உக்ரேனில் பல மாதங்களாக கடும் சண்டைகள் இடம்பெற்று வரும் பக்முத் நகரில், கடந்த டிசம்பர் 4ஆம் திகதி ரஷ்யப் படைகளின் ஆட்டிலறித் தாக்குதலில், 3 இலங்கையர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் மூவரும் சாதாரண சிவிலியன்கள் அல்ல, இலங்கைப் படைகளில் முன்னர் பணியாற்றியவர்கள், உக்ரேன் இராணுவத் துடன் இணைந்து செயற்படும் வெளிநாட் டுப் படைப்பிரிவில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கெடுத்தவர்கள்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கெப்டன் ரனிஷ் ஹேவகே. மற்றவர் இராணுவத்தின் சிங்க ரெஜிமென்டை சேர்ந்த ரொட்னி ஜயசிங்க. இன்னொருவர் கடற்படையின் முன்னாள் அதிகாரியான பிரியந்த.
இவர்களில் கெப்டன் ஹேவகேயின் சடலம் மாத்திரம் மீட்கப்பட்டிருக்கிறது. உக்ரேனில் வெளிநாட்டு கூலிப் படையினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள விசேட படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இவர் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட கெப்டன் ஹேவகேயின் சடலத்தை அவரது படைப்பிரிவின் துணைக் கட்டளை அதிகாரியான ஹத்துருசிங்க, மீட்டுக்கொண்டு, போர் முனைக்கு அப்பால் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஹத்துருசிங்க காயமடைந்த நிலையில் கீவ்வில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கெப்டன் ஹேவகேக்கு உக்ரேன் ஜனாதிபதி விசேட விருதை வழங்கியிருக்கிறார். அவர் போர்முனையில் சிறப்பாக பணியாற்றியதால், அவரை கெப்டன் டென்டிஸ்ட் (பல் மருத்துவர்) என்று உக்ரேனிய படை அதிகாரிகளால் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் சிறப்பாக பணியாற்றிய கெப்டன் ஹேவகே, இலங்கை இராணுவத்தின் முதலாவது கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றியவர் என்றும், 2018இல் இராணுவத்தில் இருந்து சட்டப்படி விலகினார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், இராணுவம் அதனை மறுத்திருக்கிறது.
அவர் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னரே இராணுவத்தில் சேர்ந்து கொண்டார் என்றும் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றவில்லை,
இலகு காலாட்படையிலேயே இரண்டாவது லெப்டினன்ட் அதிகாரியாக இருந்தார் எனவும், 2012ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ அவரை இராணுவத்தை விட்டு விலக்கினார் என்றும் இராணுவத் தலைமையகம் கூறுகிறது.
2018இல் துபாயில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றச் சென்ற கெப்டன் ஹேவகே, 2022ஆம் ஆண்டு அங்கிருந்து, உக்ரேனுக்குச் சென்று, வெளிநாட்டுக் கூலிப்படையுடன் இணைந்திருக்கிறார்.
அங்கு அவர், கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, ‘கோ ஹோம் கோட்டா’ என்ற அட்டையுடன், உக்ரேனில் வெளிநாட்டுப் படையினர் இருவருடன் காணப்படும் படம் ஒன்றும் இணையத்தில் பரவுகிறது.
அவரைப் போல உக்ரேனில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கெடுத்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் முன்னாள் படையினர், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி, இந்தியர்களும் கூட உக்ரேன் போரில் பங்கெடுத்திருக்கின்றனர்.
52 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்காக உக்ரேன் படையுடன் இணைந்திருப்பதாக உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு புலனாய்வுத் தகவலின் படி, 1500 தொடக்கம் 2000 வரையிலான வெளிநாட்டுப் படையினரே உக்ரேனில் பணியாற்றுகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
உக்ரேன் போரில் இதுவரையில், 332 வெளிநாட்டுப் படையினர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் 38 அமெரிக்கர்களும் உள்ளடக்கம்.
உக்ரேன் போரில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்காக செல்கின்றனர். அவர்கள் ரஷ்யா தோற்கடிக்கப்படுவதற்காக அங்கு போரிடுகின்றனர்.
அதற்கு அந்த நாடுகள் இரகசியமாக உதவிகளையும் வழங்கி வருகின்றன. இலங்கையர்கள் பலரும் இவ்வாறு உக்ரேனில் கூலிப்படையினராக இணைந்திருக்கின்றனர்.
கெப்டன் ஹேவகேயின் முதலாவது சிறப்பு படைப்பிரிவில் முன்னாள் இலங்கைப் படையினர் 70 பேர் வரையில், இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்று உக்ரேனில் உள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
உக்ரேனில் எத்தனை இலங்கையர்கள் கூலிப்படையினராகப் பணியாற்றுகின்றனர் என்று தெரியவராது போனாலும், அங்கு செல்வதற்கு அதிகளவிலானோர் முயற்சிக்கின்றனர் என்று தெரிகிறது.
இவ்வாறு போரிடுவதற்காக உக்ரேனுக்கு செல்ல முயன்ற 12 பேரை நேபாளம் அண்மையில் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் கூறியிருக்கிறார்.
கடுமையான போர்க்களங்களில் ஒன்றாக கருதப்படும், உக்ரேனின் முன்னரங்க போர் முனைக்குச் செல்வதற்கு இலங்கையர்கள் – குறிப்பாக இலங்கை படைகளில் பணியாற்றியவர்கள் ஏன் முயற்சிக்கின்றனர்?
அவர்களுக்கு ரஷ்யா மீது கோபம் இல்லை. அவ்வாறாயின் எதற்காக, தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய கள முனைக்கு அவர்கள் செல்கிறார்கள்?
உக்ரேனில் போரிடுவதற்கு வெளிநாட்டவர்களை அந்த நாட்டு அரசாங்கம் அழைக்கிறது. சட்டபூர்வமாகவே அந்த நாட்டு அரசாங்கம் இதனைச் செய்கிறது. இதன் மூலம் தங்களுக்கு தேவைப்படும் ஆளணியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது ஒன்று.
அடுத்தது போரில் ஏற்படும் உயிரிழப்புகள், முழுமையாக உக்ரேனின் சனத்தொகையில் பாதிப்பை ஏற்படுத்தாது.
இதனால் தான் உக்ரேன் அரசாங்கம் வெளிநாட்டுப் படையி னரை தனியாக போரில் ஈடுப டுத்துகிறது. இதன்மூலம் நிபுண த்துவம் வாய்ந்தவர்கள் அவர் களுக்கு கிடைப்பதுடன், ஆளணி நெருக்கடியும் தீர்க்கப்படும்.
இவ்வாறு அழைக்கப்படும் கூலிப்படையினருக்கு நல்ல சம்பளத்தை உக்ரேன் கொடுக்கிறது. உக்ரேனில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு 1 மில்லியன் ரூபா தொடக்கம் 1.2 மில்லியன் ரூபா வரையில், சம்பளமாக வழங்கப்படுவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உக்ரேனில் போரிடுவதற்காகச் செல்பவர்களுக்கு 3000 அமெரிக்க டொலர்கள் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இலங்கையர்களைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய தொகை. ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றச் செல்லும் இலங்கைப் படையினருக்கு 1450 டொலர்கள் வரையே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனை விட இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்கிறது என்றால் அவர்கள் உக்ரேன் பக்கம் செல்வதற்கே முற்படுவார்கள்.
விடுதலைப் புலிகளுடனான போருக்குத் திரட்டப்பட்ட படையினர் எல்லோருக்குமே நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிரதானமானதாக இருக்கவில்லை.
போர்க்காலத்தில் நாட்டில் வேலையின்மை, வறுமை என்பன தலைவிரித்தாடின. அப்போது அவர்களுக்கு இராணுவத்தில் இணைந்து கொள்வது கைநிறைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக காணப்பட்டது.
அதனால் பெருமளவானோர் இராணுவத்தில் இணைந்தனர். அவ்வாறானவர்களுக்கு இப்போது உக்ரேன் ஒரு கவர்ச்சியான போர்முனையாகத் தெரிகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உக்ரேனுக்குச் சென்றால் சில மாதங்களிலேயே கை நிறைய சம்பாதித்துவிடலாம் என்று சிந்திக்கிறார்கள்.
இந்தநிலைக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது அரசாங்கம்தான். பனிப்போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து உக்ரேன், தனிநாடாக மாறிய பின்னர், அங்கு பொருளாதாரம் பெரியளவில் செழிப்பாக இருக்கவில்லை.
அவ்வாறான நிலையில் இலங்கை விமானப்படைக்கு உக்ரேனிடம் இருந்தும், ரஷ்யா, கசகஸ்தான், லித்துவேனியா போன்ற நாடுகளிடம் இருந்தும் வாங்கப்பட்ட அன்டனோவ்- 32, அன்டனோவ் -24 விமானங்களையும், எம்.ஐ. 17 மற்றும் எம்.ஐ 24 ஹெலிகொப்டர்களையும், மிக்-29 போர் விமானங்களையும் இயக்குவதற்கு உக்ரேனில் இருந்து விமானிகள் கூலிப்படைகளாக இங்கு வந்தனர்.
போர்முனையில் அவர்கள் பணியாற்றியதுடன், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் உயிரிழக்கவும் நேரிட்டது.
இன்று நிலைமை மாறி, இலங்கைப் படையினர் உக்ரேனுக்கு கூலிப்படைகளாகச் செல்கின்றனர். உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுடனும் நெருங்கிய உறவை வைத்திருக்கும் இலங்கைக்கு இது சிக்கலான ஒரு நிலையை தோற்றுவித்திருக்கிறது.
உக்ரேனில் இலங்கையைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர், ரஷ்யப் படைகளின் ஆட்டிலறி தாக்குதலில் கொல்லப்பட்ட தகவல் வெளியாகிய நிலையில் கடந்தவாரம் ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிக்கலோய் பட்ரூசெவ் தலைமையிலன உயர்மட்ட குழுவொன்று, கொழும்பு வந்து அமைச்சர் கள் டிரான் அலஸ், விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிக ளைச் சந்தித்து பேச்சு நடத்தியது.
இந்தச் சந்திப்பில் இலங்கைப் படையினர் உக்ரேனில் கூலிப்படைகளாக பணியாற்றுவது தொடர்பாக ரஷ்யா எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்று அரசாங்க வட்டா ரங்கள் கூறியிருந்தன. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகமும் இந்த விடயம் தொடர்பாக மௌனம் காத்து வருகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் இருந்து கூலிப்படையினர் உக்ரேன் செல்வதை ரஷ்யா விரும்பாது. அதற்கு முடிவு கட்டுவதற்கு ரஷ்யா வேறு பல உபாயங்களைக் கையாளக்கூடும். அதேவேளை இலங்கை அரசாங்கம், கூலிப்படையினர் உக்ரேனுக்கு செல்வதை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டது.
அதற்கான சட்டங்கள் இல்லை என்றும், சட்டவிரோதமாக செல்பவர்களை கண்ட றிந்து தடுப்பது கடினம் என்றும் அரசதரப்பு கூறுகிறது. கூலிப்படையினராகச் செல்பவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான டொலர்கள் கிடைக்கும் என்றால் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால், அந்த டொலர்களை விட, ரஷ்யாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பதை அரசாங்கம் இலகுவில் மறந்துவிடாது