இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள இலங்கையர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூர் பகுதியில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியர்கள் உட்பட இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையர்களான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தனர்.
இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர்கள் இன்று வரை தாயகம் திரும்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் சாந்தனின் தாயார், தனது மகனை நாட்டிற்கு அழைத்து வரும்படி, பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு இலங்கையர்களையும் அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம்
இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சாந்தனின் தாயாரால் தனக்கு வழங்கப்பட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
”32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனால், இன்று வரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக் காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்க்க வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவன செய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வு நிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைக் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என சிவஞானம் சிறிதரனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவுடன் சாந்தன் குடும்பத்தினர் சந்திப்பு
சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் சந்தித்து, தனது மகனின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடாத்திய பின்னர் விரைவில் பதிலொன்றை பெற்றுத் தருவதாக சாந்தனின் குடும்பத்தினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளார். அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (30) சந்தித்து, சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்தே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பதிலை வழங்கியுள்ளார்.
சாந்தன் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவாரா?
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தால், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரிகள், தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.
அத்துடன், சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
‘தமிழ்நாட்டில் இருந்து சாந்தனை இலங்கை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சகத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளது. அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும். அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் போது அந்த விடயம் சாத்தியமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சென்னையிலுள்ள இலங்கை துணை தூதுவருடன் தொலைபேசி வழியே கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் அனுமதி கிடைக்கப் பெறும் வரை காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சாந்தனை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னையிலுள்ள துணை தூதர் பதிலளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலொன்றை விரைவில் வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”அவ்வாறான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக இதுவரை எனக்கு தெரியவில்லை. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து விரைவில் பதிலொன்றை வழங்குவேன்” என பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
பிபிசி தமிழ்