உக்­ரேனில் பல மாதங்­க­ளாக கடும் சண்­டைகள் இடம்­பெற்று வரும் பக்முத் நகரில், கடந்த டிசம்பர் 4ஆம் திகதி ரஷ்யப் படை­களின் ஆட்­டி­லறித் தாக்­கு­தலில், 3 இலங்­கை­யர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

அவர்கள் மூவரும் சாதா­ரண சிவி­லி­யன்கள் அல்ல, இலங்கைப் படை­களில் முன்னர் பணி­யாற்­றி­ய­வர்கள், உக்ரேன் இரா­ணுவத்­ துடன் இணைந்து செயற்­படும் வெளி­நாட் டுப் படைப்­பி­ரிவில் இணைந்து ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் பங்­கெ­டுத்­த­வர்கள்.

கொல்­லப்­பட்­ட­வர்­களில் ஒருவர் கெப்டன் ரனிஷ் ஹேவகே. மற்­றவர் இரா­ணு­வத்தின் சிங்க ரெஜி­மென்டை சேர்ந்த ரொட்னி ஜயசிங்க. இன்­னொ­ருவர் கடற்­ப­டையின் முன்னாள் அதி­கா­ரி­யான பிரி­யந்த.

இவர்­களில் கெப்டன் ஹேவ­கேயின் சடலம் மாத்­திரம் மீட்­கப்­பட்­டி­ருக்­கி­றது. உக்­ரேனில் வெளி­நாட்டு கூலிப் ­ப­டை­யி­னரைக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள விசேட படைப் ­பி­ரிவின் கட்­டளை அதி­கா­ரி­யாக இவர் பணி­யாற்­றினார் என்று கூறப்­ப­டு­கி­றது.

ரஷ்­யாவின் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட கெப்டன் ஹே­வ­கேயின் சட­லத்தை அவரது படைப்­பி­ரிவின் துணைக் கட்­டளை அதி­கா­ரியான ஹத்­து­ரு­சிங்க, மீட்டுக்கொண்டு, போர் முனைக்கு அப்பால் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இடம் ஒன்­றுக்கு கொண்டு சென்­றி­ருக்கிறார். ஹத்­து­ரு­சிங்க காய­ம­டைந்த நிலையில் கீவ்வில் உள்ள மருத்­து­வ­மனை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

கெப்டன் ஹேவ­கேக்கு உக்ரேன் ஜனா­தி­பதி விசேட விருதை வழங்­கி­யி­ருக்­கிறார். அவர் போர்­மு­னையில் சிறப்­பாக பணி­யாற்­றி­யதால், அவரை கெப்டன் டென்டிஸ்ட் (பல் மருத்­துவர்) என்று உக்­ரே­னிய படை அதி­கா­ரி­களால் அழைக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் சிறப்­பாக பணி­யாற்­றிய கெப்டன் ஹேவகே, இலங்கை இரா­ணு­வத்தின் முத­லா­வது கொமாண்டோ படைப்­பி­ரிவில் பணி­யாற்­றி­யவர் என்றும், 2018இல் இரா­ணு­வத்தில் இருந்து சட்­டப்­படி வில­கினார் என்று முதலில் செய்­திகள் வெளி­யா­கின. ஆனால், இரா­ணுவம் அதனை மறுத்­தி­ருக்­கி­றது.

அவர் 2009இல் போர் முடி­வுக்கு வந்த பின்­னரே இரா­ணு­வத்தில் சேர்ந்து கொண்டார் என்றும் கொமாண்டோ படைப்­பி­ரிவில் பணி­யாற்­ற­வில்லை,

இலகு காலாட்­ப­டை­யி­லேயே இரண்­டா­வது லெப்­டினன்ட் அதி­கா­ரி­யாக இருந்தார் எனவும், 2012ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ அவரை இரா­ணு­வத்தை விட்டு விலக்­கினார் என்றும் இரா­ணுவத் தலை­மை­யகம் கூறு­கி­றது.

2018இல் துபாயில் உள்ள தனியார் பாது­காப்பு நிறு­வனம் ஒன்றில் பணி­யாற்றச் சென்ற கெப்டன் ஹேவகே, 2022ஆம் ஆண்டு அங்­கி­ருந்து, உக்­ரே­னுக்குச் சென்று, வெளி­நாட்டுக் கூலிப்­ப­டை­யுடன் இணைந்­தி­ருக்­கிறார்.

அங்கு அவர், கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, ‘கோ ஹோம் கோட்டா’ என்ற அட்­டை­யுடன், உக்­ரேனில் வெளி­நாட்டுப் படை­யினர் இரு­வ­ருடன் காணப்­படும் படம் ஒன்றும் இணை­யத்தில் பர­வு­கி­றது.

அவரைப் போல உக்­ரேனில் ஆயி­ரக்­க­ணக்­கான வெளி­நாட்­ட­வர்கள் ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் பங்­கெ­டுத்­துள்­ளனர்.

அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா போன்ற நாடு­களின் முன்னாள் படை­யினர், ஐரோப்­பிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் மாத்­தி­ர­மன்றி, இந்­தி­யர்­களும் கூட உக்ரேன் போரில் பங்­கெ­டுத்­தி­ருக்­கின்­றனர்.

52 நாடு­களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ரஷ்­யா­வுக்கு எதி­ராக போரி­டு­வ­தற்­காக உக்ரேன் படை­யுடன் இணைந்­தி­ருப்­ப­தாக உக்ரேன் வெளி­வி­வ­கார அமைச்சர் டிமிட்ரோ குலேபா கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறி­வித்­தி­ருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் நியூயோர்க் டைம்ஸ் வெளி­யிட்ட ஒரு புல­னாய்வுத் தக­வலின் படி, 1500 தொடக்கம் 2000 வரை­யி­லான வெளி­நாட்டுப் படை­யி­னரே உக்­ரேனில் பணி­யாற்­று­கின்­றனர் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

உக்ரேன் போரில் இது­வ­ரையில், 332 வெளி­நாட்டுப் படை­யினர் உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களில் 38 அமெ­ரிக்­கர்­களும் உள்­ள­டக்கம்.

உக்ரேன் போரில் பங்­கேற்கும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு நோக்கம் இருக்­கி­றது. அமெ­ரிக்­கர்­களும், ஐரோப்­பி­யர்­களும், ரஷ்­யா­வுக்கு எதி­ராக போரி­டு­வ­தற்­காக செல்­கின்­றனர். அவர்கள் ரஷ்யா தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்­காக அங்கு போரி­டு­கின்­றனர்.

அதற்கு அந்த நாடுகள் இர­க­சி­ய­மாக உத­வி­க­ளையும் வழங்கி வரு­கின்­றன. இலங்­கை­யர்கள் பலரும் இவ்­வாறு உக்­ரேனில் கூலிப்­ப­டை­யி­ன­ராக இணைந்­தி­ருக்­கின்­றனர்.

கெப்டன் ஹேவ­கேயின் முத­லா­வது சிறப்பு படைப்­பி­ரிவில் முன்னாள் இலங்கைப் படை­யினர் 70 பேர் வரையில், இணைந்து கொள்­ள­வி­ருக்­கின்­றனர் என்று உக்­ரேனில் உள்ள இலங்­கையின் முன்னாள் இரா­ணுவ அதி­காரி ஒருவர் கூறி­யி­ருக்­கிறார்.

உக்­ரேனில் எத்­தனை இலங்­கை­யர்கள் கூலிப்­ப­டை­யி­ன­ராகப் பணி­யாற்­று­கின்­றனர் என்று தெரி­ய­வ­ராது போனாலும், அங்கு செல்­வ­தற்கு அதி­க­ள­வி­லானோர் முயற்­சிக்­கின்­றனர் என்று தெரி­கி­றது.

இவ்­வாறு போரி­டு­வ­தற்­காக உக்­ரே­னுக்கு செல்ல முயன்ற 12 பேரை நேபாளம் அண்­மையில் தடுத்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது என்று பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் கேணல் நளின் ஹேரத் கூறி­யி­ருக்­கிறார்.

கடு­மை­யான போர்க்­க­ளங்­களில் ஒன்­றாக கரு­தப்­படும், உக்­ரேனின் முன்­ன­ரங்க போர் முனைக்குச் செல்­வ­தற்கு இலங்­கை­யர்கள் – குறிப்­பாக இலங்கை படை­களில் பணி­யாற்­றி­ய­வர்கள் ஏன் முயற்­சிக்­கின்­றனர்?

அவர்­க­ளுக்கு ரஷ்யா மீது கோபம் இல்லை. அவ்­வா­றாயின் எதற்­காக, தங்­களின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­படக்கூடிய கள­ மு­னைக்கு அவர்கள் செல்­கி­றார்கள்?

உக்­ரேனில் போரி­டு­வ­தற்கு வெளி­நாட்­ட­வர்­களை அந்த நாட்டு அர­சாங்கம் அழைக்­கி­றது. சட்­ட­பூர்­வ­மா­கவே அந்த நாட்டு அர­சாங்கம் இதனைச் செய்­கி­றது. இதன் மூலம் தங்­க­ளுக்கு தேவைப்­படும் ஆள­ணியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்­பது ஒன்று.

அடுத்­தது போரில் ஏற்­படும் உயி­ரி­ழப்­புகள், முழு­மை­யாக உக்­ரேனின் சனத்­தொ­கையில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது.

இதனால் தான் உக்ரேன் அர­சாங்கம் வெளி­நாட்டுப் படை­யி ­னரை தனி­யாக போரில் ஈடு­ப­ டுத்­து­கி­றது. இதன்மூலம் நிபு­ண த்­துவம் வாய்ந்­த­வர்கள் அவர்­ க­ளுக்கு கிடைப்­ப­துடன், ஆளணி நெருக்­க­டியும் தீர்க்கப்படும்.

இவ்­வாறு அழைக்­கப்­படும் கூலிப்­ப­டை­யி­ன­ருக்கு நல்ல சம்­ப­ளத்தை உக்ரேன் கொடுக்­கி­றது. உக்­ரேனில் பணி­யாற்றும் இலங்­கை­யர்­க­ளுக்கு 1 மில்­லியன் ரூபா தொடக்கம் 1.2 மில்­லியன் ரூபா வரையில், சம்­ப­ள­மாக வழங்­கப்­ப­டு­வ­தாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் ரஷ்யா வெளி­யிட்ட அறிக்கை ஒன்றில், உக்­ரேனில் போரி­டு­வ­தற்­காகச் செல்­ப­வர்­க­ளுக்கு 3000 அமெ­ரிக்க டொலர்கள் வரை சம்­ப­ள­மாக கொடுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கை­யர்­களைப் பொறுத்­த­வ­ரையில் இது மிகப் பெரிய தொகை. ஐ.நா. அமை­திப்­ப­டையில் பணி­யாற்றச் செல்லும் இலங்கைப் படை­யி­ன­ருக்கு 1450 டொலர்கள் வரையே ஊதி­ய­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. இதனை விட இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்­கி­றது என்றால் அவர்கள் உக்ரேன் பக்கம் செல்­வ­தற்கே முற்­ப­டு­வார்கள்.

விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போருக்குத் திரட்­டப்­பட்ட படை­யினர் எல்­லோ­ருக்­குமே நாட்டைக் காப்­பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிர­தா­ன­மா­ன­தாக இருக்­க­வில்லை.

போர்க்­கா­லத்தில் நாட்டில் வேலையின்மை, வறுமை என்­பன தலை­வி­ரித்­தாடின. அப்­போது அவர்­க­ளுக்கு இரா­ணு­வத்தில் இணைந்து கொள்­வது கைநி­றைய சம்­ப­ளத்தைப் பெற்றுக்கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்­பாக காணப்­பட்­டது.

அதனால் பெரு­ம­ள­வானோர் இரா­ணு­வத்தில் இணைந்­தனர். அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு இப்­போது உக்ரேன் ஒரு கவர்ச்­சி­யான போர்­மு­னை­யாகத் தெரி­கி­றது. இலங்­கையில் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள், உக்­ரே­னுக்குச் சென்றால் சில மாதங்­க­ளி­லேயே கை நி­றைய சம்­பா­தித்துவிடலாம் என்று சிந்­திக்­கி­றார்கள்.

இந்­த­நி­லைக்கு அவர்­களைக் கொண்டு வந்து நிறுத்­தி­யது அர­சாங்கம்தான். பனிப்­போரின் முடிவில் சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரிந்து உக்ரேன், தனி­நா­டாக மாறிய பின்னர், அங்கு பொரு­ளா­தாரம் பெரி­ய­ளவில் செழிப்­பாக இருக்­க­வில்லை.

அவ்­வா­றான நிலையில் இலங்கை விமா­னப்­ப­டைக்கு உக்­ரே­னிடம் இருந்தும், ரஷ்யா, கசகஸ்தான், லித்து­வே­னியா போன்ற நாடு­க­ளிடம் இருந்தும் வாங்­கப்­பட்ட அன்­டனோவ்- 32, அன்­டனோவ் -24 விமா­னங்­க­ளையும், எம்.ஐ. 17 மற்றும் எம்.ஐ 24 ஹெலி­கொப்­டர்­க­ளையும், மிக்-29 போர் விமா­னங்­க­ளையும் இயக்­கு­வ­தற்கு உக்­ரேனில் இருந்து விமா­னிகள் கூலிப்­ப­டை­க­ளாக இங்கு வந்­தனர்.

போர்­மு­னையில் அவர்கள் பணி­யாற்­றி­ய­துடன், தாக்­கு­தல்­க­ளிலும் ஈடு­பட்­டனர். அவர்­களில் சிலர், புலி­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்ட விமா­னங்­களில் உயி­ரி­ழக்­கவும் நேரிட்­டது.

இன்று நிலைமை மாறி, இலங்கைப் படை­யினர் உக்­ரே­னுக்கு கூலிப்­ப­டை­க­ளாகச் செல்­கின்­றனர். உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடு­க­ளு­டனும் நெருங்­கிய உறவை வைத்­தி­ருக்கும் இலங்­கைக்கு இது சிக்­க­லான ஒரு நிலையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

உக்­ரேனில் இலங்­கையைச் சேர்ந்த மூன்று கூலிப்­ப­டை­யினர், ரஷ்யப் படை­களின் ஆட்­டி­லறி தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட தகவல் வெளி­யா­கிய நிலையில் கடந்­த­வாரம் ரஷ்ய பாது­காப்பு சபையின் செய­லாளர் நிக்­கலோய் பட்­ரூசெவ் தலை­மை­யி­லன உயர்­மட்ட குழு­வொன்று, கொழும்பு வந்து அமைச்சர் கள் டிரான் அலஸ், விஜே­தாச ராஜபக்ஷ மற்றும் பாது­காப்பு உயர் அதி­கா­ரி­க ளைச் சந்­தித்து பேச்சு நடத்­தி­யது.

இந்தச் சந்­திப்பில் இலங்கைப் படை­யினர் உக்­ரேனில் கூலிப்படைகளாக பணியாற்றுவது தொடர்பாக ரஷ்யா எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்று அரசாங்க வட்டா ரங்கள் கூறியிருந்தன. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகமும் இந்த விடயம் தொடர்பாக மௌனம் காத்து வருகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் இருந்து கூலிப்படையினர் உக்ரேன் செல்வதை ரஷ்யா விரும்பாது. அதற்கு முடிவு கட்டுவதற்கு ரஷ்யா வேறு பல உபாயங்களைக் கையாளக்கூடும். அதேவேளை இலங்கை அரசாங்கம், கூலிப்படையினர் உக்ரேனுக்கு செல்வதை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டது.

அதற்கான சட்டங்கள் இல்லை என்றும், சட்டவிரோதமாக செல்பவர்களை கண்ட றிந்து தடுப்பது கடினம் என்றும் அரசதரப்பு கூறுகிறது. கூலிப்படையினராகச் செல்பவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான டொலர்கள் கிடைக்கும் என்றால் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.

ஆனால், அந்த டொலர்களை விட, ரஷ்யாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பதை அரசாங்கம் இலகுவில் மறந்துவிடாது

Share.
Leave A Reply