இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் முக்கிய பாதைகளும், விவசாயக் குளங்களின் அணைக்கட்டுகளும் அதிகளவில் சேதமடைந்துள்ளன.
தொடர் மழையின் காரணமாக அம்பாறையில் உள்ள சேன நாயக்க குளம் நிரம்பியதால், அதன் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டன. அதில் இருந்து வெளியேறிய நீரில் குளத்திலிருந்த கணையான் மீன்களும் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கால்வாயில் இந்த கணையான் மீன்களை மீனவர்கள் பிடித்து விற்பனை செய்கின்றனர். 25 கிலோகிராம் வரை எடை கொண்ட பெரிய மீன்களும் கூட கிடைக்கின்றன. கருவாடு சந்தையில் கணையான் மீன் ஒரு கிலோ 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கணையான் மீன்களை பிடித்து விற்கும் ஒவ்வொரு மீனவருக்கும் நாளொன்றுக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகவும், 25 கிலோ வரை எடை கொண்ட கணையான் மீன்கள் கிடைப்பதை இதற்கு முன்னர் தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை எனவும் கூறுகிறார் பேரிடர் மேலாண்மை நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ்.
தோணியில் சென்று கணையான் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, காலை வேளையில் 40 ஆயிரம் ரூபாய்க்கு மீன்களை விற்றதாகவும், பிற்பகலில் மீன் பிடிக்க சென்றபோது மீண்டும் ஏராளமான மீன்கள் கிடைத்ததாகவும் கூறினார்கள்.