ராஜபக்ஷக்களின் கடந்த கால ஊழல் செயற்பாடுகள் பற்றி பல விடயங்கள் கசிந்தாலும் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை சட்டத்தின் முன்பாக சவாலுக்குட்படுத்த எவராலும் முடியவில்லை.

ஆனால் அவர்களின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் இப்போது சட்டத்தின் பிடியில் மாட்டி வருகின்றனர்.

இதில் பாரதூரமான சம்பவமாக கருதப்படுவது மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல செய்த தரமற்ற மருந்து ஊழல் மோசடியாகும்.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அவரின் பெருமை பாடும் ஒருவராகவும் ஊடகத்துறை அமைச்சராகவும் அமைச்சரவை பேச்சாளராகவும் கடமையாற்றிய கெஹலிய ரம்புக்வெல ‘மகிந்தவின் கோயபல்ஸ்’ என வர்ணிக்கப்பட்டவர்.

ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியில் கொள்கை பரப்பு அமைச்சராக செயற்பட்ட ஜோசப் கோயபல்ஸின் மிகப் பிரதான பிரசார வியூகம் ஒரு பொய்யை பல தடவை கூறி, அதை உண்மையாக்குவதாகும். அதையே கெஹலிய முன்னெடுத்தார்.

மகிந்த ராஜபக்ஷவின் பாசறையில் கற்ற ஊழல் வித்தைகளை வெளிப்படுத்துவதற்கு அவர் சுகாதார அமைச்சையும் நாட்டு மக்களின் உயிர்களையுமே பணயம் வைத்திருக்கிறார்.

இது கிட்டத்தட்ட கொலைக்குற்றச்சாட்டுக்கு இணையானது. இதையே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

‘கெஹலியவின் செயற்பாட்டை எவ்வாறு ஊழல் என்று கூறுவது? இது உண்மையில் ஒரு இனப்படுகொலைக்கு ஈடான விடயம். இவருக்கு மரண தண்டனை தான் வழங்க வேண்டும்’ என ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக 2000ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற பிரவேசம் கண்ட கெஹலிய 2007ஆம் ஆண்டு மகிந்த பக்கம் தாவினார்.

தன்னைப் பற்றிய ஓர் உயர் பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் நிலைபெறச் செய்த கெஹலியவுக்காக எதையும் செய்ய தயாராகவிருந்தவர் மகிந்த ராஜபக்ஷ.

2012ஆம் ஆண்டு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றிருந்த கெஹலிய ரம்புக்வெல அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்ததால் கால முறிவுக்குள்ளானார்.

பின்பு அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக இங்கிருந்து மகிந்த உதவினார். வழக்கு தொடரப்பட்டால் தமது ஹோட்டலின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் பங்கம் வந்துவிடும் என கருதிய ஹோட்டல் நிர்வாகம் பேச்சு நடத்தி வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுமாறு கூறி ஒரு தொகை பணத்தை நட்ட ஈடாக கெஹலியவுக்கு வழங்கியது.

அதே சமயம் தனது சிகிச்சை முடிந்து இலங்கை வந்த அவர் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இருபது மில்லியன் பணத்தை தனது சிகிச்சை செலவுகளுக்கென பெற்றுக்கொண்டார். அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த மகிந்த இதை கண்டுகொள்ளவில்லை.

நாட்டின் அப்பாவி ஏழை மக்களின் மருத்துவ செலவுக்கென உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தில் நாட்டின் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் மிக இலகுவாக பணத்தை பெற்றுக்கொண்டார்.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரிக்க நல்லாட்சியில் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினர் மகிந்த ஆதரவாளர்கள் பலரையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து கெஹலிய எவ்வாறு இருபது மில்லியன் ரூபாய்கள் பெற்றார் என்பது குறித்த வாக்குமூலத்தை அப்போதைய சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அளித்திருந்தமை முக்கிய விடயம்.

ஆனால் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியானவுடன் இந்த விசாரணைகள் அரசியல் பழிவாங்கல்கள் என மகிந்த தரப்பினரால் காரணங்கள் கூறப்பட்டன. இதனால் கெஹலிய இதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.

2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு தமது அணியின் ஊடக பிரசாரங்களுக்கு பொருத்தமானவர் கெஹலிய என்பதை அறிந்த மகிந்த அவருக்கு வெகுஜன ஊடகத்துறை அமைச்சை வழங்கும்படி தனது சகோதரர் கோட்டாபயவை பணித்தார்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்ற பவித்ரா வன்னியாராய்ச்சி கொவிட் தொற்று அது தொடர்பான செயற்பாடுகளில் தனது பலகீனத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 2021ஆம் ஆண்டு புதிய சுகாதார அமைச்சராக கெஹலியவை நியமித்தார், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய.

நாட்டின் சுகாதார நெருக்கடி நிலைமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கெஹலிய ராஜபக்ஷ சகோதரர்கள் இருக்கும் போது தனக்கு என்ன கவலை என்ற போதையில் ஊழல் திட்டங்களை தீட்டினார்.

2022ஆம் ஆண்டு மே மாதம், நாட்டின் சுகாதாரத்துறை பற்றி அச்சமூட்டும் வகையில் அமைச்சரவையில் கருத்துக்களை தெரிவித்த அவர் சில குறித்த மருந்து வகைகளை இறக்குமதி செய்யாவிடின், மூன்று வாரங்களுக்கும் நாட்டின் சுகாதாரத்துறை ஸ்தம்பிதமடையும் என அமைச்சரவையை தவறாக வழிநடத்தினர்.

அதன் மூலமே தரமற்ற இம்யூனோகுளாபின் குப்பிகளை (Immunoglobulin vials) இறக்குமதி செய்யப்போவதாக கூறி, இந்த மருந்துகளுக்காக நூறு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய வழிவகுத்தார்.

நரம்பு வழி மருந்தேற்றல் முறையில் பாவிக்கப்படும் இந்த இம்யூனோகுளோபின் திரவமானது அதிக உணர்திறன் கொண்ட மருந்தாக விளங்குகின்றது.

இவ்வாறான மருந்துகளை பதிவு செய்யப்பட்ட மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்களிடமிருந்து மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை நீண்ட காலமாக உள்ளது.

ஆனால் அமைச்சர் கெஹலிய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தினார். ஏனெனில், கொவிட் காலத்தில் அரசாங்கத்தால் நேரடியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் பொறிமுறைகள் தளர்த்தப்பட்டதுடன் அவசரகால நிலைமைகளின் கீழ் பல நாடுகளிடமிருந்து மருந்துகள் பெறப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தையே அமைச்சர் கெஹலிய தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

இந்தியாவிலிருந்து குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. இதற்கு தனது அமைச்சின் செயலாளர் உட்பட சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர், உதவி பணிப்பாளர், கணக்காளர், கட்டுப்பாட்டாளர் என சகலரையும் பயன்படுத்தியுள்ளார் கெஹலிய.

இதனால் தரமற்ற சுமார் 22,500 இம்யூனோகுளோபின் மருந்து குப்பிகள் நாட்டின் சகல அரச வைத்தியசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த வருடம் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதமளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வந்த நோயாளிகள் சிலருக்கு இந்த குப்பி மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே இந்த மருந்தின் தரம் குறித்து வைத்தியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையானது தமது அனுமதியின்றியே இந்த மருந்துகள் இலங்கையின் அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்ற குண்டை தூக்கிப் போட்டது.

இறுதியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்களை பரிசோதித்து குறித்த நிறுவனத்திடம் இது குறித்து ஆராய்ந்தபோதே தமக்கும் இந்த மருந்துகளுக்கும் எந்த தொடர்புகளும் இல்லையென அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதமளவில் தரமற்ற இம்யூனோகுளோபின் மருந்து சர்ச்சைகள் நாட்டின் உயர்மட்டத்தினர் அனைவருக்கும் தெரியவந்தது. இதையடுத்தே அமைச்சரவை மாற்றங்கள் என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் ஒக்டோபர் மாதம் அவசர அவசரமாக சுகாதார அமைச்சை ரமேஷ் பத்திரனவிடம் ஒப்படைத்தார்.

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சை ரணில் பறித்தமைக்கு மகிந்த தரப்பினர் தமது ஆட்சேபனையை தெரிவித்தனர். ஏனென்றால் அவர்களுக்கும் இந்த ஊழல் செயற்பாட்டில் பங்கில்லாமலில்லை.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டாலும் இதன் பிரதான சூத்திரதாரியான அமைச்சர் கெஹலியவை உடனடியாக கைது செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது.

கெஹலிய கைது செய்யப்படாமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இரண்டாவது தடவையாக கடந்த வாரம் வாக்குமூலம் அளிக்கச்சென்ற கெஹலிய கைது செய்யப்பட்டார்.

மக்களின் உயிர்களை அற்பமென நினைத்து செயற்பட்ட கெஹலியவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படல் வேண்டுமென அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

நெருக்கடி காலத்திலேயே மக்கள் உயிர்கள் மீதே அக்கறையின்றி செயற்பட்ட கெஹலிய போன்ற நபர்கள், சாதாரண காலகட்டத்தில் எப்படியெல்லாம் ஊழல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற கேள்வி நாட்டின் அனைத்து மக்களின் மனதிலும் தோன்றியுள்ளது.

அதை கண்டும் காணாதது போன்று இருந்த ராஜபக்ஷக்கள் மீதான வெறுப்பும் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது.

மகிந்தவின் செல்லப் பிள்ளைகளாக இருந்து பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலரும் தற்போது பதற்றத்தில் உள்ளனர் என்றுதான் கூற வேண்டியுள்ளது.

 

 

Share.
Leave A Reply