எரியும் பிரச்னையின் புரியம் வடிவம் – யூதர்கள் இல்லாத ஜெருசலேம்

ஒட்டுமொத்த யூத இனமும் அப்படியரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கவே கஷ்டப்பட்டது. கடவுளுக்கு உகந்த இனம் என்றும், தேவதூதர் மோசஸின் வழி நடப்பவர்கள் என்றும் பெருமையுடன் சொல்லிக்கொண்டு என்ன பயன்?

ஜெருசலேம் இல்லை என்றால் ஒவ்வொரு யூதருக்கும் வாழ வீடில்லை என்றுதான் பொருள். நடமாடிக்கொண்டிருந்தாலும், உடலில் உயிர் இல்லை என்றே அர்த்தம். எங்கெங்கோ பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்த நடைப்பிணங்களாகத்தான் அவர்கள் தம்மை உணர்ந்தார்கள்.

கி.பி. 135-ல் நடந்த ரோமானியப் படையெடுப்புக்குப் பிறகு பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன.அவற்றுள் மிக முக்கியமான இரண்டைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

முதலாவது, யூதர்களுக்கும் ஜெருசலேமுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்று ரோமானிய அதிகாரபீடம் பார்த்துப் பார்த்துச் செய்த ஏற்பாடுகள்.

ஜெருசலேமில் இருந்த யூதர்களைக் கொன்று வீழ்த்தியது, அதில் முதல் நடவடிக்கை. தொடர்ந்து ஜெருசலேமின் சுற்றுப்புறங்களில் வசித்து வந்த யூதர்களையும் கவனமாகக் கைதுசெய்து நாடு கடத்தினார்கள். எங்காவது போய் ஒழி. இங்கே இருக்காதே என்பதுதான் ரோமானியர்களின் நிலை.

இதனடிப்படையில் இஸ்ரேல் (அன்று ஜுதேயா) யூதர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டு, சுற்று வட்டார தேசங்களில் அகதிகளாகப் போய் வசிக்கப் பணிக்கப்பட்டார்கள். சுற்று வட்டாரங்களிலும் ரோமானிய ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது என்றாலும், ஜுதேயாவிலிருந்து வரும் யூதர்கள் அங்கு மிகக் கவனமாக மூன்றாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டார்கள்.

தனிக் காலனிகளிலேயே அவர்கள் தங்கவைக்கப்பட்டார்கள். எப்போதும் கண்காணிப்புக் கழுகுகள் சுற்றிக்கொண்டே இருக்கும். யூதப்பள்ளிக்கூடங்கள் இழுத்துமூடப்பட்டன. யூத மதபோதனைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. “ரபி” என்கிற யூத ஆசிரியர்களை எப்போதும் ஒற்றர்கள் பின் தொடர்ந்துகொண்டே இருந்தார்கள். யூத மக்கள் மீண்டும் ஒருங்கிணைந்து புரட்சி, போராட்டம் என்று எதிலும் இறங்கிவிடாதபடிக்கு ஒட்ட நறுக்கிவைக்க எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இரண்டாவதாக, ஜெருசலேம், ஜுதேயா என்கிற பெயர்களையே அவர்கள் சிந்தனையிலிருந்து துடைத்து அழித்து விடும்படியாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜெருசலேம் நகரம், ஏலியா கேப்டோலினா (Aelia Capitolina) என்கிற பெயரால் அழைக்கப்படத் தொடங்கியது.

ஜுதேயா என்கிற தனி நாடு, சிரியாபலஸ்தினா என்கிற பிராந்தியத்தின் பெயரையே தன் சொந்தப்பெயராக ஏற்கவேண்டியதானது. அதாவது, இனி ஜுதேயா கிடையாது. ஜெருசலேமும் கிடையாது. அங்கே யூதர்கள்? கிடையவே கிடையாது.

ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். அந்தக் காலத்தில் “தேசம்” என்று வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மிகவும் சிறிது. இன்றைய மாவட்டங்கள், மாநிலங்கள் அளவுக்குக் கூடக் காணாது. அன்றைய பாலஸ்தீன் நிலப்பரப்பில் ஜுதேயாவைப் போல நான்கைந்து “தேசங்கள்” இருந்தன. உங்களிடம் பைபிள் பிரதி இருக்குமானால், எடுத்து கடைசிப் பக்கங்களைப் பாருங்கள். “பலெஸ்தினா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்” என்று குறிப்பிட்டு மிகத்தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்.

இது மேயா, ஜுதேயா, பெரேயா, தெக்கப்போலி, சமாரியா, பெனிக்கியா, கலிலேயா என்கிற பெயர்களைத் தற்காலப் பெயர்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காணுவதில் சிறு குழப்பங்கள் நேரலாம். ஒரு தற்கால அட்லஸைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டால் புரிந்துவிடும்.

எதற்கு இந்த விவரங்கள் என்றால், ஜெருசலேமைச் சுற்றிக் குறைந்தது நூறு மைல் பரப்பளவுக்காவது எந்த யூதரும் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் அன்றைய ரோமானிய அரசின் பிரதான கவனமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டவே.

சிமோன் பார்கொச்பாவின் மரணத்துக்குப் பிறகு யூதர்கள் புரட்சி குறித்து மீண்டும் சிந்திக்கவே எப்படியும் பல காலம் ஆகக்கூடும் என்று ரோமானிய தலைமைப்பீடம் நினைத்தது. இருப்பினும் பாதுகாப்பு விஷயத்தில் அசிரத்தையாக இருக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள்.

இது, ஜெருசலேம் நகரின் கிறிஸ்துவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிப்போனது. யூதர்கள் இல்லாத ஜெருசலேமில் அவர்கள் மதப்பிரசாரம் செய்யவும் கிறிஸ்துவ தேவாலயங்களை எழுப்பி, தினசரி பிரார்த்தனைகளை நடத்தவும், மக்களை (அதாவது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களை) இயேசுவின் பாதையில் அழைக்கவும் சௌகரியமாக இருந்தது.

ரோமானியர்களைப் பொறுத்தவரை அப்போது யூதர்களை ஒடுக்குவது என்கிற திட்டத்துக்கு இந்த, கிறிஸ்துவப் பரவல் சாதகமான அம்சமாக இருந்ததால், கண்டுகொள்ளாமல் விட்டார்கள். ரோமிலும் அப்போது கிறிஸ்துவத்தின் செல்வாக்கு பெருகிக்கொண்டிருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஜெருசலேமில் மட்டுமல்லாமல் அந்நகரத்தின் யூதர்கள் அகதிகளாகத் துரத்தப்பட்ட பிற தேசங்களின் எல்லைப்புற முகாம்களிலும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட எந்தத்தடையும் இருக்கவில்லை!

யூதர்களுக்குப் பேச்சளவில்கூட நம்பிக்கை தர ஆளில்லாத சூழ்நிலை. எப்படியும் தங்கள் தேவதூதன் வந்தே தீருவான்; மீண்டும் இஸ்ரேலுக்குத் தாங்கள் திரும்பிப் போய், ஜெருசலேமின் ஆலயம் மீண்டும் எழுப்பப்படுவதைப் பார்ப்போம் என்கிற புராணகால நம்பிக்கை மட்டும்தான் அவர்கள் வசம் இருந்தது.

நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி அவர்கள் இருளில் நடைபயிலத் தொடங்கியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஒரு குரல். அதுவும் ரகசியக் குரல். ஓர் இருட்டுச் சிறைக்கூடத்திலிருந்து வந்த கிழக்குரல். எப்படியும் அந்தக் குரலுக்குத் தொண்ணூறுக்கு மேற்பட்ட வயது இருக்கும். நடுக்கம், குரலுக்குத்தானே தவிர, அதன் உறுதிக்கு அல்ல.அவர் பெயர் அகிவா. (Akiba ben Joseph என்பது முழுப்பெயர்.)

ஜெருசலேம் யூதர்களுக்கு முன்னரே மிகவும் பரிச்சயமான மனிதர்தான் அவர். அகிவா, ஒரு ரபி. மதப்பள்ளி ஆசிரியர். சிமோன் பார்கொச்பா புரட்சி செய்த காலத்தில் அவருக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, ரோமானியப் பேரரசுக்கு எதிராகக் கலகத்தைப் பரப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்.

புரட்சி நடந்த சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு, இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எங்கெங்கோ சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், ஜெருசலேம் மக்களுக்கு அகிவாவின் ஞாபகமே அப்போது சுத்தமாக இல்லை. அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்று கூட யோசிக்க முடியாமல் காலம் அவர்களை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது.

அப்படியரு தருணத்தில்தான் ஒரு சிறைச்சாலைக்குள்ளிருந்து அகிவாவின் ரகசியச் செய்தி, எழுத்து வடிவில் முதன்முதலில் யூதர்களுக்கு அனுப்பப்பட்டது. ஒன்று சொல்லவேண்டும். ஜெருசலேமில் அகிவா வசித்துவந்த காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர் எங்கே போனாலும் பின்னால் ஒரு படைபோல மாணவர்கள் நடந்து போவது, கண்கொள்ளாக் காட்சி என்று எழுதுகிறார்கள் அக்காலத்தில் வாழ்ந்த சரித்திர ஆசிரியர்கள்.

அந்த மாணவர்கள் சிலரின் உதவியுடன்தான் தமது செய்தியை யூத குலத்துக்குச் சிறையிலிருந்து அனுப்பத் தொடங்கினார் அகிவா.யூத சரித்திரத்தில் அகிவாவின் பெயர் இடம்பெற்றதன் காரணம், அவர் தமது வேத வரிகளின் உள்புகுந்து, அர்த்தத்துக்குள் அர்த்தம் தேடி, மக்களுக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் அதிலிருந்தே எடுத்துக் கொடுத்ததுதான் என்கிறார்கள் யூத ஆய்வாளர்கள்.

மோசஸுக்கு இறைவன் வழங்கியதாக நம்பப்படும் பத்துக் கட்டளைகள் அடங்கிய யூதர்களின் வேதமான “தோரா”, அதுவரை ஒரு மத நூலாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. வாழ்க்கைக்கான நெறிமுறைகளும் அதிலேயே இருக்கிறது என்று கண்டெடுத்துக்கொடுத்தவர் அகிவா.

இதனால்தான் “மோசஸின் ஆன்மாவே அகிவாவாக மீண்டும் வந்த”தென்று யூதர்கள் சொன்னார்கள்.சிறைக்கூடத்திலிருந்து அகிவா அனுப்பிய செய்திகள் எல்லாமே இந்த, தோராவிலிருந்து கண்டெடுத்த வாழ்வியல் ஒழுக்கப் பாடங்களாகவே இருந்தன. வாழ்க்கை அமைப்பு, அரசியல் அமைப்பு, சிவில் சட்டங்கள் என பார்த்துப்பார்த்து அவர் தேர்ந்தெடுத்து அனுப்பியவற்றின் அடியற்றித்தான் இன்றுவரையிலும் இஸ்ரேலின் சட்டதிட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

அகிவாவின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. தமது மக்கள் இன்று அநாதைகளாக இருக்கிறார்கள். இந்நிலை மாறும். நிச்சயம் ஒருநாள் அவர்கள்தம் புனித மண்ணை மீண்டும் பெறுவார்கள். அப்போது அமைக்கப்படும் யூதர்களின் ஆட்சி, யூதர்களின் வேதத்தை அடியற்றியதாக அமையவேண்டும்.

ரோமானிய, கிரேக்க இரவல் சட்டங்களின் நிழல் அதன்மீது படிந்துவிடக்கூடாது. மக்களின் வாழ்க்கை முறையிலும் அந்தத் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. யூதர்கள், யூதர்களாகவே இருக்கவேண்டும். மத நம்பிக்கையும் மொழி நம்பிக்கையும் அதன் அடிப்படைகள். அடிமைத்தளை அல்ல; சுதந்திரமே நிரந்தரமானது. அப்படியரு தருணம் வரும்போது அவர்கள் சுயமாக வாழத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்.இதனைக் கருத்தில் கொண்டுதான் தம் செய்திகளை சிறைச்சாலைக்கு உள்ளிருந்து வெளியே ஊடுருவ விட்டார் அகிவா.

நம்பமுடியாத ஆச்சர்யம், அவருக்கு அப்போது வயது தொண்ணூறு!தாம் எண்ணியதை ஓரளவு செம்மையாக நடத்தி முடித்துவிட்ட தருணத்தில், அகிவாவின் செயல்பாடுகள் ரோமானியச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்துபோனது.

அவர்கள் அந்தக் கிழவரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்கள்.அவரை நிற்கவைத்துக் கைகளை உயரக் கட்டி, கூர்மையான இரும்புக் குச்சிகளால் அவரது உடலைக் குத்தி, துண்டு துண்டாகச் சதையைக் கிள்ளி எடுத்தார்கள். கையளவு ரம்பத்தால் அவரது முதுகிலும் வயிற்றிலும் கீறிக்கீறி ரத்தம் கொட்டச் செய்தார்கள். நகங்களைக் கிள்ளியெடுத்து, தொடையில் சூடு போட்டார்கள். சிறு சிறு ஊசிகளைத் தீயில் வாட்டி அவர் முகமெங்கும் குத்தினார்கள்.

இத்தனை விவரங்களும் ஒன்றுவிடாமல் வெளியே இருந்த அவரது சிஷ்யர்களுக்கும் பிற யூதர்களுக்கும் அவ்வப்போது அரசாங்க ஊழியர்களாலேயே “அழகாக” விவரிக்கப்பட்டன. துடித்துப்போனது யூதகுலம்.அகிவா அனுப்பிய இறுதிச் செய்தியில் தனக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளைக் குறிப்பிட்டு, “வாழ்நாள் முழுவதும் உடலாலும் உயிராலும் ஆன்மாவாலும் இறைத்தொண்டு செய்வது என்கிற முடிவுடன் வாழ்ந்தேன். ஆன்மாவால் செய்யப்படும் இறைத்தொண்டு எத்தகையது என்பதை இப்போது நான் முழுவதுமாக அறிந்துகொண்டேன்”” என்று குறிப்பிட்டிருந்தார்!

சித்திரவதைகளின் இறுதியில் அகிவா மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தி யூதகுலத்துக்கு இறுதியாக இருந்த ஒரு நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது. சந்தேகமில்லாமல் தாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்துபோனது.இனி நம்பிக்கை ஒன்றைக் கொண்டுதான் அவர்கள் உயிர்வாழ்ந்தாகவேண்டும். அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம்!கிட்டத்தட்ட பாலஸ்தீன் நிலப்பரப்பு முழுவதிலுமே அப்போது கிறிஸ்துவம் பரவிவிட்டிருந்தது.

கிறிஸ்துவ மதத்தின் தலைமையகம் போலவே ஆகியிருந்தது ஜெருசலேம். அது, யூதர்களின் நகரம் என்பதை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த மாபெரும் அடையாளமான கோயிலும் அப்போது இல்லை. எங்கு திரும்பினாலும் கிறிஸ்துவ தேவாலயங்கள். பாதிரியார்களின் பிரசாரங்கள். பிரசங்கங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சுவரோவியங்கள், சிற்பங்கள், புதிய ஏற்பாட்டின் பரவல்.

நான் ஒரு யூதன் என்று சொல்லிக்கொண்டாலே பிரச்னை என்றானது யூதர்களுக்கு.என்ன செய்வது? எங்கே வாழ்வது? எப்படி மீண்டும் ஜெருசலேமுக்குப் போவது? இப்படியே கிடைத்த இடத்தில், அகதி முகாம்களில் வசித்தே காலம் கழிக்க வேண்டியதுதானா? ரோமானியர்களின் அடிமையாகவே வாழ்ந்து தீர்ப்பதுதான் எழுதி வைக்கப்பட்ட விதியா?யூதர்களின் மௌனக் கதறல் யார் காதிலும் விழவில்லை.

மாறாக, ஒரு சம்பவம் நடந்தது. முதன்முதலாக ஒரு ரோமானிய மன்னன், கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டு மதம் மாறினான். யூதர்கள் இடி விழுந்தாற்போல நொறுங்கிப்போனார்கள்.

” யூதப்புரட்சி.” ஒட்டுமொத்த யூதர்களும் இணைந்து போராடினார்கள். மன ஒருங்கிணைப்பு உலக சரித்திரத்தில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை(நிலமெல்லாம் ரத்தம் – 8)

Share.
Leave A Reply