பொது­ஜன பெர­முன தேசிய மாநாட்டை நடத்தி முடித்­தி­ருக்­கின்ற நிலையில், இது­வ­ரையில் அமை­தி­யாக இருந்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தாம் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார்.

அவர் இந்த அறி­விப்பை கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளி­யிட்­ட­தா­கவும், அமைச்­சர்­களை ஒத்­து­ழைக்­கு­மாறு கோரி­யி­ருந்தார் என்றும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. அவ­ருக்கு அமைச்சர் ஷெஹான் சேம­சிங்க வெளிப்­ப­டை­யா­கவே ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அண்­மையில் கொழும்பில் நடந்த பொது­ஜன பெர­மு­னவின் மாநாட்டில், மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் நிகழ்த்­திய உரை, மீண்டும் கட்­சியை பழைய நிலைக்கு கொண்டு வரு­வதில் அவர்கள் உறு­தி­யாக இருக்­கின்­றனர் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யது.

சிங்­கத்தை சீண்ட வேண்டாம் என்று எச்­ச­ரித்தார் பஷில் ராஜபக்ஷ. மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வருவோம் என்று கர்­ஜனை செய்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.

இருந்­தாலும் ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை போட்­டியில் நிறுத்­து­வது என்ற எந்த அறி­விப்பும் இந்த மாநாட்டில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அத்­துடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, பஷில் ராஜபக் ஷ முன்னர் வகித்த தேசிய அமைப்­பாளர் பத­விக்கு யாரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

அந்த இடம் நிரப்­பப்­ப­டாமல் இருப்­ப­தற்கு காரணம் கூறப்­ப­டவும் இல்லை. இந்த மாநாடு முடிந்த கையோடு, பஷில் ராஜபக் ஷ அமெ­ரிக்­கா­வுக்குப் புறப்­பட்டுச் சென்­றி­ருக்­கிறார்.

அவர் சில வாரங்களுக்குப் பின்­னரே நாடு திரும்­புவார். அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தாயின், தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை துறந்து விட்டு நாடு திரும்ப வேண்டும்.

எவ்­வா­றா­யினும், பஷிலின் தேசிய அமைப்­பாளர் பதவி வெற்­றி­ட­மாக இருப்­ப­தற்­கான காரணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­பது பல்­வேறு ஊகங்­களை உரு­வாக்கி வரு­கி­றது.

இந்­த­நி­லையில் தேசிய அமைப்­பாளர் பத­விக்கு வர்த்­தகர் தம்­மிக்க பெரே­ராவை நிய­மிக்க வேண்டும் என்றும், அவ­ரையே மொட்­டுவின் வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றக்க வேண்டும் என்றும் அந்தக் கட்­சி­யினர் சிலர் கோரி­யி­ருக்­கின்­றனர்.

தம்­மிக்க பெரேரா உள்­ளிட்ட நான்கு பேர், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வ­தற்­கான பரி­சீ­ல­னையில் இருப்­ப­தா­கவும், ஆனால், எந்த முடிவும் நிறை­வேற்றுக் குழுவில் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் கட்­சியின் பொதுச் செய­லாளர் சாகர காரி­ய­வசம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இவ்­வா­றான நிலையில் தான், அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில், தாம் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடப் போவது குறித்த அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கிறார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

அடுத்த ஆண்டு ஒக்­டோபர் 17ஆம் திக­திக்குள் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட வேண்டும்.

இந்த தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிப்­ப­தா­கவும், முதலில் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­ப­டு­வ­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கின.

எவ்­வா­றா­யினும், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க வர­வு­செ­லவுத் திட்ட உரையில் கூறி­ய­படி, முன்­னரோ பின்­னரே, அடுத்த ஆண்டு நாடா­ளு­மன்றத் தேர்­தலும், ஜனா­தி­பதி தேர்­தலும் நடத்­தப்­படும் என்று தெரி­கி­றது.

பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ர­வுடன் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தான் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் திட்டம்.

அதுவே தனது வெற்­றியை உறுதி செய்யும் என்று அவர் எதிர்­பார்க்­கிறார்.

அதே­வேளை, இந்தப் போட்­டியில் சஜித் பிரே­ம­தாச குதிக்­காமல் இருக்க வேண்டும் என்­பதும் அவ­ரது எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

சஜித் பிரே­ம­தாச போட்­டியில் குதித்தால், ஐ.தே.கவின் பாரம்­ப­ரிய வாக்­குகள் பிள­வு­படும். அது தனது வெற்­றியைப் பாதிக்கும் என்­பதால், சஜித்தை போட்­டியில் இருந்து விலகச் செய்­வ­தற்கு ரணில் தரப்பு கடு­மை­யான முயற்­சி­களை முன்­னெ­டுக்கும்.

அதே­வேளை சஜித்­துக்கு இது சவா­லான தேர்­த­லாக இருக்கும். ஏனென்றால், பல­முறை வாய்ப்­பு­களை நழுவ விட்­டவர் அவர். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்தில் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­கு­மாறு பல­முறை அவரைக் கேட்­டி­ருந்தார். ஆனால், அவர் அதனை ஏற்­க­வில்லை.

பின்னர், பொரு­ளா­தார நெருக்­க­டியின் உச்­சத்தில், கோட்­டா­பய ராஜபக் ஷவும், சஜித் பிரே­ம­தா­சவை பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­கு­மாறு அழைத்­தி­ருந்தார். அத­னையும் அவர் நிரா­க­ரித்தார்.

அதற்குப் பின்னர் தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ராஜபக் ஷவினர் பிர­த­ம­ராக்­கினர். அதன் மூலமே அவர் ஜனா­தி­பதி பத­வியை அடை­யவும் முடிந்­தது.

பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­கும்­படி தன்­னிடம் 70 தட­வை­க­ளுக்கு மேல் கோரப்­பட்­ட­தாக சஜித் பிரே­ம­தாச பெரு­மை­யாக பல­முறை கூறி­யி­ருக்­கிறார்.

அவர் இப்­போது அர­சாங்­கத்தை மிக கடு­மை­யாக எதிர்த்து வரு­கிறார். விமர்­ச­னங்­களை முன்­வைக்­கிறார். பாரா­ளு­மன்­றத்தில் வர­வு­செ­லவுத் திட்ட விவா­தத்தில், ஒவ்­வொரு நாளும் உரை­யாற்­றிய அவர், அர­சாங்­கத்தை விளாசித் தள்ளிக் கொண்­டே­யி­ருந்தார்.

அவ­ரது இந்தச் செயற்­பாட்­டினால் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஆடிப் போனார். அதனால் தான் அவர், வர­வு­செ­லவுத் திட்ட விவா­தத்தில் உரை­யாற்­றிய போது, நெருக்­க­டி­யான நேரத்தில் நாட்­டுக்கு தலைமை தாங்கும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இல்­லா­த­வர்கள், வாய்ச் சவ­டாலில் ஈடு­ப­டு­கின்­றனர் என்று சஜித்தை குத்திக் காட்­டி­யி­ருந்தார்.

குறுக்கு வழியில் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்­பு­களை நிரா­க­ரித்­தவர் என்ற பெயர் தனக்கு சாத­க­மா­னது என்று கரு­தி­யி­ருந்தார் சஜித்.

ஆனால், பொரு­ளா­தார நெருக்­க­டியில் நாட்டை பொறுப்­பேற்க மறுத்தார் என அவர் மீது எதிர்­ம­றை­யான கருத்தை உரு­வாக்கும் பிர­சா­ரத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

இவ்­வா­றான நிலையில் மீண்டும் ரணி­லுடன் மோது­வதை தவிர்த்துக் கொண்டால், துணிச்சல் இல்­லாத, முது­கெ­லும்­பற்ற அர­சியல் தலை­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் நிலை சஜித்­துக்கு ஏற்­படும்.

அதனால் அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை தன்­மா­ன­மா­கவே பார்க்கும் நிலை உள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமை­தி­யாக இருந்­தி­ருந்தால், சஜித் ஒரு­வேளை இறங்கி வந்­தி­ருக்க கூடும். அவரை சவாலை எதிர்­கொள்ளத் துணி­வில்­லாத தலை­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்த முயன்­றதன் எதிர்­வி­ளைவு, இப்­போது அவ­ருக்கே பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

இனிமேல் சஜித் பிரே­ம­தா­சவை போட்­டியில் இருந்து விலகச் செய்­வது கடி­ன­மா­னது. அவ்­வாறு போட்­டி­யிடத் தயங்­கினால், அவர் தலை­மைத்­து­வத்­துக்கு தகு­தி­யற்­றவர், போட்­டிக்கு துணிச்­ச­லில்­லாத தலைவர் என்ற அடை­யாளம் நிலைத்து விடும்.

அவ­ரது அர­சியல் எதி­ரிகள் அத்­த­கைய தோற்­றப்­பாட்டை உரு­வாக்கி விடு­வார்கள்.

பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ர­வுடன் போட்­டி­யிட்­டாலும், அதன் ஆத­ரவு இல்­லாமல் போட்­டி­யிட்­டாலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஜனா­தி­பதி தேர்தல் ஒன்றும் இல­கு­வா­ன­தாக இருக்­காது.

பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் இருந்து நாட்டை மீட்­பது மட்டும் தான் தனது இப்­போ­தைய இலக்கு என்று கூறி­வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வர­வு­ செ­லவுத் திட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதும், ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் அறி­விப்பை அமைச்­ச­ர­வையில் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

நாடு நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருந்த நேரத்தில் அவர் நாட்டைப் பொறுப்­பெ­டுத்தார் என்­பது உண்மை.

வங்­கு­ரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்­ட­தா­கவும் அவர் அண்­மையில் கூறி­யி­ருந்தார்.

அடுத்த சில நாட்­க­ளி­லேயே மத்­திய வங்கி ஆளுநர் அதற்கு முர­ணான கருத்தை வெளி­யிட்டார்.

நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டதே தவிர, வங்­கு­ரோத்து நிலையை அடை­ய­வில்லை, அவ்­வா­றான அறி­விப்பு வெளி­யி­டப்­ப­டவும் இல்லை என்று, மத்­திய வங்கி ஆளுநர் நந்­தலால் வீர­சிங்க கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின் நாட்டை நெருக்­க­டியில் இருந்து மீட்டார் என்­பது மட்­டுமே சரி­யா­னது, வங்­கு­ரோத்து நிலையில் இருந்து மீட்டார் என்று பெருமை கொள்ள முடி­யாது.

எவ்­வா­றா­யினும் கோட்­டா­பய ராஜபக் ஷவின் தவ­றான முடி­வு­களால் நெருக்­க­டியில் சிக்­கிய நாட்டை, ஓர­ள­வுக்கு சரி­யான திசைக்கு திருப்பி விட்­டி­ருக்­கிறார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

இது மட்டும் அவ­ரது வெற்­றிக்குப் போது­மா­ன­தல்ல. அவர் நாட்டு மக்­களின் நம்­பிக்­கை­யையும், ஆத­ர­வையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொரு­ளா­தா­ரத்தைப் பலப்­ப­டுத்­து­வது என்ற போர்­வையில் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணிந்து, அவர் எடுத்த பல முடி­வுகள் மக்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.

அந்த நெருக்­க­டியின் விளை­வு­களை அவர் தேர்­தல்­களில் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும்.

சிங்­கள மக்­களின் ஆத­ரவு மட்டும் அவ­ருக்கு போதாது, தமிழ் மக்­களின் ஆத­ரவும் தேவை.

அதனைப் பெற்றுக் கொள்­வதில் அவர் இது­வரை வெற்றி பெற­வில்லை. அது அவ­ருக்கு இல­கு­வா­ன­தாக இருக்கப் போவதும் இல்லை.

இத்­த­கைய கட்­டத்தில் மஹிந்த ராஜபக் ஷ வெளி­யிட்­டி­ருக்­கின்ற ஒரு அறிக்கை, அர­சாங்­கத்தில் தாங்கள் அங்கம் வகித்­தாலும், அர­சாங்கத் தலை­வ­ரதும் அவ­ரது கட்­சி­யி­னதும் கொள்­கை­யுடன் ஒத்துப் போக­வில்லை என்று கூறி­யி­ருக்­கிறார்.

முன்னர் தங்களின் அரசாங்கம் தான் நடக்கிறது என்று கூறிய மஹிந்த ராஜபக் ஷ, இப்போது, ரணிலின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக கூறுகிறார்.

வற் வரி அதிகரிப்பு விவகாரம் அடுத்த தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் அர்த்தம், அரசாங்கத்தின் வரி கொள்கையுடன் உடன்படவில்லை என்பது தான்.

ஆனால் வற் வரி அதிகரிப்பு மற்றும் வரவுசெலவுத் திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் தனது கட்சியின் ஆதரவுடன் ரணில் வெற்றி பெறவில்லை.

பொதுஜன பெரமுனவே இவற்றை நிறைவேற்றிக் கொடுத்தது.

ஆனால், இப்போது, அதனை ரணிலின் நடவடிக்கைகளாக அடையாளப்படுத்தி விட்டு ஒதுங்கப் பார்க்கிறார் மஹிந்த.

ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துக்காகவே ஆதரவை வழங்கியதாக அவர்கள் கூறலாம்.

அதேவேளை, தேர்தலில் அதனையே ரணிலுக்கு எதிரான ஆயுதமாகவும் ராஜபக் ஷவினர் மாற்றக் கூடும்.

இவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு போட்டியும் சவாலும் கடுமையானதாகவே இருக்கப் போகிறது.

Virakesari

Share.
Leave A Reply