போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை நோக்கி கையசைத்த சிறுவனை பார்த்து பிரதமர் மோடி கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்த நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மீண்டும் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜக மேலிடம் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பதிலாக மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மோகன் யாதவ் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்துக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசி கொண்டிருந்தபோது சிறுவன் ஒன்று அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்தான்.
இதை மேடையில் இருந்து கவனித்த பிரதமர் மோடி உடனே அந்த சிறுவனை நோக்கி கையசைத்து கூறிய வார்த்தைகள் அனைவரையும் கவர்ந்தது. அதாவது, “மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன்.
தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துகொள். இல்லாவிட்டால் கை வலிக்க தொடங்கும்” என்றார்.
பிரதமர் மோடியின் இந்த வார்த்தைகள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியை பார்த்து சிறுவன் கையசைத்ததும், சிறுவனை நோக்கி பிரதமர் மோடி பேசியது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
देखिए प्रधानमंत्री श्री @narendramodi जी का बच्चे के प्रति स्नेह भाव…#TribalsWithModi pic.twitter.com/SdfLhnzDmg
— BJP Madhya Pradesh (@BJP4MP) February 11, 2024