புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் சிறம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணித்தவர்கள் உயிர்த் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் தப்போவ மஹாகொன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply