கிழக்கு ஜெரூசலத்துடன் அங்கீகரிக்கப்பட்ட 1967 எல்லைகளுடனான பலஸ்தீன சுதந்திர நாடு ஒன்று உருவாக்கப்படும் வரை இஸ்ரேலுடன் எந்த இராஜதந்திர உறவும் இல்லை என்று அமெரிக்காவிடம் சவூதி அரேபியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதில் சாதகமான பதில் கிடைத்திருப்பதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி செவ்வாயன்று (06) கூறியிருந்தார்.
இதனையடுத்தே பலஸ்தீன விவகாரம் தொடர்பில் சவூதி தனது நிலைப்பாட்டை வெளியிட்டு அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளது.
கடந்த 2020இல் இஸ்ரேலுடன் வளைகுடா அண்டை நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை அடுத்து சவூதியும் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவது தொடர்பில் தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.
மத்திய கிழக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் சவூதி சென்று அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.