தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகள் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழு முன்னெடுத்தது.

இலங்கையில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடந்துள்ளதா?

இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகளை மேற்கோள் காட்டி ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

அதைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டி சுமார் 30 ஆண்டுக் காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. சம்பூர் கிராம பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி தொடர்பில், வெளி பகுதிகளுக்குப் போதிய தெளிவில்லாது இருந்தது.

தமது கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, இந்தப் போட்டிகளை சம்பூர் இளைஞர்கள் நடத்தி வந்துள்ளனர். எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மாத்திரம் இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, தாம் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் போட்டிகளைத் தாம் நடாத்த ஆரம்பித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

”தைப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த நிகழ்வைக் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் நடத்திக்கொண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக இந்தப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக வெளி ஊர்களில் இந்த நிகழ்வுகளைச் செய்யவில்லை. எனினும், இப்போது ஏற்பாட்டுக் குழு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் ஆதரவுடனும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றோம்,” என ஜல்லிகட்டு போட்டி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரான குணராசா ராஜரூபன் தெரிவிக்கின்றார்.

இதுவரை காலம் நடத்தப்பட்ட போட்டிகளில் 50 மாடுகள் வரை பங்கு பெற்றுள்ளன. திருகோணமலையை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பற்று, சம்பூர், 6ஆம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது மாடுகளை போட்டிகளுக்காக அழைத்து வருகின்றனர்.

இதுவரை காலம் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் குணராசா ராஜரூபன் பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

”இதுவரை காலமும் வீதியோரங்களிலேயே இந்தப் போட்டிகளை நடத்தி வந்தோம். மைதானங்கள் இருக்கவில்லை. இப்போது மைதானங்கள் இருக்கின்றன.

முன்பு மாடுகளைத் தேடி நாங்கள் சென்றோம். இப்போது மாடுகள் எங்களைத் தேடி வருகின்றன. இந்த நிகழ்வைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்,” என அவர் கூறுகின்றார்.

ஜல்லிக்கட்டு விளையாடும் நோக்கிலேயே காளை மாடுகளை வாங்கி வளர்த்து வரும், மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

”நாங்கள் இரண்டு மாடுகளை வளர்க்கின்றோம். சுட்டியன், மறையன் என்ற இரண்டு மாடுகளை வளர்த்து வருகின்றேன். இந்த மாடுகள் மூன்று ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு மாடுகளும் இன்று வரை ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஆண்டும் நாங்கள் ஜெயிப்போம் என்றுதான் நினைக்கின்றோம். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும்போது குறைந்ததாட்ச அளவிலான மாடுகளை வைத்தே ஆரம்பித்தோம். அப்போது பொருளாதார ரீதியான பிரச்னைகள், சட்ட பிரச்னைகள் இருந்தன.

ஆகையால் தொன்று தொட்டு வீதி வழியாகச் செய்து வந்தோம். இப்போது பிரதேச சபை மைதானத்தில் நடத்துகின்றோம். மூன்று ஆண்டுகளாக பிரச்னை இல்லை. சிறப்பாகச் செய்து வருகின்றோம்,” என மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன் குறிப்பிடுகின்றார்.

தேசிய ரீதியாக இந்த விளையாட்டு முதல் முறையாக நடத்தப்படுகின்ற காரணத்தால், இந்தப் பாரம்பரிய நிகழ்வு சம்பூரில் நடத்தப்படுகின்றமை வெளி உலகத்திற்குத் தெரிய வரும் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறுகின்றார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடுவதற்காகவே, இரண்டு காளை மாடுகளை வளர்த்து வருகின்றார் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை செல்வராஜா.

”முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் நாங்கள் கிராமபுறத்தில் செய்து வந்தோம். 2024 பொங்கலுக்கு கொஞ்சம் நன்றாக, பிரபல்யமாகச் செய்ய நாங்கள் விரும்பினோம். அதனால், போன வருடத்தில் நான் திட்டமிட்டேன்.

இரண்டு மாடுகளை வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். எனது காளைகளைப் பிடிக்க விட்டு, அதை வீரர்களால் பிடிக்க முடியாத அளவிற்கு வளர்த்து எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இரண்டு காளைகளை வேண்டி வளர்த்துக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆண்டும் எனது காளை பங்கேற்கிறது. கட்டாயமாகப் பிடிக்க மாட்டார்கள் என்பது எனது தீர்மானம். வெற்றி எனது மாட்டிற்குத்தான்,” என மாட்டின் உரிமையாளர் கணபதிபிள்ளை செல்வராஜா தெரிவிக்கின்றார்.

சம்பூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வெளி கிராமங்களில் இருந்தும் பெருமளவான காளை மாடுகள் அழைத்து வரப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளி கிராமத்தில் இருந்து காளை மாடுகளை அழைத்து வந்த மாட்டின் உரிமையாளர் கிருபராசா, பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

”ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மாடுகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 30 கி.மீ தூரம் நடக்க வைத்தே அழைத்து வந்தோம். ஒவ்வொரு தடவையும் கொண்டு வருவோம்,” என ஈச்சலம்பற்று பகுதியைச் சேர்ந்த கிருபராசா குறிப்பிடுகின்றார்.

”நாங்கள் 2013இல் இருந்து இந்த நிகழ்வில் பங்கு பெற்று வருகிறோம். எங்கட மாட்டைத்தான் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வோம். இந்த முறையும் கொண்டு செல்வோம். எனது மாடு நன்கு விளையாடும்,” என மாட்டின் உரிமையாளர் சுசிலாதேசி தெரிவிக்கின்றார்.

சம்பூரில் காளைகளைப் பிடிக்கும் வீரராக செல்வராஜா விஜயகுமார், தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.

”நான் தான் மாடுகளை பிடிப்பேன். மாடு பிடிக்கிறதாக இருந்தால், அது நான்தான். இந்த முறையும் இந்த மாட்டைப் பிடிப்பதற்கு நான் ரெடியாக இருக்கின்றேன்.

எனக்கு இப்போது 57 வயது, குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்திருப்பேன். ஒவ்வொரு வருஷமும் காளையைப் பிடித்து வருகின்றோம்,” என செல்வராஜா விஜயகுமார் தெரிவிக்கின்றார்.

ஆளுநரின் கருத்து

இலங்கையில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை, மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

”பொதுவாக தமிழ் கலாசாரத்தை உலகளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதைப் பாதுகாக்க வேண்டும். அது எல்லா தமிழர்களின் கடமை. அப்படி இருக்கும்போது ஏறு தழுவுதல் போட்டி மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்திற்கானது மாத்திரம் அல்ல.

உலகில் யாராக இருந்தாலும் உணவு உட்கொண்டுதான் வாழ வேண்டும். அதற்கு மாடுகள் மிக முக்கியம். அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து மாடுகளை வணங்குகிறோம்.

சோழர் காலத்தில் இலங்கையில் இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதன் பின்னரான காலப் பகுதியில் இல்லாமல் போனது,” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், “அந்தப் போட்டிகளைத் திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சோழர்களின் காலப் பகுதியில் நடாத்தப்பட்ட இந்த ஏறு தழுவுதல் போட்டியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகிறோம். முதல் தடவையாக ஆரம்பித்துள்ளோம்,” எனத் தெரிவிக்கின்றார்.

இந்த நிகழ்விற்கான காளை மாடுகளை எவ்வாறு தெரிவு செய்தீர்கள் என ஆளுநரிடம், பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

”தமிழகத்தில்தான் ஏறு தழுவுதலுக்கான சிறந்த காளைகள் இருக்கிறது. தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்த ஊரில் உள்ள காளைகளை வைத்து நடத்துகிறார்கள். அதே மாதிரிதான் இங்குள்ள காளை வைத்து நாங்கள் நடத்துகின்றோம்,” என அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கத்தின் தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் போட்டிகளில் பங்குபெற செய்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழ்

Share.
Leave A Reply