களுத்துறை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வாதுவ, வஸ்கடுவ மற்றும் பொஹொத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாவர்.
பாதிக்கப்பட்ட பெண் குறித்த நிகழ்வில் பொலிஸ் சீருடையில் கடமையாற்றி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கு கடமையில் இருந்த ஏனைய பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.