திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (43) . நெசவு தொழிலாளி. இவரின் மனைவி புவனேஸ்வரி (38). கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி வேலைக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் புவனேஸ்வரி, தன்னுடைய கணவரைக் காணவில்லை என பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த பாதிரிவேடு போலீஸார், பாலசுப்பிரமணியைத் தேடிவந்தனர். அப்போது அவரின் ஹெல்மெட் மற்றும் உடமைகள் வீட்டின் அருகே உள்ள ஏரி பகுதியில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீஸார் அங்குச் சென்று விசாரித்தனர். அப்போது ஏரி பகுதியில் புதியதாக பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை போலீஸார் கவனித்தனர். அதனால் சந்தேகத்தின்பேரில் பள்ளத்தை தோண்ட, போலீஸார் முடிவு செய்தனர்.

இதையடுத்து வருவாய்த்துறையினரின் முன்னிலையில் சந்தேகத்துக்குரிய இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பாலசுப்பிரமணி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தன. கை, கால்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பாலசுப்பிரமணியின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு பாலசுப்பிரமணியை கொலைசெய்தது யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பாதிரிவேடு போலீஸார் கூறுகையில், “பாலசுப்பிரமணி மாயமான நாளிலிருந்து அவரின் மனைவி புவனேஸ்வரியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்தன.

குறிப்பாக பாலசுப்பிரமணி கொலைசெய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் முகத்தில் ஒருவித பயம் தெரிந்தது. அதனால் சந்தேகத்தின் அடிப்படையில் புவனேஸ்வரியின் நடவடிக்கைகளை கண்காணித்தோம். அதோடு புவனேஸ்வரியின் செல்போன்களின் அழைப்புகளையும் ஆய்வு செய்தோம். அப்போது புவனேஸ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த முத்து ஜெயம் என்பவருடன் செல்போனில் பேசிய தகவல் கிடைத்தது.

 

போலீஸுக்கு உதவிய சிசிடிவி

அதனால் எங்களின் சந்தேக வளையத்தில் முத்துஜெயத்தைக் கொண்டு வந்தோம். இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தோம். அப்போதுதான் பாலசுப்பிரமணியைக் கொலைசெய்ய புவனேஸ்வரியும் முத்து ஜெயமும் பிளான் போட்ட தகவல் கிடைத்தது.

இதையடுத்து இருவரையும் கைதுசெய்தோம். பாலசுப்பிரமணியை கூலிப்படை மூலம் கொலைசெய்திருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் கூலிப்படையைச் சேர்ந்த ஹேமநாத், இன்பராஜ், சுரேந்தர் ஆகியோரைக் கைது செய்தோம்.

திருமணத்துக்குப் பிறகு புவனேஸ்வரிக்கும் முத்து ஜெயத்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதை பாலசுப்பிரமணி கண்டித்திருக்கிறார்.

அதனால் கணவர் என்றுகூட பாராமல் பாலசுப்பிரமணியை கொலைசெய்ய புவனேஸ்வரி தன்னுடைய ஆண் நண்பர் முத்து ஜெயம் மூலம் திட்டமிட்டிருக்கிறார். இதுவரை புவனேஸ்வரி, முத்து ஜெயம் உள்பட 5 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Share.
Leave A Reply