இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகின்றது. இந்திய சுகாதார அமைச்சகம் வௌியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் நேற்று (17) மாத்திரம் புதிதாக 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் திரிபு பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் தொற்று சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கேரளாவில் 78 வயதான மூதாட்டியிடம் கடந்த நவம்பர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை முடிவில் அவருக்கு புதிய துணை வகையான JN.1 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த கொரோனா வைரஸ் திரிபுடன் கேரளாவில் ஒருவரும், தமிழகத்தில் 8 பேரும் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அங்கு தொற்றுறுதி செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மட்டுமன்றி, உலகம் முழுவதும் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.