இந்த நாடு, பொருளாதார ரீதியில் இவ்வளவு வங்குரோத்து ​அடைந்தமைக்கான காரணக்கர்த்தாக்கல் யார்? என்பதை தெட்டத்தெளிவாக எடுத்தியம்பிய இலங்கையின் உயர்நீதிமன்றம் அவர்களின் பெயர் பட்டியலையும் அம்பலப்படுத்தியது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென கோரிய எதிர்க்கட்சியினர், அவர்களின் பிர​ஜா உரிமையை பறிக்குமாறும், வலியுறுத்தின. எனினும், எவற்றையும் அரசாங்கம் தனது காதுகளுக்கு எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில்தான், 2023 ஆம் ஆண்டில் உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ஜியம் (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது.

அவ்வகையில் மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

2022 ஆம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கசகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.

பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது. மொத்தத்தில் ஊழலற்ற நாடே இல்லை எப்பதே உண்மை.

இலங்கையை பொருத்தவரையில் பல நாடுகளின் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே இங்கு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அல்லது திருத்தம் செய்யப்படுகின்றன. பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் கூட, சிங்கபூரின் சட்டத்தை அடிப்படையாக வைத்து நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு எந்த நாட்டை முன்னுதாரணமாக எடுக்கப்போகிறது என்பதே எம்முன்னிருக்கும் கேள்வியாகும்.

 

Share.
Leave A Reply