“மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் புரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம் இவரைக் கண்டு பிரமித்தது இவரது அபாரமான வேகத்தினால் தான்.
அவரைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ‘ஒன் இன்ச் பஞ்ச்’ என்பது பற்றித் தான்.
ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும்.
இந்த ஒரு அங்குல இடைவெளியில் இருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமாக அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர்.
இந்த ஒரு இஞ்ச் குத்தின் வேகத்தை ஒருவாறாகக் கணக்கிட்ட நிபுணர்கள் அது மணிக்கு 190 கிலோமீட்டர் இருந்ததாகக் கூறினர். (மிகக் கொடூரமான புயலின் வேகம் கூட அதிக பட்சம் மணிக்கு 117 கிலோமீட்டர் தான்!)
பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் சைனா டவுனில் உள்ள ஒரு சீன மருத்துவமனையில் 1940-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி லீ ஹோய்-சூன் மற்றும் கிரேஸ் ஹோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் புரூஸ் லீ.
சீன பஞ்சாங்கத்தின்படி அவர் பிறந்த வருடம் டிராகன் வருடம். அதே போல பிறந்த நேரமும் கூட காலையில் வரும் (7 முதல் 9 மணி வரை வரும்) டிராகன் நேரம் தான்.
அதிர்ஷ்டமான நேரத்தில் பிறந்த அவருக்கு இளமையில் பெயர் – லிட்டில் டிராகன்!
இளம் வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் தோற்றமளித்தார். குழந்தையுடன் பெற்றோர் ஹாங்காங் நகருக்கு குடி பெயர்ந்தனர்.
இளம் வயதிலேயே தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த புரூஸ் லீ ஹாங்காங் நகரில் அந்தக் காலத்தில் மிக சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தெருச்சண்டைகளில் ஈடுபட்டார்.
வீட்டுக் கூரைகளிலும் இது நடைபெறுவது வழக்கம்,நகரத்தையே அச்சுறுத்திய ஒரு பிரபல ரவுடியின் மகனை தெருச்சண்டை ஒன்றில் வீட்டுக்கூரை மீது புரட்டி எடுத்தார் புரூஸ் லீ. அவனுக்கு கைமுறிவு ஏற்பட்டது; பல் தெறித்து விழுந்தது.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற புரூஸ் லீயின் தாயார் இது போல நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரை வெளியே மீட்டு வந்தார்.
அமெரிக்காவில் பிறந்த காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் பெற்றோர் புரூஸ் லீயை அமெரிக்காவிற்கே அனுப்பத் தீர்மானித்தனர்.
சியாட்டிலில் குடியேறிய புரூஸ் லீ அங்கு குங் பூ பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.
தற்காப்புக்கலையில் விசேஷ கவனம் செலுத்திய அவர் தனது திறமையினால் ஜீத் குனோ டோ என்ற புதிய முறையை வகுத்தார்.
இந்த முறை ஒரு புதிய பரிமாணத்தை உலகிற்குக் காண்பிக்கவே புரூஸ் லீயின் புகழ் தற்காப்புக் கலை வட்டாரத்தில் பெரிதாகப் பரவியது.
கல்லூரியில் சேர்ந்த புரூஸ்லீ படிப்பை விட தனது குத்துச்சண்டையில் அதிக கவனம் செலுத்தினார். கல்லூரியில் இருந்து வெளியேறினார்.
தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.’தி க்ரீன் ஹார்னெட்’ என்று ஒரு தொடர். அதில் கடோ என்ற பாத்திரத்தில் நடித்த புரூஸ் லீ ஒரு காட்சியில் பாட்மேனுடனான சண்டையில் தோற்க வேண்டும். முடியாது என்று மறுத்து விட்டார் லீ.
பின்னர் பேட்மேனும் இவரும் டிரா செய்வதாக கதை திருத்தப்பட்டது. அவ்வளவு தன்மானம் உள்ளவர் புரூஸ் லீ.
என்றும் வெற்றி; எவருடனும் வெற்றி!புரூஸ் லீயின் உயரம் 172 செண்டிமீட்டர். எடை 64 கிலோ. கடுமையான பயிற்சியின் மூலம் அவர் தனது இரு விரல்களைக் கீழே பூமியில் வைத்து உடலைத் தூக்கி நிறுத்துவார்.
இதைப் பார்த்த மற்றவர்கள் வியந்தனர்.சியாட்டிலில் இருந்த போது யோய்ச்சி நகாசி என்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் புரூஸ் லீயை வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்தார்.
முதலில் அவரை அலட்சியமாக ஒதுக்கிய லீ ஒரு கட்டத்தில் அவரது சவாலை ஏற்க வேண்டியிருந்தது.
சரியாக பதினோரு விநாடிகளில் இரண்டே அடிகளில் அவரை வீழ்த்தினார் புரூஸ் லீ. பிரக்ஞையை இழந்து தள்ளிப் போய் விழுந்த நகாசிக்கு மண்டையில் பலத்த காயம் பட்டது.
இப்படி சில விநாடிகளில் எதிராளியை வீழ்த்தும் அவரது கை முஷ்டிக்கும் அதன் வீச்சிற்கும் அனைவரும் பயந்தனர்; வியந்தனர்.
1964, ஆகஸ்ட் 17-ம் நாளன்று லிண்டா என்ற பெண்ணை லீ திருமணம் செய்து கொண்டார். பிரண்டன் லீ என்ற மகனும் ஷானன் லீ என்ற மகளும் அவருக்கு உண்டு.
பிரண்டன் லீ பிற்காலத்தில் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்தார். ஷானன் லீ நடிகையானார்.
திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்:வாழ்நாளில் ஐந்தே ஐந்து திரைப்படங்களில் தான் நடித்தார் புரூஸ் லீ.
தி பிக் பாஸ் (The Big Boss – 1971)
பிஸ்ட் ஆப் புயூரி (Fist of Fury – 1972)
வே ஆப் தி டிராகன்(Way of the Dragon – 1972)எண்டர் தி டிராகன்(Enter the Dragon – 1973)
கேம் ஆப் டெத் Game of Death – 1978)
உலகப் புகழ் பெற்ற படமான ‘எண்டர் தி டிராகன்’ அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின்னாலேயே திரைக்கு வந்தது.
‘கேம் ஆப் டெத்’ படமோ’ அவர் மறைந்த பிறகே முடிக்கப்பட்டது. திடீரென அவர் மறைந்ததால் கதையும் மாற்றப்பட்டது.
இதில் அவரது பிரேத ஊர்வலம் அப்படியே எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது. இவர் நடித்த ஐந்து திரைப்படங்களே எதிர்காலத்தில் மற்றவர்கள் 168 படங்களை எடுக்க உத்வேகம் ஊட்டியது!
எண்டர் தி டிராகன்:உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ‘எண்டர் தி டிராகன்’ திரைப்படம் புரூஸ் லீ மறைந்த சில தினங்களுக்குப் பிறகு 1973-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
99 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத் தயாரிப்பின் போது அவர் பட்ட கஷ்டம் அதிகம். ஏராளமான காயங்கள், ஒரு காட்சியில் பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது.
ஷூட்டிங்கை நிறுத்த கூடாது என்று சொல்லி உரிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது அவர் வழக்கம்.
மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டவாறே நடித்துக் கொண்டே இருந்தார் அவர்.
3500 லட்சம் அமெரிக்க டாலரை ஈட்டியது இந்தப் படம்.
தற்காப்புக் கலை பற்றி வெளி வந்த படங்களில் உலகின் தலையாய படமாக இன்றளவும் திகழ்வது இந்தப் படமே!
மறைவு: புரூஸ் லீயின் மறைவு எவ்வளவு அகாலமானதோ அவ்வளவு சோகமானதும் கூட. 1973-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அவர் மறைந்தார்.
இயல்பாகவே அதிக உஷ்ணத்தை அவர் உடலால் தாங்க முடியவில்லை. அவரது உடலில் இருந்து வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டன. அவருக்கு வலிப்புகள் வருவதுண்டு. தலைவலி வேறு உண்டு.
1973, மே 10-ந் தேதி ஹாங்காங்கில் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் புரூஸ் லீ திடீரென மயங்கி விழுந்தார்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டு, மனிடால் என்ற மாத்திரையைத் தந்து மூளை வீக்கத்தை சரி செய்தனர்.
இதே மூளை வீக்கமும் தலைவலியும் திரும்பவும் 1973 ஜூலை 20-ந் தேதி அவருக்கு ஏற்பட்டது.
தலை வலிப்பதாக புரூஸ் லீ சொல்லவே தைவான் நடிகையான பெட்டி டிங் பெய் ஒரு வலி நிவாரண மாத்திரையை கொடுத்தார்.
சிறிது ஓய்வு எடுக்கச் சென்ற லீ எழுந்திருக்கவே இல்லை. ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது லீ இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். மறைந்த போது அவருக்கு வயது 32.
உடல் பரிசோதனையைச் செய்த டாக்டர் 1400 கிராம் இருக்க வேண்டிய மூளை 1575 கிராமாக வீங்கி இருப்பதைச் சொல்லி மூளை வீக்கத்தினால் அவர் இறந்து விட்டதாக தனது முடிவை தெரிவித்தார்.
ஆனால் இன்றளவும் அவர் மரணம் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவரது உடல் சியாட்டிலில் லேக் வியூ சிமெட்ரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெற்றி பெற புரூஸ் லீ தரும் அறிவுரை:
“சிரஞ்சீவியாக இருக்க ஒரே வழி, அனைவரும் எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வது தான்!” என்று கூறிய புரூஸ் லீ, தான் கூறியபடியே அனைவரின் நினைவிலும் இன்றளவும் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.
இந்த நிலையை அடைய எளிய வழிகளையும் அவர் கூறி இருக்கிறார். அவற்றில் முக்கியமானவை இதோ:
1. “பத்தாயிரம் உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.
“ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும்” என்றார் அவர்.
தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது.
அகல உழுவதை விட ஆழ உழு; என்றும் பத்து இடங்களில் பத்து அடி தோண்டுவதை விட ஊற்று இருக்கும் இடத்தை நிர்ணயித்து நூறு அடி தோண்டு என்றும் தமிழில் முன்னோர்கள் கூறியுள்ளதை நினைவு கூரலாம்.
2. தண்ணீர் போல நெகிழ்வுடன் இருங்கள்! எந்தத் தடையையும் எதிர் கொண்டு நெகிழ்வுடன் சென்று அதை மீறி தனது இயல்பாக இருக்கும் தண்ணீரில் இருந்து ஏராளமான பாடத்தைக் கற்கலாம்.
3. வேரை அறிந்து கொள்ள முயலுங்கள். எது இலை, எது கிளை, எது அழகான மலர் என்ற விவாதத்தில் இறங்க முயல வேண்டாம். வேரை அறிந்து கொண்டால் மலர் மலரும் விதம் உங்களுக்குத் தானே புரிந்து விடும்!
4. அறிவது மட்டும் போதாது; அறிவதைச் செயலில் கொண்டு வர வேண்டும். விருப்பப்பட்டால் மட்டும் போதாது. அதை அடைய செயலில் இறங்க வேண்டும்..
5. ஒரு நாளைக்கு ஒரு சிறிது முன்னேற்றமாவது அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பயிற்சியே வெற்றி தரும் என்று நிரூபித்த அதிசய மனிதர் புரூஸ் லீ!