• இலவச பார்வையாளர்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பைக் கடந்து இளைஞர்கள் பலரும் கூச்சலிட்டுக்கொண்டு கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியிருக்கிறது.
மிகப் பிரமாண்டமான முறையில் நேற்று பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. ரம்பா, தமன்னா, சிவா, யோகி பாபு, டிடி உள்ளிட்ட சில பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியைக் காண 25,000 ரூபாய் செலுத்தியவர்களுக்கு முன்பகுதியும், 7000 ரூபாய் செலுத்தியவர்களுக்கு நடுப்பகுதியும், 3000 ரூபாய் செலுத்தியவர்களுக்குப் பின்பகுதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அங்கு பெரும்பாலானோர் திரண்டதால் அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே இலவச பார்வையாளர்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பைக் கடந்து இளைஞர்கள் பலரும் கூச்சலிட்டுக்கொண்டு கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியிருக்கிறது.
அங்கிருந்த பிரபலங்கள் கேட்டுக்கொண்டபோதும் இளைஞர்கள் கட்டுப்படவில்லை. மேடைகள், ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள், மரங்கள் போன்றவற்றில் ஏறி அட்டகாசம் செய்திருக்கின்றனர்.
இதனால் இசை நிகழ்ச்சி இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இருந்தும் கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
அதன்பின் பாதியிலேயே அவசர அவசரமாக இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது போன்ற குழப்பங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உள்ள கவனக்குறைபாடுகளே காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த டைரக்ட்டர் டீமில் உள்ள ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
இதுகுறித்து பேசிய அவர், “35,000 பார்வையாளர்கள்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிட்டத்தட்ட 1,10,000 பேர் வந்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தோம். எங்கள் தரப்பில் தவறுகள் ஏதும் இல்லை. கூட்டம் எல்லாம் உள்ளே நுழைந்த பிறகுதான் பிரச்னை துவங்கியது.
20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைப்பட்டது. அதன்பின் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நன்றாகத்தான் நடந்தது. சில இடங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை இதுதான். நிகழ்ச்சி நன்றாகவே நடந்து முடிந்தது” என்றார்.