எம்முடைய உடலில் உள்ள குருதியில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவற்றில் எம்முடைய நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு வெள்ளையணுக்கள் பாரியளவில் பங்களிப்பு செய்கின்றன.
இந்த வெள்ளையணுக்களில் நியூட்ரோபில் என்பவை அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.
எம்முடைய எலும்பு மச்சையில் உருவாகும் வெள்ளையணுக்களில் இத்தகைய நியூட்ரோபில்களின் எண்ணிக்கை இயல்பான அளவை விட குறையும்போது நியூட்ரோபீனியா (Neutropenia) பாதிப்பு உண்டாகிறது. இதனால் அடிக்கடி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுவார்கள்.
நியூட்ரோபீனியா பாதிப்பு இருக்கும்போது உங்களுடைய வாய், தொண்டை மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள சாதாரண பக்டீரியாக்கள் கூட உங்களுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் மருத்துவர்கள் நியூட்ரோபீனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு முதலில் சிகிச்சையளித்து நிவாரணம் வழங்குவார்கள்.
உங்களுடைய குருதியில் நியூட்ரோபில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உடனடியாக கண்டறிய இயலாது.
உங்களுக்கு ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தருணத்தில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனையின்போது தான் இதனை கண்டறிவார்கள்.
இதன் எண்ணிக்கையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், இதற்கு பல முறை பிரத்யேகமான இரத்த பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு கீமோதெரபி சிகிச்சையை மேற்கொண்டவர்கள், அத்தகைய சிகிச்சையின் போது புற்றுநோய் செல்களுடன் சில ஆரோக்கியமான குருதி செல்களும் பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணத்தால் நியூட்ரோபீனியா பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு கதிர்வீச்சு சிகிச்சையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். இதைத் தவிர்த்து தைரொய்ட் பிரச்சினைக்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்பவர்களுக்கும் இதன் பக்கவிளைவு காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
சிக்கன்பொக்ஸ் எனும் சின்னம்மை, அம்மை, ஹெபடைடிஸ் ஏ, பி, சி தொற்று பாதிப்பு, ஹெச்ஐவி தொற்று பாதிப்பு, ஓட்டோஇம்யூன் டிஸீஸ், எலும்பு மச்சை தொற்று பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகவும் நியூட்ரோபீனியா பாதிப்பு ஏற்படலாம். வேறு சிலருக்கு விற்றமின் பி12 குறைபாட்டின் காரணமாகவும் இவை உண்டாகலாம்.
சோர்வு, அதீத காய்ச்சல், குளிர், அடிவயிற்றுப் பகுதியில் வலி, வேனற்கட்டி, இருமல், சுவாசிப்பதில் இடையூறு, தொண்டையில் புண் அல்லது வலி அல்லது அசௌகரியம், சிறுநீர் வெளியேறும்போது வலி அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் தெரிவித்து அதற்கு அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்தியேக குருதி பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.
நான்கு வாரங்களுக்கு பிறகும் இதன் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லையென்றால், மருத்துவர்கள் பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையை அளித்து இதன் எண்ணிக்கையை வெள்ளையணுக்களில் அதிகரிக்கச் செய்வர்.
சிலருக்கு விலையுயர்ந்த நவீன சிகிச்சையின் மூலம் எலும்பு மச்சையில் தூண்டலை ஏற்படுத்தி, அடர்த்தியும் வீரியமும் மிக்க வெள்ளையணுக்களை உற்பத்தி செய்து, நியூட்ரோபீனியா பாதிப்புக்கு நிவாரணமளிப்பர்.
– டொக்டர் ஸ்ரீதேவி
தொகுப்பு : அனுஷா