இலங்கையின் தேசிய அரசியல் எப்போதுமே பேரினவாத பிரதிபலிப்புகளையே கொண்டிருக்கும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான 3 தசாப்த கால போர் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் போர் முடிவடைந்த பின்னரும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தையாகவே நாட்டின் அரசியலும் பேரினவாதமும் இருந்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம்.

இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட இனவாத நிலவரமும் கலவரங்களும் தேசிய அரசியலுடன் ஒன்றரக்கலந்தது.

இதன் தாக்கம் அதே ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை 69 இலட்சம் வாக்குகளால் அதீத பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்தது. வெறும் இனவாதத்தையும் இன குரோதத்தையும் அடிப்படையாக கொண்ட 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பௌத்த மேலாதிக்கம் முன்னிறுத்தப்பட்டிருந்தது.

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் சிறுபான்மை இனங்களின் வாழும் உரிமையை சவாலுக்கு உட்படுத்தி பௌத்த மேலாதிக்கத்தின் ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவினால் சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியாது போனது. இறுதியில் ஆட்சியை விட்டே ஓட வேண்டிய நிலைமையே ஏற்பட்டது. கோட்டாய ராஜபக்ஷவை பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் தாக்கப்பட்டனர். அவர்கள் உடைமைகளும் அழிக்கப்பட்டன.

இலங்கையின் ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு மக்களின் கொந்தளிப்புகளை சர்வதேச ஊடகங்கள் அனைத்துலகுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட வீரனாக சிங்கள மக்கள் உள்ளங்களில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, அதே மக்களின் கொந்தளிப்புகளுக்கு அஞ்சி திருகோணமலை கடற்படை முகாமில் குடும்பத்தாருடன் தஞ்சமடைந்தார். இதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் ராஜபக்ஷர்களின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.

பெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி பீடத்துக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், 2020ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு சென்றார். இந்த ஆட்சி அதிகார மாற்றம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மீண்டும் நாட்டை ஆளும் அதிகாரத்துக்காக ரணில் – ராஜபக்ஷ மக்கள் மத்தியில் செல்கின்றனர்.

2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என்றாலும் ரணில் – ராஜபக்ஷ ஆகிய இரு தரப்புகளுக்கும் உண்மையில் இதுவொரு அரசியல் தற்கொலை ஆட்டம்தான். ஏனெனில், ஜனாதிபதி தேர்தல் முதலில் வருமாயின், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவது உறுதி. ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக வரக்கூடிய அரசியல் ஆதரவு தரப்புகள் வலுவாக கூட்டணியமைக்காது தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டால், மறுபடி எந்தவொரு தேர்தலையும் ஜனாதிபதி ரணிலினால் எதிர்கொள்ள முடியாது போகும்.

ஐக்கிய தேசிய கட்சியோ, அந்த கட்சியின் ஆதரவாளர்களோ மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை ஏற்க மாட்டார்கள். மாறாக புதிய தலைமைத்துவத்தையே வலியுறுத்துவார்கள். மறுபுறம் அவ்வாறு தோல்வியடைந்தால், தேசிய அரசியலில் இருந்து ஓய்வு நிலைக்கு ரணிலுக்கு செல்ல நேரிடும். ஆனால், ஜனாதிபதி ரணிலின் எதிர்பார்ப்பு அடுத்து வரக்கூடிய 12 வருட ஆட்சி அதிகாரமாகும். இதனை முன்னிறுத்தியே சில நகர்வுகளையும் ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார். எவ்வாறாயினும், அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தல் என்றாலும் ஜனாதிபதி ரணிலை பொறுத்தவரையில் அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற ஒன்றாகவே அமையும்.

அதே போன்று தான் ராஜபக்ஷர்களின் நிலைமையும். 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் மக்கள் ஆதரவுமிக்க தலைவராகவே திகழ்ந்தார். இதற்கு பிரதான காரணமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியை குறிப்பிடலாம். போர் வெற்றியின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் மன்னராகவும் அடையாளப்படுத்தப்பட்டார். இனி வாழ்நாள் ஆட்சியாளராகவே மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்தார்.

ஆனால் 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்தது. இந்த தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தன்மை இந்தியாவே தோற்கடித்ததாக குற்றஞ்சாட்டிய மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வியூகங்களை தேசிய அரசியலில் வகுத்தார். அப்போதைய பிரதமராக இருந்த ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்களை தனக்கு சாதகமாக்கி பிரதமராகவும் பதியேற்றார். ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியை இடைநடுவில் பறித்தது.

தொடர் முயற்சிகள் மற்றும் அரசியல் வியூகங்கள் என்று 2019ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது என்று கூறுவதை விட மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெற்றார் என்று குறிப்பிடுவதே சரியானதாகும். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷ நிழலிலேயே பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவை கட்டமைத்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அரசியல் அதிகாரத்தை நோக்கி பொதுஜன பெரமுன நகர்த்தப்படுகிறது.

தேர்தல் தோல்விகளை ஏற்று, குறுகிய காலத்துக்குள் மீண்டும் தனக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் அரசியல் அறிவும் ஆளுமையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளது. ஆனால், இம்முறை அடைந்த பின்னடைவு தேர்தலால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, மக்கள் கொந்தளிப்புகளால் அதிகாரத்தை விட்டுச் செல்லும் நிலையே ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்டது. இதற்கு பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களே உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசியல் அனுபவமற்ற கோட்டாய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களை சரிசெய்ய பலமுறை மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்திருந்த போதிலும், அது முரண்பாடுகளையே தோற்றுவித்தன.

இந்த இரு முகாம்களுக்கு இடையிலான விரிசல்கள்; அரசியல் பொருளாதார நெருக்கடிகளை துரிதப்படுத்தியது. இதன் பின்னரே மக்கள் ராஜபக்ஷர்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டங்கள் வன்முறையாகியதால் ராஜபக்ஷர்கள் ஆட்சியை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறானதொரு அரசியல் பின்னடைவை ராஜபக்ஷர்கள் இதற்கு முன்னர் சந்தித்திருந்ததில்லை. எனவே ராஜபக்ஷர்கள் அரசியலில் நீண்ட அமைதியில் இருந்தனர். தற்போது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே எதிர்கால திட்டங்களை அறிவித்து வருகிறார். அரசியலிலிருந்து தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை என்ற விடயத்தையும் மஹிந்த கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியானது நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்தை மையப்படுத்தியது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் இனி வரும் தேர்தல்களில் மக்கள் மீண்டும் ராஜபக்ஷர்களை ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயப்பாடு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளது.

எனவேதான் ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து மஹிந்த – பஷில் கூட்டணி மீண்டும் சில வியூகங்களை வகுத்து வருகின்றது. எனவே, ஏனைய கட்சிகளை விட எதிர்வரக்கூடிய எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ரணில் – மஹிந்த ஆகியோருக்கு தீர்க்கமானதாக இருக்கும்.

(லியோ நிரோஷ தர்ஷன்)Virakesari

Share.
Leave A Reply