போருக்கு நிதியாதாரம் வழங்குவதற்கான 118 பில்லியன்கள் டாலர்கள் மசோதா பொறிந்து போனதையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலையும் அடுத்து, பைடென் நிர்வாகம் அதன் பிரதான முன்னுரிமையான உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போருக்கு நிதியளிப்பதை உறுதிப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கி வருகிறது.
வியாழனன்று, போருக்கு மட்டுமே நிதியளிக்கும் சட்டம் செனட்டில் ஒரு நடைமுறை தடையை கடந்தது, 17 குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து அதை முன்னோக்கி நகர்த்தினர்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்க சுமார் 14 பில்லியன் டாலர்களும், சீனாவுடனான போருக்கு தாய்வானைத் தயார் செய்ய சுமார் 10 பில்லியன் டாலர்களும் இந்த மசோதா உறுதிமொழிகொடுக்கின்ற அதேவேளையில், செலவினத்தின் பெரும்பான்மையான, 60.1 பில்லியன் டாலர்கள், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் பாரிய படுகொலைகளைத் தொடர ஒதுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போர் அதன் இரண்டாவது ஆண்டு நிறைவை நெருங்கி வருகின்ற நிலையில், வாஷிங்டன் ஏற்கனவே நூறாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டுள்ள இந்த மோதலை நீடிக்க தீர்மானகரமாக உள்ளது.
ரஷ்யாவை ஒரு அரை-காலனித்துவ நிலைக்கு அடிபணியச் செய்யும் அவற்றின் இலக்கைப் பின்தொடர்வதில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் கடைசி உக்ரேனியர் வரை சண்டையிடத் தயாரிப்பு செய்து வருகின்றன.
2023 இல் அதன் “கோடைகால தாக்குதலின்” அதிர்ச்சிதரும் தோல்வியைத் தொடர்ந்து, உக்ரேனின் அதிபர் ஜெலென்ஸ்கி ஆட்சியானது ஒரு இராணுவ மற்றும் சமூக பேரழிவை எதிர்கொள்கிறது.
ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக தற்காப்பு நிலைகளை வைத்திருக்க போராடும் சிதைந்த படைப்பிரிவுகளுடன், இராணுவம் மனிதவளத்தை இழந்து வருகிறது.
உக்ரேனின் அதிபர் ஜெலென்ஸ்கி
ஏகாதிபத்தியவாதிகளின் பீரங்கிக்கு இரையாகப் பயன்படுத்த இன்னும் 500,000 உக்ரேனியர்களை கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஜெலென்ஸ்கி தயாரித்து வருகிறார்.
உக்ரேனிய தன்னலக்குழுவிற்குள்ளே நடந்துவரும் கடுமையான கன்னை மோதல்களில் இந்த வாரம் ஜெலென்ஸ்கி, இராணுவத் தளபதி பதவியில் இருந்து வலேரி ஜலுஸ்னியை நீக்குவதற்கு வழிவகுத்தது.
வாஷிங்டன் இரக்கமற்ற தன்மையுடன் மோதலை விரிவாக்குவது போரின் ஏகாதிபத்திய தன்மையுடன் இணைந்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யா மீது நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஒரு போரைத் தொடங்குவதற்கு ஒரு சாக்குபோக்கைத் தேடிக் கொண்டிருந்ததால், பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீது படையெடுக்க தன்னலக்குழு தேசியவாத புட்டின் ஆட்சியை திட்டமிட்டு தூண்டியது.
கியேவில் ஒரு மேற்கத்திய சார்பு ஆட்சியை நிறுவ 2014 இல் ஒரு பாசிசவாத-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை ஒழுங்கமைக்க நிதியாதாரம் வழங்கி உதவிய பின்னர், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் பெரும் அளவிலான ஆயுதங்களை வாரிவழங்கியதுடன், கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் நேட்டோவின் பிரசன்னத்தை பரந்தளவில் விரிவாக்கின.
ஏகாதிபத்திய புவிசார் மூலோபாயத்துடன் தொடர்புடைய போரின் மையத்தன்மையானது முக்கிய சக்திகள் கியேவிற்கு வழங்கும் நிதி ஆதரவின் அளவால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
உலகப் பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனத்தின் (Kiel Institute for the World Econom) கூற்றுப்படி, உக்ரைன் 24 ஜனவரி 2022 மற்றும் 31 அக்டோபர் 2023 க்கு இடையில் மொத்தம் $247 பில்லியன் டாலர்கள் இராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவி உத்தரவாதங்களைப் பெற்றது. போருக்கு முந்தைய கடைசி ஆண்டான 2021 இல் நாட்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 200 பில்லியன் டாலர்களாக இருந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒட்டுமொத்த அரசிற்கும் மற்றும் ஊழல்பீடித்த செல்வந்த தட்டுக்களுக்கும் ஏகாதிபத்திய சக்திகளால் நிதியளிக்கப்படுகின்றன, இவைகள் ஆயுதங்களை விநியோகிக்கின்றன, மேலும் போருக்கான மூலோபாய மற்றும் விநியோகத் திட்டமிடல்களையும் வழங்குகின்றன.
அனைத்து முனைகளிலும் தொடர்ந்து போரைத் தொடுப்பதற்கான வாஷிங்டனின் தகைமையை எடுத்துக்காட்டுவதற்கு இந்த இராணுவ செலவின மசோதா அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர், உக்ரேனுக்கான 60 பில்லியன் டாலர்களுக்கு காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதன் அவசரத்தை விவாதித்த போது, “கியேவ் கைவிடப்படுவது ஆக்கிரமிப்பாளர்களான மாஸ்கோ-தெஹ்ரான்-பெய்ஜிங்-பியோங்யாங் கூட்டணிக்கு ஒரு பரிசாக இருக்கும்.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தைரியமடைவதால் அமெரிக்காவின் கூட்டாளிகளும் பங்காளிகளும் அதன் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்’ என்று கூறினார்.
மிக அடிப்படையான மட்டத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பொருளாதார சக்தியின் மீதான “நம்பிக்கையை” இழந்து வருவதால் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளது,
கடந்த மூன்று தசாப்தங்களாக அதன் சவாலுக்கிடமற்ற இராணுவ மேலாதிக்கத்தை அதிகரித்தளவில் மிகத் தீவிரமாகப் பயன்படுத்துவதன் மூலமாக அதைத் தாங்கிப் பிடிக்க அது முயன்று வந்திருக்கிறது.
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள ஒரு மோதலில் உக்ரேன் தோற்கடிக்கப்படுவது இந்த செயற்பட்டியலுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் அடியைக் கொடுக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்க நம்பமுடியாத தொகைக் கடன்களைக் குவிக்க அனுமதிக்கும் டாலரின் மேலாதிக்கம் இன்னும் தீவிரமாக கேள்விக்கு உட்படுத்தப்படும்.
ஆனால் உக்ரேனிய கொன்றுகுவிப்புகளில் சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் முதலீட்டு நிதிகளின் இலாபங்களைப் பாதுகாப்பது என்ற உடனடி பொருளாதார கவலைகளும் பணயத்தில் உள்ளன.
புதிய ஆயுதங்களை வாங்குவதற்கு அப்பால், 60 பில்லியன் டாலர்களில் ஒரு கணிசமான பகுதி, ஏதேனும் ஒரு வடிவத்தில், அவற்றின் கட்டணங்களைச் செலுத்தவே செல்லும். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல்படி, “ MFS முதலீட்டு மேலாண்மை (MFS Investment Management), பிளாக்ராக் (BlackRock) மற்றும் நம்பகத்தன்மை முதலீடுகள் (Fidelity Investments) உள்ளிட்ட சர்வதேச பொண்ட் பத்திரதாரர்கள் (bondholders), 2024 நடுப்பகுதி வரை சுமார் 20 பில்லியன் டாலர்கள் கடனுக்கு பணம் செலுத்துவதற்கான தற்காலிக இடைநிறுத்தம் வழங்க கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டனர்.
நிதி அமைச்சகம் அடுத்த ஆண்டு பொண்ட் பத்திரங்களை (bonds) மேலும் மறுசீரமைக்கப்படும் என்று நம்புகிறது, இது தயக்கம் காட்டும் முதலீட்டாளர்களை கடன்களில் மீதமுள்ள சிலவற்றை மன்னித்துவிடுவதும் மற்றும் கடனை வெவ்வேறு நிதி கருவிகள் அல்லது பத்திரங்களில் பரிமாறிக்கொள்ளமாறு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம் பைனான்சியல் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது, “தனியார் முதலீட்டில் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை ஈர்க்கக்கூடிய மறுகட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மூலோபாய ரீதியாக பொது நிதியைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிற மூலதனத்தை செலுத்த உக்ரேனிய அரசாங்கம் ஒரு மறுகட்டமைப்பு வங்கியை அமைக்க பிளாக்ரொக் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase) உதவுகின்றன.”
3.7 ட்ரில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய வங்கியான ஜேபி மோர்கன் சேஸ், உக்ரேனில் கொள்கையை வழிநடத்துவதில் ஆழமாக சம்பந்தப்பட்டிருக்கிறது.
மே 2023 இல் வங்கியால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வங்கி “மறுசீரமைப்பு உத்திகள், அரசாங்க கடன் மதிப்பீடுகள் (sovereign credit ratings), அரசாங்க பணப்புழக்கத்தின் சொத்து மேலாண்மை மற்றும் பொருளாதாரத்தின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் அதன் நிபுணத்துவத்தை வழங்குகிறது” என்று குறிப்பிட்டது.
“ஐரோப்பாவுடன் நெருக்கமான பொருளாதார இணைப்பை ஸ்தாபிக்க உக்ரேனுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும், அத்துடன் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் துறைகளில் இருந்து முதலீடுகளை வழிநடத்தவும் பாதுகாக்கவும், மற்றும் வர்த்தக ஓட்டங்களை எளிதாக்கவும்” வங்கி செயல்பட்டு வருவதாகவும் அது சேர்த்துக் கொண்டது.
உக்ரேனிய ஆட்சியை ஆதரிப்பதில் அவற்றின் சொந்த யூரோக்களில் பல பில்லியன்களை முதலீடு செய்துள்ள வாஷிங்டனின் தற்போதைய ஐரோப்பிய கூட்டாளிகளும் தொடர்ந்து அமெரிக்க ஆதரவைப் பெறுவதில் தீர்மானகரமாக உள்ளன என்பதோடு, அதேயளவுக்கு அவற்றின் தங்கள் சொந்த நலன்களைப் பின்தொடர்வதற்கு உறுதியாக இருக்கின்றன.
பைடென் உடனான இருதரப்பு சந்திப்புக்காக தற்போது வாஷிங்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷொல்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் விருந்தினர் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
கியேவுக்கு (Kyiv –national capital, Ukraine) இன்னும் கூடுதலாக 50 பில்லியன் யூரோக்கள் (54 பில்லியன் டாலர்கள்) நிதி உதவிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்து வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர், ஐரோப்பிய சக்திகள் “போர் தொடங்கியதில் இருந்து 91 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பங்களிப்பு செய்துள்ளன,
அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் உக்ரேனின் மிகப் பெரிய நிதி ஆதரவாளராக இருந்து வருகின்றன” என்று ஷொல்ஸ் பெருமைபீற்றினார்.
“எங்களது ஆதரவு இருந்தபோதிலும், உக்ரேன் விரைவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளில் கடுமையான பற்றாக்குறையை முகங்கொடுக்கக்கூடும். சில நிதிப் பொறுப்புகள் ஏற்கனவே தீர்ந்துவிட்டன, மற்றவை நீட்டிக்கப்பட வேண்டும். திரு. புட்டினின் மிகத் தீவிரத்தை தடுக்கத் தவறியதன் நீண்டகால விளைவுகளும் செலவுகளும் இப்போது நாம் செய்து வரும் எந்தவொரு முதலீடுகளையும் சிறியதாக்கிவிடும்,” என்றார்.
எல்லா போர்களையும் போலவே, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரும் முதலாளித்துவ ஒட்டுண்ணிகளுக்கு மனித இரத்தத்தை டாலர்களாகவும் யூரோக்களாகவும் மாற்றுவதற்கான பொன்னான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
கொள்ளையின் பெரும் பங்கை யார் பெறுவது என்பதைத் தீர்மானிக்கும் அமெரிக்க அல்லது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பூசலில் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கான எந்த அக்கறையும் தொழிலாளர்களுக்கு கிடையாது.
பிற்போக்குத் தேசியவாத புட்டின் ஆட்சியானது ஏகாதிபத்தியவாதிகளின் இலாபங்கள் மற்றும் சூறையாடலுக்கான பேராசைக்கு எந்த மாற்றீட்டையும் வழங்கவில்லை.
அதற்கு மாறாக, ரஷ்ய முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் — இது சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டதற்கு நன்றிக் கடன்பட்டுள்ளது — வரலாற்று திவால்நிலையானது உக்ரேன் மீதான ஏகாதிபத்தியவாதிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுப்பாக இராணுவ வன்முறை மற்றும் ரஷ்ய பேரினவாதத்தை ஊக்குவிப்பதைத் தவிர வழங்குவதற்கு அதனிடம் வேறெதுவும் இல்லை என்ற உண்மையில் அது வெளிப்படுத்தப்பட்டது.
போர் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு மூல காரணமான முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு போராட்டத்தின் அடிப்படையில் ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே உக்ரேனில் கொன்றுகுவிப்பதை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
ஏகாதிபத்தியவாதிகள் எந்த அளவிற்கு செல்லத் தயாராக உள்ளனர் என்பது உக்ரேனில் இறப்பு எண்ணிக்கையில் மட்டுமல்ல, மாறாக பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அவர்கள் ஒருமனதாக ஆதரவளித்ததிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்படையான காட்சிகள் ஏற்கனவே உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் எதிர்ப்புக்களை உருவாக்கியுள்ளன.
ஏகாதிபத்திய போருக்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற பரந்த எதிர்ப்பை அணித்திரட்டுவது என்பது எதிர்விரோத முதலாளித்துவ தேசிய-அரசுகளாக பூகோளம் பிளவுபட்டதால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கு எதிராக உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தினால் எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்