காஸாவில் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பலஸ்தீனர்களை முடக்கிவைப்பதற்கான நாடுகளை, குறிப்பாக எகிப்து மற்றும் ஜோர்தான் போன்றவற்றை, தேடிக்கொண்டிருப்பதாக காஸாவில் பலஸ்தீன இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தனது ஆதரவாளர் மத்தியில் குறிப்பிட்டதாக லண்டனை தளமாகக் கொண்ட இணையத்தளமான ‘மிடில் ஈஸ்ட் ஐ’ தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய அமெரிக்க – இஸ்ரேலிய கையாட்களான எகிப்தும் ஜோர்தானும் பலஸ்தீனர்களை தங்கள் எல்லைக்குள் அனுமதிப்பதை நிராகரித்துள்ளன. இந்நிலை 1948 இன் நக்பாவை நினைவுப டுத்துகிறது. அன்று சியோனிச ஆயுததாரிகள் 700,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களை அவர்களின் வரலாற்று தாயகத்திலிருந்து இன ரீதியாக சுத்திகரித்து இஸ்ரேல் என்ற போர் வெறி கொண்ட அரசை உருவாக்கினர்.
ஊழல்மிகு அரசியல் தலைவர்களுக்கு இலஞ்சம் வழங்கி, பலஸ்தீனர்களை அங்கே குடியமர்த்தக்கூடிய ஆபிரிக்க நாடுகளையும் இஸ்ரேல் தேடிக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் 2024 என்பது 1948 அல்ல, பலஸ்தீனர்கள் வேறு எங்கும் குடியேறுவதை விட காஸாவில் இறப்பதே சிறந்ததென சபதம் செய்துள்ளனர்.
இது தொடர்பில் புலிட்சர் பரிசு வென்ற அமெரிக்க பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் கூறியதாவது:
‘காஸாவுக்கான இஸ்ரேலின் மூலோபாயத் திட்டமானது ஜேர்மனியின் நாஸி அரசாங்கம் மேற்கொண்ட யூத இன அழிப்பினை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவு.
உட்கட்டமைப்பு, மருத்துவ சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீரைப் பெறுதல் உட்பட அனைத்தையும் அழித்தல், உணவு மற்றும் எரிபொருளின் ஏற்றுமதியைத் தடுத்தல், தொழிற்துறை வன்முறையை கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து, ஒரு நாளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொல்லுதலும், காயப்படுத்துதலும், பட்டினியை ஏற்படுத்துதலும் இத்திட்டத்தினுள் அடங்கும். ஐ.நா. வின் மதிப்பீட்டின் படி, அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே பட்டினியால் வாடுகின்றனர்.
மேலும் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகள், தினசரி இடம்பெறும் படுகொலைகள், தங்கள் வாழிடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்படல் என்பன காஸாவை ஒரு பாரிய சவக்கிடங்காக மாற்றியுள்ளன.
பலஸ்தீனர்கள் ஒன்றில் வெடிகுண்டுகளால் ஏற்படும் மரணம், நோய்த் தாக்கம், பட்டினிச்சாவு என்பவற்றாலோ அல்லது தமது தாயக பூமியிலிருந்து துரத்தியடிக்கப்படல் என்பவற்றுள் ஒன்றை தெரிவு செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மரண ஓலம் விரைவில் எங்கும் வியாபித்திருக்கும் நிலை தோன்றும். அப்போது வாழ விரும்புவோருக்கான ஒரே தெரிவாக நாடு கடத்தப்படுதலே அமையும்.
1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் காஸாவைக் கைப்பற்றியதுடன் அடக்குமுறை இராணுவ ஆக்கிரமிப்பை பயன்படுத்தி பலஸ்தீனர்களை குறை மனிதப் பிறவிகளாகக் கருதி நடத்த ஆரம்பித்தது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, 1967 ஆம் ஆண்டு ஜூன் முதல் நிலத்தை அபகரிக்கும் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற கொள்கைகள், சட்டவிரோத குடியேற்றம், நில அபகரிப்புகள், கடுமையான பாராபட்சம் என்பன பலஸ்தீனர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து பெரும் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இராணுவ ஆட்சியானது ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் சீர்குலைக்கின்றது.
பலஸ்தீனர்கள் எவ்வாறு, எப்போது, எப்படி வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது பாடசாலைக்குச் செல்ல வேண்டும், வெளிநாடுகளுக்குச் செல்வது, அவர்களது உறவினர்களைப் பார்ப்பது, வாழ்வாதாரத்தைச் சம்பாதிப்பது, போராட்டத்தில் கலந்து கொள்வது, அவர்களது விவசாய நிலங்களை பெறுவது, அல்லது மின்சாரம் அல்லது சுத்தமான நீர் வழங்குவது என அனைத்து அன்றாட செயற்பாடுகளிலும் தனது அத்துமீறிய செல்வாக்கைப் பிரயோகிக்கின்றது.
இவையனைத்தும் தினசரி அவமானம், பயம், அடக்குமுறையினை பிரதிபலிக்கின்றது. இவ்வகையில் இஸ்ரேலானது பலஸ்தீன மக்களின் முழு வாழ்வையும் பணயமாக வைத்துள்ளது.
இஸ்ரேல், ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களை அவர்களது நிலங்களில் இருந்து கட்டாயப்படுத்தி அகற்றி, அதனை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக பிரத்தியேக யூத இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் குடியேற்றங்களை உருவாக்கியுள்ளது.
பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் மட்டுமன்றி எல்லை தாண்டிய அத்துமீறிய குடியேற்றவாசிகளாலும் தாக்கப்படுகின்றனர். அத்துடன் இஸ்ரேல் தனது கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புகளை தகர்த்தெறிய கடுமையான இராணுவ சட்டங்களை கைக்கொள்கின்றது.
அத்துமீறிய குடியேற்றங்களால் முழு பலஸ்தீன சமூகங்களும் இடம்பெயர்ந்துள்ளன.
அவர்களது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, அவர்களின் நடமாட்டம், அவர்களது சொந்த நிலம், நீர் மற்றும் பிற இயற்கை வளங்களை பெறுதல் என்பவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலாக்கப்படுகின்றன.
மாறாக இஸ்ரேலர்கள், யூத குடியேற்றவாசிகள், வெளிநாட்டவர் ஆகியோருக்கு எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லாததோடு அவர்கள் காஸாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கு முழு சுதந்திரமும் பெற்றுள்ளனர்.
பல ஆண்டுகளாக, இஸ்ரேலின் அங்கீகரிக்கப்பட்ட அனுமதியுடன் பலஸ்தீனர்களுக்காக மட்டுமே திறந்திருக்கும் காஸாவிலிருந்து தரைவழியான எல்லை நுழைவுப் பாதை தவிர்ந்த ஏனைய அனைத்து பாதைகளையும் படிப்படியாக இஸ்ரேல் மூடியுள்ளது.
பலஸ்தீன எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக காஸாவில் இருந்து 2005 இல் வெளியேறிய போதிலும் அதன் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்தும் வைத்திருந்தது.
2007 ஆகும்போது காஸாவில் நகர்ப்புறம் மற்றும் பரந்துபட்ட இதரப் பிரதேசங்களிலும் தனது போட்டியாளரான ஃபத்தாஹ் அமைப்போடு தேர்தல்கள் மற்றும் மோதல்களிலும் வெற்றி பெற்ற ஹமாஸ் அமைப்பினர் ஏக ஆளும் அதிகாரமிக்கவர்களாக உருவெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் மென்மேலும் அதனை தனது கைப்பிடிக்குள்ளேயே வைத்து ஆக்கிரமிப்பைத் தொடர்கின்றது. அப்பிரதேசத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்லப்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தி கடுந்தடைகளை விதிக்கின்றது.
இவ்வாறு காஸா திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ட்ரோன்கள், ஒட்டுக்கேட்டல், உள்ளூரிலுள்ள உளவாளிகள், அட்டூழியங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி அதி தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும் நடைமுறையில் தூரத்திலிருந்து காஸாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை விட இது இஸ்ரேலுக்கு கடினமானதாக அமைந்தது. சிறைச்சாலைக்குள் கிடைத்த சிறிய இடைவெளி மற்றும் அவகாசத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலால் கண்காணிக்க முடியாத நிலக்கீழ் சுரங்கப்பாதை வலையமைப்பினைப் பயன்படுத்தி அதிநவீன வடிவிலான எதிர்ப்பு இயக்கத்தை ஹமாஸினால் உருவாக்க முடிந்தது.
இத்தகைய மூச்சுத்திணறும் சூழ்நிலையில், முழு உலகினாலும் ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையிலும், முடிவில்லாத இஸ்ரேலிய குற்றங்களை உதாசீனப்படுத்தும் நிலையிலும் இருந்த போதுதான், ஹமாஸ் ஆனது 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தது. அத்தோடு இஸ்ரேலுடன் மறைமுகமாக பழக ஆரம்பித்த அரபு நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு தெளிவான செய்தியை வழங்கியது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் முழு ஆதரவுடன், வான், கடல், நிலம் மூலம் பயங்கர அதிர்வலைகளை உருவாக்கி கண்மூடித்தனமாக குண்டுவீசி 85 சதவீதத்திற்கும் அதிகமான கட்டிடங்களை அழித்ததுடன் அப்பாவி பலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து, அவர்களை நடுங்கும் குளிரில் திறந்த வெளியில் தெருக்களில் வாழத் தள்ளியது.
இஸ்ரேல் மற்றும் அதன் ஐக்கிய அமெரிக்க – ஐரோப்பிய பங்குதாரர்களின் கொடூரமான மற்றும் தீய தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த மக்கள் ஒக்டோபர் 8 முதல் நீர், உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மின்சாரம் இல்லாமல் பட்டினியால் இறந்துவருகின்றனர்.
காஸாவில் இதுவரை இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி குண்டுவீச்சு மற்றும் தரைவழி ஆக்கிரமிப்பு குறைந்தது 21,507 பேரை காவு கொண்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் 439,000 வீடுகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் மற்றும் அதன் கட்டிடங்களில் அரைவாசி சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்பில் தேவாலயங்கள், பழங்கால மஸ்ஐpத்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சொகுசு ஹோட்டல்கள், திரையரங்குகள், பாடசாலைகள் என்பன சேதமடைந்துள்ளன.
பலஸ்தீனர்களுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி மத்திய கிழக்கை பற்றியெரியவைக்கும் என்று பத்தி எழுத்தாளர் தாஹா ஓசன் எச்சரித்தார்.
லத்தீப் பாரூக் Virakesari
தமிழில்: பிஷ்ருன் நதா மன்சூர்