கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுத்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள், கலஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் குழுவினரே, கலஹா, தெல்தோட்டை கிரேட்வெளி தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஐந்து ஆண்களும், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.

கொழும்பு, ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் உள்ள கூண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சயனைட் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர், பால் பாக்கெட்டுகளை​ கொள்வனவு செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பால் பாக்கெட்டை வழங்கியதையடுத்து, அவற்றை குடித்த இருவரும் மயங்கிவிட்டனர். ஆபத்தான நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கலஹா கிரேட்வேலி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மருதானையில் பணிபுரியும் போது, ​​பிரதான சந்தேகநபருக்கு தங்குமிடத்தை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டது.

அங்கு வைத்தே இந்த கொலையை திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. அந்த குழுவினர், கலஹா, கிரேட்வலி தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் ​பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜிந்துபிட்டி பிரதேசத்தில் ஜனவரி 24 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது, அங்கு வந்திருந்த ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தக் கொலை சந்தேகநபர்களுக்கு, விஷம் கலந்த பால் பாக்கெட்டுகளை வழங்கியவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில்,கலஹா கிரேட்வேலி தோட்டத்திலுள்ள வீடொன்றில் புதிதாக வந்தவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அதனையடுத்து ஆட்டுபட்டிதெரு வீதி பொலிஸ் குழுவொன்று, கலஹாவுக்கு விரைந்து அங்கிருந்த ஏழுபேரையும் கைது செய்து, ஆட்டுபட்டிதெரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நவி

Share.
Leave A Reply