இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதில் அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்டி வருகிறது.
அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது இலங்கைக்கு, எல்லை கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளை வழங்குவதற்கு, அமெரிக்க அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
அமெரிக்கா இந்த எல்லை கட்டுப்பாட்டு பொறிமுறையை இலங்கைக்கு விற்பனை செய்வதற்கு முன்வரவில்லை. அதனை கொடையாக வழங்குவதற்கே முன் வந்திருக்கிறது.
ஏற்கனவே இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா மூன்று போர்க்கப்பல்களை கொடையாக வழங்கியிருக்கிறது. அவை அனைத்தும் ஆழ்கடல் கண்காணிப்புக்காக இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது இலங்கை கடற்படையிடம் இருக்கின்ற மிக முக்கியமான எட்டு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களில், அமெரிக்காவின் மூன்று கப்பல்களும் உள்ளடங்குகின்றன.
அதுபோலவே இலங்கை விமானப்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா அதிநவீன கருவிகளை கொடையாக வழங்கியிருக்கிறது.
விமானப்படையிடம் உள்ள பீச் கிராஃப்ட் விமானத்தில் அமெரிக்கா வழங்கிய நிகழ்நிலை கண்காணிப்பு கருவிகள் தான், பொருத்தப்பட்டிருக்கின்றன.
போர்க்கால மீறல் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறுவது, தொடர்பாக இலங்கைக்கு அமெரிக்கா தொடர் அழுத்தங்களை கொடுத்து வருகின்ற நிலையில்- மீறல்களுடன் தொடர்புடைய, இலங்கை இராணுவத்துக்கான உதவிகளை மாத்திரமே நிறுத்தி வைத்திருக்கிறது.
மற்றபடி கடற்படை, விமானப்படை, உள்நாட்டு பாதுகாப்பு துறைகளுடன், அமெரிக்கா தனது பாதுகாப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டே வருகிறது.
இத்தகைய பலப்படுத்தலின் அடுத்த கட்டமாகத் தான், எல்லைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை இலங்கையில் நிறுவுவதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்தக் கொடையை இலங்கை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை அதேவேளை அதனை உதாசீனம் செய்யவும் இல்லை.
இந்த பொறிமுறையை ஏற்றுக் கொள்வதா? என்பது குறித்து அரசாங்கம் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
முதலில் இந்த எல்லை கட்டுப்பாட்டு பொறிமுறை என்றால் என்ன பார்த்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.
இலங்கை ஒரு தீவு என்பதால், பிற நாடுகளுடன் தரைவழி எல்லைகள் இல்லை. அதனால் இலங்கைக்குள் நுழைவதற்கு இரண்டு வழிகள் மாத்திரமே இருக்கின்றன. ஒன்று கடல் வழி- இன்னொன்று வான்வழி.
கடல் வழியாக நுழைப்பவர்கள் துறைமுகங்களை பயன்படுத்த முடியும். வான் வழியாக நுழைப்பவர்கள் விமான நிலையங்களை பயன்படுத்த முடியும்.
சட்டவிரோதமாக கடல் வழியாக நுழைவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், அதனை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே விமானப்படை மற்றும் கடற்படைக்கு அமெரிக்கா அதிநவீன கண்காணிப்புக்கு கருவிகளையும் கப்பல்களையும் வழங்கியிருக்கிறது.
இன்னொரு விமானத்தையும் விரைவில் வழங்க உள்ளது.
சட்டபூர்வமாக இலங்கைக்குள் நுழைபவர்கள் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறுபவர்களை அதாவது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊடாக, வெளியேறுபவர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை தான் எல்லை கட்டுப்பாட்டு பொறிமுறை என்று கூறப்படுகிறது.
இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நிறுவுவதன் மூலம் – உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் குடியேற்றத்தை ஒழுங்குபடுத்த முடியும். பாதுகாப்பை மேம்படுத்த முடியும். அத்துடன், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்க முடியும்.
இது அமெரிக்காவின் ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.
குற்றவாளிகள், சந்தேக நபர்கள், தேடப்படுபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து வைத்திருந்தால், அத்தகையவர்கள் உள்நுழையும் போதோ வெளிச் செல்லும் போதே அடையாளம் கண்டு தடுத்து நிறுத்துவதற்கு இந்த தொழில்நுட்பம் உதவும்.
தற்போது அடையாளம் காண பயன்படும் ஆவண ரீதியான முறைக்குப் பதிலாக, நவீன உயிரியல் விஞ்ஞான முறையின் இந்த அடையாளம் காணும் பொறிமுறை செயற்படும்.
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு புதிய பொறிமுறை நிறுவப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன.
‘Automated Facial Recognition System’ எனப்படும் தானியங்கி முக அங்கீகார அமைப்பே அது. அமெரிக்காவில் 1960களில் நிறுவப்பட்ட தொழில்நுட்பம் இது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, குற்றவாளிகள் சந்தேக நபர்கள் தடை செய்யப்பட்ட நபர்கள் போன்றவர்களின் படங்களை ஆராய்ந்து அத்தகைய முக அமைப்பை கொண்டவர், விமான நிலையத்தை கடந்து செல்லும்போது அடையாளம் காணப்படக் கூடிய தொழில்நுட்பம் இது.
இது தனியே முக அமைப்பை மாத்திரம் கொண்டு அடையாளம் காணும் வகையிலானது.
இதனை விட தற்போது அமெரிக்கா வழங்க முன் வந்திருக்கின்ற பொறிமுறை வித்தியாசமானது. இது ஒரு நபரின் உயிரியல் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு பொருத்தப்பாடுகளை ஆராய்ந்து அடையாளம் காணக்கூடியது.
முன்னரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன உயிரியல் நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு கருவியை பொருத்துவதற்கு அமெரிக்கா முன்வந்த போதும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
தற்போதைய அரசாங்கம் அதனை பெற்றுக்கொள்வதற்கான பரிசீலனையை மேற்கொண்டு வருகிறது.
இதனை நிராகரிப்பது, அமெரிக்காவின் உதவியை இலங்கை நிராகரிப்பதாக மாத்திரம் கருதப்படாது.
குற்றவாளிகள் உள்நுழைவதை தடுப்பதற்கு, தப்பிச் செல்வதை தடுப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்ற கருத்தையும் உருவாக்கும்.
தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கோ தடுப்பதற்கோ இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க விரும்பவில்லை என்ற அர்த்தமும் கற்பிக்கப்படும்.
இதுபோன்று பல்வேறு விதங்களில் இந்த நிராகரிப்பு அமெரிக்காவினால் எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அதனால் இலங்கை அரசாங்கம் தவிர்க்க முடியாமல் இந்த உள்நாட்டு எல்லை கட்டுப்பாட்டு பொறிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த கருவிகளை ஏன் இலங்கையில் பொருத்துகிறது? இதன் மூலம் அமெரிக்காவுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது?
இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கேந்திரமாக இலங்கையை அமெரிக்கா கருதுகிறது. இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, சீனா போன்ற நாடுகள் அதனை தமது பக்கம் இழுத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றன என்பதையும் அமெரிக்கா வலுவாக உணர்ந்திருக்கிறது.
இத்தகைய கட்டத்தில் இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொள்வதற்கு, வேறு எந்த சக்திகளையும் அனுமதிக்காமல் இருப்பதற்கு அமெரிக்கா முற்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக தான் விமான நிலையங்கள் துறைமுகங்களில் அமெரிக்காவின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து அமெரிக்கா பெரிய முதலீடு ஒன்றைச் செய்ய உள்ளது.
அதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் பொறியியலாளர்கள், செயற்பாட்டு முகாமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமெரிக்கா பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குவதற்கும் முன்வந்திருக்கிறது.
இதன் ஊடாக கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் மற்றும் கொள்கலன்கள் போன்றவற்றை அமெரிக்காவினால் இலகுவாக கண்காணிக்கக் கூடிய சூழல் உருவாக்கப்படுகிறது.
-சுபத்திரா-