இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25 என்பதால் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், இவ்வருடம் இயேசு நாதர் அவதரித்த தலமாக கருதப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கொண்டாட்டங்கள் இல்லை.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் வடக்கு பகுதி மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்து அந்த அமைப்பினரின் மையமான காசா முனை பகுதியில் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 20,424 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்த போரின் தாக்கம் பாலஸ்தீன கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் பிரதிபலிக்கிறது.
ஜெருசேலமிற்கு தெற்கே உள்ள நகரம் பெத்லகேம். ஆண்டுதோறும் பெத்லகேம் நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. தெருக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பெத்லகேம் நகரில் வசிப்பவர்களின் வருவாய் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளதால் அம்மக்கள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இயேசு நாதர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள “சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி” (Church of the Nativity), வழக்கமாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு குறைந்த அளவே மக்கள் வந்துள்ளனர்.
போர் தொடங்கியதிலிருந்தே பெத்லகேம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவுகள் சுற்றுலா பயணிகளால் இரத்து செய்யப்பட்டன. அனைத்து விடுதிகளிலும் அறைகள் காலியாக உள்ளன. கிறிஸ்மஸ் மரங்கள், சிலுவைகள், மேரி சிலைகள் உட்பட பல பொருட்கள், வாங்குவதற்கு ஆட்களின்றி கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.
“அமைதிக்கான தூதர்” பிறந்த ஊரில் வாழும் மக்களுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரைவில் முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே பிரார்த்தனையாக உள்ளது.