காஸாவில் போருக்கு பின்­ன­ரான தீர்வுத் திட்டம் என்­ன­வாக இருக்கும் என்­பதில் பல்­வேறு ஊகங்கள் எழுந்­துள்­ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்­தீ­னிய அதி­காரம் திரும்­புதல், அல்­லது அரபு – சர்­வ­தேச இரா­ணுவ அமை­திப்­படை பிர­சன்னம் அல்­லது இஸ்­ரே­லிய மறு ஆக்­கி­ர­மிப்பு ஆகிய அனைத்தும் காஸாவின் எதிர்­கா­லத்­திற்­கான திட்­டங்கள் என இரா­ணுவ அர­சியல் ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

அரபு – சர்­வ­தேச அமை­திப்­படை

ஆயினும், அரபு -சர்­வ­தேச அமை­திப்­படை பிர­சன்­னத்தை விட மீள இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு நிகழ்ச்சி நிரலே சாத்­தி­ய­மாக இட­முண்டு.

காஸா போரின் உட­னடி தாக்கம் என்­பது, மத்­திய கிழக்கு முழு­வதும் மேலும் பரவும் பயங்­க­ர­மான சூழ்­நி­லையை உரு­வாக்கும் என்றே முதலில் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஹமாஸ் அமைப்பு, தெற்கு இஸ்­ரேலில் ஊடு­ருவி தாக்­கிய பிறகு, போரில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஈடு­பட்­டுள்ள பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு முக்­கிய கேள்­வி­யாக, காஸாவின் எதிர்­கா­லத்தில் கவனம் செலுத்­து­வது இப்­போது மிகவும் முக்­கி­ய­மா­னது.

போர் முடி­வின்­ பி­றகு காஸாவில் என்ன அர­சியல் ஒழுங்கு உரு­வாகும் என்­பது தெளி­வாக இல்லை. எவ்­வா­றா­யினும், அமெ­ரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் பலஸ்­தீன அதி­கார சபையின் பிர­தி­நி­திகள் முன்­னணி பாத்­தி­ரத்தை வகிப்­பது முக்­கியம் என்று ஜோ பைடன் நிர்­வாகம் தனது கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆயினும் காஸா பகு­திக்குள் இஸ்ரேல் அத்துமீறி புகுந்து ஹமா­ஸிடம் இருந்து அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வது சட்­ட­பூர்­வ­மற்­ற­தா­னது என பல அரபு நாடுகள் கரு­து­கின்­றன. இந்த யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் காஸாவில் ஹமா­ஸுக்குப் பதி­லாக பலஸ்­தீ­னிய அதி­கார சபையில் மஹ்மூத் அப்பாஸ் தலைமை ஏற்பதற்கான சாத்­தி­யக்­கூ­று­களை பைடன் அரசு சுட்­டிக்­காட்டி உள்­ளது. இருப்­பினும், இந்த யோசனை மிகவும் சிக்­க­லா­னதாகும். காஸாவில் உள்ள பலஸ்­தீ­னி­யர்­களில் ஒரு சிறிய சத­வீ­தத்­தினர் மட்­டுமே அப்­பாஸின் அர­சுக்கு ஆத­ரவு தெரி­விக்­கின்­றனர்.

காஸாவில் அப்பாஸுக்கு ஆத­ரவு இல்லை:

அக்­டோபர் 7 ஆம் திகதி நடந்த திடீர் தாக்­கு­த­லுக்கு இஸ்­ரேலின் பதி­ல­டியின் எதிர்­பா­ராத விளை­வு­களில் ஒன்று, பல ஆண்­டு­க­ளாக மேற்குக் கரையில் ஆத­ரவை இழந்து வரும் அப்­பாஸின் ஃபத்தா கட்­சியின் ஆத­ரவு மேலும் குறை­வ­தாகும். ஆனாலும் ஹமாஸின் புகழ் அதி­க­ரித்­தது என்­பது உண்­மையே.

பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு எதி­ரான யூத குடி­யேற்­ற­வா­சி­களின் ஆத்­தி­ர­மூட்டும் நட­வ­டிக்­கை­களைத் தடுக்க இஸ்ரேல் எந்­த­வி­த­மான கரிசனையையும் காட்­டா­த­போது அல்­லது இஸ்­ரே­லு­ட­னான ஒத்­து­ழைப்புடன் மஹ்மூத் அப்பாஸ் அரசால் என்ன நன்­மைகள் ஏற்படப்போகின்றன என்ற பலஸ்­தீன மக்­களின் ஆவே­சமும் உள்­ளது.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரு­ச­லேமில் என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பதன் பிர­தி­ப­லிப்­பாக, காஸாவில் உள்ள பலஸ்­தீ­னி­யர்கள் மஹ்மூத் அப்பாஸ் அரசு ஆட்­சியை ஏற்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே கரு­து­கின்­றனர்.

ஆயினும் ஜன­நா­யக வழியில் காஸாவில் பலஸ்­தீ­னி­யர்­கள் சுதந்­தி­ர­மான மற்றும் நியா­ய­மான தேர்­தல் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் மிகக் குறைவு என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

காஸா நகரில் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்­களால் ஏற்­பட்ட அழிவின் மத்­தியில் இடம்­பெ­யர்ந்த பலஸ்­தீ­னி­யர்கள் அக­தி­க­ளாக அல்­லல்­படும் வேளையில், எந்த ஒரு அரபு நாட்டின் இரா­ணு­வமும் தங்களுக்கு உத­வ­வில்லை என்ற ஆதங்­கமும் உண்டு.

போருக்கு பிந்­திய நிர்­வாகம்:

காஸாவில் போருக்குப் பிந்திய நிர்­வா­கத்தை நிர்­வ­கிக்கும் அர­பு-­ சர்­வ­தேச அமை­திப்­படை பற்றி சில எண்­ணங்கள் உள்­ளன. ஆனால், அரபு நாடு­களின் கண்­ணோட்­டத்தில், பலஸ்­தீ­னத்தை இஸ்­ரேலும் அதன் மேற்­கத்­திய ஆத­ரவு அர­சு­க­ளுமே நிர்­வா­கிக்க வேண்­டிய நெருக்­கடி என்றும், அதை நிர்­வ­கிப்­பது அரபு நாடு­களின் பொறுப்­பல்ல என்ற கண்­ணோட்­டமும் உள்­ளது.

மேலும், காஸாவின் பாது­காப்பு பொறுப்பில் அமர்த்­தப்­படும் எந்­த­வொரு அமை­திக்­கான அரே­பிய இரா­ணுவப் படையும் பெரும் ஆபத்­துக்­க­ளுக்கு உட்­படும். பஹ்ரேன், எகிப்­து, அல்­லது ஜோர்­தா­னியப் படைகள் இஸ்­ரேலின் பங்­கா­ளி­க­ளா­கவே மாற வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும் என்ற அச்­சமும் உள்­ளது.

இத­னா­லேயே போருக்குப் பிந்திய காஸா ஆளு­கையின் பொறுப்பை அரபு – சர்­வ­தேச அர­சுகள் ஏற்­றுக்­கொள்­வதற்கான சாத்­தி­யங்கள் அரி­தாக உள்­ளன. காஸாவில் தற்­போ­தைய மோத­லுக்குப் பிறகு பொது­மக்கள் மேலும் கடும் ஆத்­தி­ரத்­துடன் இருக்கும் தரு­ணத்தில், காஸா ஆளு­கையின் பொறுப்பை அரபு – சர்­வ­தேச அர­சுகள் ஏற்­றுக்­கொள்­வதை எப்­படி ஏற்றுக் கொள்­வார்கள் என்ற சந்­தே­கங்­களும் உள்­ளன. காஸாவில் மனி­தா­பி­மான தேவைகள் அதி­க­மாக இருக்கும் இந்த வேளையில், மக்கள் ஆத்­திரம் மற்றும் வெறுப்பு நிறைந்­த­வர்­க­ளாக உள்­ளார்கள்.

டிசம்பர் மாத தொடக்­கத்தில் பஹ்ரேனில் நடந்த ஐ.ஐ­.எஸ்.எஸ் (IISS) மனமா பாது­காப்பு உச்சி மாநாட்டில் ஜோர்தானின் வெளி­யு­றவு அமைச்சர் அய்மன் சஃபாடி பேசு­கையில், காஸா­வுக்கு அரபு துருப்­புக்கள் எதுவும் செல்­லாது என்றும் அரபு நாடு­களை பலஸ்­தீன பொது­மக்கள் எதி­ரி­க­ளாக பார்க்க வேண்­டிய தேவை­யில்லை என்றும் வலி­யு­றுத்­தினார். அரபு அமை­திப்­படை பற்­றிய யோசனை நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும் என்­பதில் அரபு அர­சாங்­கங்கள் முழு­தாக உடன்­ப­டு­கின்­றன என்று ஜோர்­தானின் தலைமை இரா­ஜ­தந்­திரி வலி­யு­றுத்­தினார்.

காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்­கி­ர­மிப்பு

பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­ஹுவின் தீவிர வல­து­சாரி அர­சாங்கம், எதிர்­கா­லத்தில் காஸா ஆளு­கையில் இஸ்ரேல் நேரடிப் பங்கை வகிப்­பதைப் பற்றிக் குரல் கொடுத்­துள்­ளது. ஆயினும் ஹமா­ஸுக்குப் பிந்திய கால­கட்­டத்தில், காஸா மீதான நேரடி இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு திரும்பக் கூடாது என்று அமெ­ரிக்க பைடனின் நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது. 6,000க்கும் மேற்­பட்ட குழந்­தைகள் உட்­பட குறைந்­தது 18,000 பாலஸ்­தீ­னி­யர்கள் காஸாவில் அக்­டோபர் 7 முதல் இஸ்­ரேலிய படையினரால் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

எனவே, இஸ்ரேல் காஸாவில் தனது இரா­ணுவப் பிர­சன்­னத்தை நிலை­நி­றுத்­து­வதில் உறு­தி­யாக இருந்தால், எதிர்­கா­லத்தில் காஸாவில் தொடர் வன்­முறை மற்றும் ஆயு­த­மேந்­திய எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு வழி­வ­குக்கும். இதுவே இஸ்­ரேலின் இரா­ணு­வத்­திற்கு தொடர்ந்து உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்தும்.

இஸ்ரேல் ஏற்­கெ­னவே நிலத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ளது, ஒரு தந்­தி­ரோ­பாய ஆக்­கி­ர­மிப்பு என்­பது அமை­திக்­கான வெற்­றி­யி­லி­ருந்து வெகு தொலைவில் உள்­ளது. அமைதி திரும்­பு­வது வெகு தொலைவில் தான்.

நிலைமை சீர­டை­வ­தற்கு நீண்ட காலம் ஆகும் என்று மிலனை தள­மாகக் கொண்ட சர்­வ­தேச அர­சியல் ஆய்­வுகள் நிறு­வ­னத்தின் (ISPI) அறிக்கை விளக்­கி­யுள்­ளது.

இறு­தியில், காஸாவில் போருக்குப் பிந்திய நிலை­மைக்கு இஸ்­ரே­லிய தலைமை ஒரு தெளி­வான, யதார்த்­த­மான மூலோ­பா­யத்தை வகுக்கத் தவ­றி­விட்­டது என்று உறு­தி­யாகக் கூறலாம். அதே­வேளை, பலஸ்­தீ­னி­யர்கள் அழிக்­கப்­பட்ட பகு­திக்கு மீண்டும் திரும்ப முடி­யாது. அத்­த­கைய மறு­சீ­ர­மைப்­புக்­கான பொரு­ளா­தார பலம் அவர்­க­ளிடம் இல்லை. எனவே, அவர்கள் எங்கு வாழ வைக்­கப்­ப­டு­வார்கள் என்­பதும் பாரிய கேள்­விக்­கு­றி­யாகும்.

இரு நாடுகள் தீர்வு

சர்­வ­தேச சமூகம், அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஒன்றியம் பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை காட்டுகின்றனவா என்பதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

துரதிஷ்டவசமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கொள்கை வகுப்பாளர்கள் ஹமாஸே மோதலுக்குக் காரணம் என்று மதிப்பிடுகிறார்கள். மோதலுக்கு ஹமாஸ் மட்டும் காரணம் அல்ல. பலஸ்தீனியர்கள் இஸ்ரேலை எதிர்க்கக் காரணமான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், காஸாவிலோ அல்லது இஸ்ரேலிலோ எந்த நேரத்திலும் அமைதி இருக்காது என்பது வரலாற்றுப் பாடமாகும்.

காஸாவில் இன்னொரு ‘நக்பா’ என்ற திட்டத்தை நிறைவேற்ற தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் முயலுமா என்பது பற்றி இப்போது கூற முடியாது விட்டாலும், இஸ்ரேல் அடைய விரும்பும் இன அழிப்பு இலக்குகள் ஆபத்தானவையாகவே தெரிகிறது.

ஐங்­கரன் விக்­கி­னேஸ்­வரா Virakesari

Share.
Leave A Reply