள் கட்டளை கல்லூரியில் கடந்த ஆண்டு ஒரு நிகழ்வுக்காக சென்றிருந்த பாதுகாப்புச் செயலாளர்,
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் என 5 பேர், 5 நாட்கள் அங்கு தங்கியிருந்த போது அவர்களுக்கான உணவு மற்றும் வசதிகளுக்காக 11 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாதுகாப்பு அமைச்சு அதனை நிராகரித்திருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், அந்த நிதி சாதாரண படையினருக்கான அடிப்படை வசதிகளுக்கு செலவிடப்படாது போனாலும், தப்பியோடும் நிலை அதிகரிக்கும்.
அதேவேளை, தப்பியோடிய படையினர் மற்றும், படையினர் இருந்து விலகிய படையினர் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன.
சி.ஐ.டியின் தடுப்பில் உள்ள பாதாள உலக குழுத் தலைவர் ஒருவரை மீட்க, தற்கொலைப் பாணியிலான தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட, இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து தப்பியோடிய ஒருவரை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர்.
தப்பியோடிய படையினர், பாதாள உலக குழுக்களுடன் இணைந்து செயற்படுவது அதிகரித்துள்ளது. இவ்வாறான பலர் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
துப்பாக்கிகளை துல்லியமாக கையாளக் கூடிய அனுபவமும், துணிச்சலும் கொண்ட இவர்களை பாதாள உலக குழுக்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
கொலைகள், கொள்ளைகளிலும் இவர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
இதனால் தான், இந்தப் பிரச்சினைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
போருக்குப் பின்னர் படையினரை சரியாக கையாளத் தவறியதன் விளைவு தான் இது.
இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள், சிங்கள இளைஞர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி போருக்குத் திரட்டி அனுப்பிய அரசியல்வாதிகள் தான்.