காஸா யுத்தத்தை இரு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று இராணுவ ரீதியான கோணம். மற்றையது அரசியல் கோணம்.
முன்னைய கோணத்தில் பார்த்தால், படைவலுச் சமநிலையின் அடிப்படையில், இதுவொரு யுத்தமே கிடையாது.
ஒரு புறத்தில் எண்ணிக்கையில் குறைந்த ஆயுதபாணிக் குழுவொன்று, அதற்கு முறையான பயிற்சி கிடையாது. நவீன ஆயுதங்களைப் பெறும் வசதியில்லை. சுதந்திரமாக நடமாடக் கூட முடியாது.
மறுபுறத்தில், உலகிலேயே மிகவும் பலமான இராணுவம். அதற்கு அமெரிக்காவின் ஆதரவு மாத்திரம் கிடைப்பதில்லை. ஆயுதங்களும் தாராளமாக விநியோகிக்கப்படும்.
ஹமாஸ் இயக்கத்துக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான யுத்தத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள்?
ஒக்டோபர் 7க்குப் பிறகு, பலஸ்தீனர்கள் மீது மிக மிலேச்சத்தனமான வன்முறைகளை இஸ்ரேலியப் படைகள் கட்டவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால், இஸ்ரேல் தோற்கிறது என்பது பாதுகாப்பு விடயங்களை ஆராயும் பகுப்பாய்வாளர்களின் கருத்து.
அதேபோன்று, எல்லை தாண்டிச் சென்று தாக்கி இஸ்ரேலைத் தூண்டியதன் மூலம், ஹமாஸ் இயக்கம் அரசியல் நோக்கங்களை அடைந்து வருகிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
காஸா யுத்தத்தில் இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இருதரப்புக்களும் பிடிவாதமாக இருக்கின்றன. ஒக்டோபர் 7ஆம் திகதிகளுக்கு முன்னர், காஸாவின் எல்லைகள் எவ்வாறு இருந்தனவோ, அந்த எல்லைகளுக்குத் திரும்ப இரு தரப்புகளுக்கும் விருப்பம் கிடையாது.
ஹமாஸ் இயக்கத்தைப் பொறுத்தவரையில், 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் பலஸதீனம் எவ்வாறு இருந்ததோ, அந்த நிலைக்குத் திரும்ப வேண்டும்.
காஸாவில் ஹமாஸ் இயக்கம் இருக்கக்கூடாது என்பது இஸ்ரேலிய அரசின் பிடிவாதம்.
இதில் எது நடக்குமோ தெரியவில்லை. ஆனாலும், காஸா யுத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்கு திரும்ப முடியாது என்பது யதார்த்தம்.
இவ்விரு பிடிவாதங்களும் அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்கள் சார்ந்தவை.
வேறுபாடுகளைத் தெளிவாக அறிய பழையதொரு யுத்தத்தை ஞாபகப்படுத்தலாம்.
அமெரிக்காவிற்கும், வியட்னாமிற்கும் இடையிலான யுத்தம். இந்த யுத்தம் சிக்கலானது. ஒரு மரபுரீதியான இராணுவப் படையினதும், மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் குழுவினதும் நோக்கங்கள் பற்றி விபரிக்க இது உதவும்.
வியட்னாமின் புரட்சிப்படை அமெரிக்கா இராணுவத்தின் முன்னிலையில் பின்னடைவு காண்கிறது. புரட்சிப்படைகளின் இராணுவ, அரசியல் நிலைகள் தகர்க்கப்படுகின்றன.
ஒரு நாள் புரட்சிப்படைகள் திடீரென கூட்டிணைந்த தாக்குதலொன்றை நடத்துகின்றன. சிறு ஆயுதங்களைக் கொண்டு நடத்திய கெரில்லாத் தாக்குதல். இதற்கு Tet Offensive என்று பெயர்.
அதுவரையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சன், போர் குறித்து அமெரிக்கர்கள் மத்தியில் உருவாக்கிய வெற்றிச் சித்திரம் அல்லது மாயை தகர்கிறது.
தமது பிள்ளைகளை வியட்னாம் யுத்தத்திற்காக அனுப்பிய அமெரிக்கப் பெற்றோரின் மனது சஞ்சலப்படுகிறது.
Tet Offensive என்பது இராணுவ ரீதியான தாக்குதல் தான். ஆனால், அதன்மூலம் வியட்னாம் தலைவர்கள் அடைய நினைத்தது வேறு. இழந்த மண்ணை மீட்பதோ, இயன்றளவு அமெரிக்க படைவீரர்களை கொள்வதோ அல்ல. மாறாக, அமெரிக்க மக்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது தான்.
இதனை ஜனாதிபதி ஹென்ரி கீஸிங்கர் விபரித்தபோது, “நாம் இராணுவ யுத்தத்தை முன்னெடுத்தபோது, எமது பகையாளிகள் அரசியல் யுத்தத்தை நடத்தினார்கள்” என்றார்.
கெரில்லா யுத்தங்களின் இயல்பு மாறுபட்டது. ஒரு கெரில்லா போராளி தோற்காமல் இருந்தாலே அவன் வெற்றி பெற்றவன் ஆகிறான். மறுபுறத்தில், மரபு ரீதியான இராணுவம் வெல்லாதபோது, அது தோற்றுப் போனதாகிறது என்று கீஸிங்கர் விபரிப்பார்.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலும் இதைப் போன்றது தான்.
இராணுவ ரீதியான வெற்றி பற்றி ஹமாஸ் இயக்கம் கொண்டுள்ள கோட்பாடு, அரசியல் நோக்கம் கொண்டது. நீண்டகால அரசியல் பெறுபேறுகளை எதிர்பார்த்து நடத்தப்படுவது.
இந்த இயக்கம் ஓரிரு வருடங்களில் வெற்றியை எதிர்பார்க்கவில்லை. மாறாக, பலஸ்தீன மக்கள் மீதான ஒருமைப்பாட்டை அதிகரித்து, இஸ்ரேலை மிகக் கூடுதலாக தனிமைப்படுத்தும் நோக்கிலான ஆண்டாண்டு கால போராட்டத்தை ஹமாஸ் முன்னெடுக்கிறது.
இஸ்ரேலியப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட காஸா நிலப்பரப்பில் வாழும் மக்களின் விடுதலைத் தாகம் ஹமாஸ் இயக்கத்தின் பலம்.
காஸாவில் விடுதலை கோரி எழுப்பப்படும் குரல்கள், மேற்குக் கரையில் வாழும் பலஸ்தீனர்களில் உணர்வைக் கொந்தளிக்கச் செய்யும். இஸ்ரேலின் இராணுவ அதிகாரத்தின் நூலில் ஆடும் பொம்மையாகக் கருதும் பலஸ்தீன அதிகாரசபையையும் நீர்த்துப் போக வைப்பார்கள் என்பது ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் இலக்கு.
ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கும் பட்சத்தில், அதற்கொரு சர்வதேச பரிமாணமும் இருந்தது. அது இஸ்ரேலைத் தனிமைப்படுததல் என்பதாகும்.
சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியிலான உறவுகளை ஏற்படுத்தி, சீனாவின் சவால்களை நோக்கி கவனத்தைத் திசை திருப்பும் நோக்கம் அமெரிக்காவிற்கு இருந்தது.
இதற்காக, ஆப்ரகாம் உடன்படிக்கைகள் என்ற பெயரில், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுககும் இடையில் புதியதொரு பந்தத்தை உருவாக்க அமெரிக்கா முனைந்தது.
பலஸ்தீனர்கள் மிகக் கொடுமையாக தாக்கியழிக்கப்படும் சமகால சூழலில் அரேபிய நாடுகள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இஸ்ரேலுடன் உறவைப் பேணுவது?
அரபு நாடுகள், இஸ்ரேலுடனான பந்தத்தில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில், பூகோள தெற்கு நாடுகளும் பலஸ்தீன விடுதலை நோக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு நாடுகளின் தலைநகரங்களில் நிகழும் ஆர்ப்பாட்டங்கள் இஸ்ரேலுக்கு எதிரான பொதுக்கருத்தை கட்டமைப்பதுடன் நின்றுவிடாமல், பலஸ்தீனர்களுடான ஒருமைப்பாட்டை வலுவடையச் செய்துள்ளன.
ஆயுத வலுச் சமநிலையில் மேலோங்கிய நிலையே இஸ்ரேலின் பலம் என்றால், அதனைப் பயன்படுத்தி இஸ்ரேலைத் தோற்கடிக்க செய்தமை ஹமாஸின் அரசியல் நோக்கம் கொண்ட இராணுவ வியூகம்.
தாம் கொண்டுள்ள பலத்தின் காரணமாக, இஸ்ரேல் பலஸ்தீனர்களைக் கொன்று, அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் இல்லாதொழிக்கிறது. போதும் நிறுத்து என்று சர்வதேச சமூகம் விடுக்கும் கோரிக்கையை நிராகரிக்கிறது. இத்தகைய நிராகரிப்பின் மூலம் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
கடந்த வாரம் பாதுகாப்புச் சபையில் நடந்த வாக்கெடுப்பைப் பார்க்கலாம். வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியபோது, அமெரிக்கா தனித்திருந்தது. பிரிட்டன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரான்ஸ் எதிராக வாக்களித்தது.
பொதுச்சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பு, காஸாவில் போர் நிறுத்தத்தை அமுலாக்க வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தப்பட்டது தான். ஆனால், காஸா யுத்தம் தொடர்பான உலகப் பொது நிலைப்பாடு இஸ்ரேலுக்கு எதிராக திரும்பி வருவதை தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலைப்பாடு ஏற்படுத்தக்கூடிய உக்கிரமான விளைவுகளில் இருந்து அமெரிக்காவும் தப்பவில்லை என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவிற்கும் இடையிலான கருத்து முரண்பாட்டில் கண்டோம்
ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர், குழந்தைகள் அடங்கலாக ஆயிரமாயிரம் பலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல், அமெரிக்க ஜனாதிபதி எதிர்த்தாலும் காஸா யுத்தம் முன்னெடுக்கப்படும் என சூளுரைத்துள்ளது.
இஸ்ரேலின் யுத்தத்திற்கு அரசியல் இலக்குகள் கிடையாது. வெறுமனே பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தோடு முன்னெடுக்கப்படும் யுத்தமே அது.
இந்த யுத்தத்தில் இராணுவ வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவதில் இஸ்ரேல் வெற்றி பெறலாம். ஆனால், வெறுமனே படைப்பலத்தின் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது.
இன்று உலகெங்கிலும் எதிரொலிக்கும் பொதுக்கருத்தை முற்றுமுழுதாக இடக்கையால் புறந்தள்ளி பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கும் மனநிலை பேதலித்த இராணுவ நடைமுறையை இஸ்ரேலியத் தலைவர்கள் அனுசரிக்கிறார்கள்.
உலக மக்கள் விரும்பும் மனிதநேயத்தையும், உயிர்களுக்குள்ள மதிப்பையும் கிஞ்சித்தும் மதிக்காமல் செயற்படுகிறார்கள்.
பிள்ளைக் கொல்லப்பட்டு, ஆட்கள் இடம்பெயர்ந்து, வீடுகள் நிர்மூலக்கப்படும் மோசமான காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் தான், இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையின் பெறுபேறுகள் என்றால், இந்த முயற்சியில் இஸ்ரேலுடன் இணையும் தைரியம் எவருக்கு இருக்கும்?
யுத்தத்திற்குப் பிறகு என்ன தீர்வு என்ற இலக்கு இல்லாமல் வெறுமனே படைப்பலத்தின் மூலம் பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கும் நோக்கத்துடன் முன்னேறும் இஸ்ரேல் வெல்கிறதா? ஆண்டாண்டு காலம் பலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துயரங்களை உலகறியச் செய்து. மனசாட்சியற்ற ஒடுக்குமுறையாளர்களின் கொடூரத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த சக்திகளை உலகளாவிய ரீதியில் ஓரங்கட்டி, தனிமைப்படுத்த வைத்த ஹமாஸ் இயக்கம் வெல்கிறதா?
நீங்களே உங்களுக்கு பதிலைக் கூறிக் கொள்ள முடியும்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-