இளம்பெண் ஒருவரின் கொலையை விசாரிக்க சென்ற தெலங்கானா காவல்துறை அதோடு தொடர்புடைய மேலும் 5 பேர் கொலை குறித்து கண்டுபிடித்துள்ளது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் கொலையான 6 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கில் இளைஞர் ஒருவரையும், அவருக்கு உதவியதாக நான்கு பேரையும் கைது செய்துள்ளது காவல்துறை. கடன் அழுத்தம் அதிகமாகியதால் இந்த கொலைகளை அவர் செய்துள்ளதும் இதில் தெரிய வந்துள்ளது.
டிசம்பர் 14ம் தேதியன்று காமரெட்டி மாவட்டம் சதாசிவநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூம்பள்ளி புறநகர் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடலை முழுவதுமாக எரிந்த நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் . அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வழக்கில் இந்த இளம்பெண்ணோடு சேர்த்து மேலும் 5 பேரும் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் குற்றவாளியாக கருதப்படும் 25 வயதான மெதிடா பிரசாந்த் என்பவரும், அவருக்கு உதவியதாக 4 பேரும் டிசம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் 18 வயது நிரம்பாத சிறுவனும் ஒருவன்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை
கொலையாளிகளை கைது செய்த காவல்துறை
நண்பரையே கொலை செய்த இளைஞர்
நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த புனே பிரசாத் (39) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த மெதிடா பிரசாந்த் (25) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர்.
காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2018ம் ஆண்டு இளம்பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்ததற்காக பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் துபாய் சென்றுவிட்டார்.
அதிலிருந்து அவர் மீதான வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில் அவ்வப்போது இந்த வழக்கு குறித்து தனது நண்பர் பிரசாந்த் மூலமாக அறிந்து கொண்டுள்ளார் பிரசாத்.
இதை காரணமாக கொண்டு, தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பிரசாத்திடம் 3.5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார் பிரசாந்த். இதற்காக பல தவணைகளாக துபாயில் இருந்து பணம் அனுப்பியுள்ளார் பிரசாத்.
இந்நிலையில் 2022 அக்டோபர் மாதம் பிரசாத் இந்திய திரும்பியவுடன் மக்லூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பின் சில நாட்கள் கழித்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரசாத் குடும்பத்தினர்
சொந்த கிராமத்தில் மக்கள் கொடுத்த அழுத்தத்தால் குடும்பத்துடன் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா பகுதிக்கு இடம்பெயர்ந்தார் பிரசாத்.
அவரோடு அவரது மனைவி சான்விகா (29), தாயார் சுசிலா, இரட்டை குழந்தைகள் சைத்ரிகா (8), சைத்ரிக் (8), தங்கைகள் ஸ்வப்னா (26), ஸ்ரவாணி (23) ஆகியோரும் இடம்மாறி விட்டனர்.
இந்த நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வந்ததாலும், கிராமத்தில் இருந்து வெளியேறி புதிய இடத்திற்கு குடிபெயர்ந்ததாலும் பிரசாத்தின் கடன்கள் அதிகரித்திருக்கிறது.
இந்த கடன்களை அடைப்பதற்காக கிராமத்தில் உள்ள தனது வீடு மற்றும் நிலங்களை விற்க முயற்சித்திருக்கிறார் பிரசாத். ஆனால், யாருமே அவற்றை வாங்க முன்வரவில்லை.
இறுதியில், தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு பிரசாந்திடம் கேட்டுள்ளார் பிரசாத். ஆனால், பிரசாந்த் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.
பிரசாத்தின் வீடு மற்றும் நிலம்
‘வீட்டை என் பேருக்கு மாற்றி தாருங்கள், பணம் தருகிறேன்’
பிரசாத் ஏற்கனவே கடனில் உள்ளதாலும், தன் பெயரில் ஏதும் கடன் இல்லாததாலும், தனது பெயரில் பிரசாத்தின் சொத்தை வங்கியில் அடமானம் வைத்தால், கடன் கிடைக்கும் என பிரசாத்துக்கு பிரசாந்த் அறிவுறுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
“தனது பெயரில் சொத்துகளை மாற்றி கொடுத்தால் உடனே வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார் பிரசாந்த். இதற்காக மே மாதத்தில் தனது வீடு மற்றும் நிலத்தை பிரசாந்த் பேருக்கு மாற்றி கொடுத்துள்ளார் பிரசாத். அதற்கு பின்னும் பல மாதங்களாக பணம் வராததால் மீண்டும் தனது பேருக்கே சொத்துகளை மாற்றி தருமாறு பிரசாந்திடம் கேட்டுள்ளார் பிரசாத்.
இந்நிலையில் எப்படியும் பிரசாத் கிராமத்துக்குள் நுழைய ஊர்மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட பிரசாந்த், மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டால் கேட்க கூட யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டு கொலை திட்டத்தை தீட்டியுள்ளார்.
இதற்காக துர்கா நகரை சேர்ந்த தனக்கு தெரிந்த பானோத் வம்சி மற்றும் குகுலோத் விஷ்ணு ஆகியோருடன் 60 ஆயிரம் ரூபாய்க்கு கொலை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரசாத்
தெலங்கானா சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு பிரசாத்தை கொலை செய்ய முடிவு செய்தனர் அவர்கள்.
ஆனால், பணம் தர சொல்லி பிரசாத்திடம் இருந்து அதிக அழுத்தம் வந்ததால், ஒரு வாடகை கார் மூலம் அவரை நவம்பர் 29ம் தேதி நிஜாமாபாத் அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மக்லூர் மண்டலத்திற்குட்பட்ட மதனப்பள்ளி புறநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அவரை மது அருந்த செய்து அங்கேயே அவரை கட்டை மற்றும் கற்களால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
பின் அவரது உடலை புதருக்குள் மறைத்து வைத்துள்ளனர். நடு இரவில் மண்வெட்டிகள் கொண்டு அங்கேயே பெரிய குழியை தோண்டி குற்றவாளிகள் அவரை புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்” காமரெட்டி காவல் கண்காணிப்பாளர் சிந்து ஷர்மா.
பிரசாத் குடும்பத்தை ஏமாற்றி அழைத்து சென்ற பிரசாந்த்
நண்பர் குடும்பத்தினரை அடுத்தடுத்து தந்திரமாக கொன்றது எப்படி?
எப்படியும் பிரசாத் காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தில், கொலை நடந்த இரண்டாவது நாள் (டிசம்பர் 1) பிரசாந்த் தனது நண்பர் பிரசாத்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததாக கூறுகிறார் காவல் கண்காணிப்பாளர்.
ஏற்கனவே பழைய வழக்கில் பிரசாத்தை கைது செய்ய போலீஸ் சுற்றிக் கொண்டிருப்பதால் தான் வேறு இடத்தில் மறைந்திருப்பதாகவும், தன்னை சந்திக்க மனைவி சான்விகா மற்றும் சகோதரி ஸ்ரவாணியை நிஜாமாபாத் வர பிரசாத் சொன்னதாகவும் கூறி இருவரையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார் பிரசாந்த்.
பின்னர் சகோதரி ஸ்ரவாணியை நிஜாமாபாத்தில் ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு, பிரசாத்தின் மனைவி சான்விகாவை மட்டும் அவரது கணவரிடம் அழைத்து செல்வதாக நம்ப வைத்து காரில் அழைத்து சென்றுள்ளார் அவர்.
போகின்ற வழியிலேயே தான் வைத்திருந்த கயிறை கொண்டு சான்விகாவை கழுத்தை நெரித்து கொன்று கோதாவரி பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்.
பின்னர் மீண்டும் ஸ்ரவாணி இருக்கும் இடத்திற்கு வந்து அதே காரில் அழைத்து சென்று அவரையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
அதற்கு பிறகு, அவரது உடலை மேடக் மாவட்டம் வாடியாரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை – 44 பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
அதற்கு அடுத்த நாள், பிரசாத்தின் தாயார் சுசிலா, அவரது தங்கை ஸ்வப்னா மற்றும் இரு குழந்தைகளும் பழைய வழக்கிற்காக கைது செய்யப்படலாம் என்று பயமுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரசாத் மற்றும் அவரது மனைவி, தங்கை நிஜாமாபாத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களையும் காரில் அழைத்து சென்று நிஜாமாத் ரயில் நிலையம் அருகில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்துள்ளனர் குற்றவாளிகள்.
பிரசாந்தின் தாயாரும் கொலைக்கு உடந்தை
தனது நடவடிக்கைகளில் பிரசாத் குடும்பத்திற்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக தனது தாயான 60 வயதாகும் வட்டம்மாவையும் துணைக்கு சேர்த்து கொண்டுள்ளார் பிரசாந்த். நடந்த எல்லாவற்றையும் தனது தாயிடம் தெரிவித்து விட்டு அந்த குடும்பத்தை பார்த்து கொள்ளுமாறு அவர்களுடனேயே தனது தாயையும் தங்க வைத்துள்ளார்.
டிசம்பர் 4ம் தேதியன்று பிரசாத்தின் தாய் மற்றும் தங்கையை லாட்ஜில் விட்டுவிட்டு அவர்களுக்கு காவலாய் தனது தாயை இருக்க வைத்து விட்டு இரு குழந்தைகளான சைத்ரிக் மற்றும் சைத்ரிகாவை பிரசாத் பார்க்க விரும்புவதாக கூறி தனியே நிர்மல் பகுதி நோக்கி அழைத்து சென்றுள்ளார் பிரசாந்த்.
பின்னர் போகிற வழியில் அவர்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஒரு பையில் போட்டு சோன் கிராமத்திற்கு அருகில் உள்ள கோதாவரி பாலம் மேலிருந்து ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். இந்த கொலையில் தனது 18 வயது நிரம்பாத சகோதரனையும் ஈடுபடுத்தியுள்ளார் அவர்.
குழந்தைகளை கொன்ற பிறகு லாட்ஜூக்கு சென்ற பிரசாந்த், மனைவி மற்றும் குழந்தைகள் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், இவர்களையும் சீக்கிரம் அங்கு அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார் பிரசாந்த்.
கொலை நடந்த இடத்தில் காவல்துறை
டிசம்பர் 13ம் தேதியன்று பிரசாந்த் மற்றும் அவனது 18 வயது நிரம்பாத தம்பி வம்சி ஆகியோர் இணைந்து பிரசாத்தின் தங்கை ஸ்வப்னாவை காரில் அழைத்து சென்று கழுத்தை இறுக்கி கொன்றதாகவும், பின்னர் பூம்பள்ளி புறநகர் பகுதியில் காந்தாரி எக்ஸ் சாலையில் உள்ள சாக்கடைக்குள் போட்டு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் காவல் கண்காணிப்பாளர்.
“பிரசாத்தின் தாய் சுசீலாவை லாட்ஜில் வைத்து கொன்று விட்டால் தங்கள் அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். ஆனால் , சுசீலா அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளார்.
இந்நிலையில் சுசீலா பல்வஞ்சா சென்றிருப்பார் என்று நினைத்துக் கொண்டு காந்தாரி எக்ஸ் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரசாந்த் மற்றும் அவனுக்கு உதவிய நான்கு பேரையும் கைது செய்தோம்” என்று கூறுகிறார் அவர்.
இந்த தொடர் கொலை வழக்கில் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் வழக்கு எண் 249/2023இல், IPC U/s 302, 364, 201, 379R/W 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் , டிசம்பர் 4-ம் தேதி மேடக் மாவட்டத்தின் செகுண்டா, டிசம்பர் 8-ம் தேதி நிஜாமாபாத் மாவட்டத்தின் மெண்டோரா, டிசம்பர் 14-ம் தேதி காமரெட்டி மாவட்டத்தின் சதாசிவ்நகர், டிசம்பர் 17-ம் தேதி நிஜாமாபாத் மாவட்டத்தின் மெண்டோரா காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மெதிடா பிரசாந்த் மற்றும் அவருக்கு உதவியவர்களான குகுலோத் விஷ்ணு, பனோத் வம்சி, வட்டம்மா மற்றும் ஒரு சிறார் ஆகியோர் அந்தந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், பெட்ரோல் பாட்டில், கயிறு, 5 மொபைல் போன்கள், 30,000 பணம், நிலப்பதிவு ஆவணங்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காமரெட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.