சோழ வம்சத்தின் பொற்கால ஆட்சிக்கு சான்றாக 1000 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழர்களை உலகளவில் பெருமைப்பட வைத்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கருவறை கோபுரம், நிழல் விழாத கட்டமைப்பு, மிகப்பெரிய லிங்க மூலவர், 80 டன் எடையை தாங்கி நிற்கும் கோபுரம், கற்களால் கட்டமைப்பட்ட நுணுக்கமான வடிவமைப்பு என பல பெருமைகளை தஞ்சை கோயில் உள்ளடக்கி நிற்கிறது.

ஆனால் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டுவதற்கு ஒரு கோவில் தான் உத்வேகமாக இருந்ததாம். அந்த கோயில் கட்டுமானத்தை பார்த்து தான் ராஜராஜ சோழன் தஞ்சை கோயிலைக் கட்டினாராம்! அது எந்த கோவில்? அதுவும் தமிழகத்தில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில் தான்!

 

ராஜராஜ சோழனை ஈர்த்த திருக்கோவில்

இந்த கோயிலை 2000 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்கள் கட்டினார்கள். இந்த கோவில் காலப்போக்கில் பல்லவர், பாண்டியர், சோழர் என பல மன்னர்களால் சீரமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கோபுரத்தில் பாண்டியர்களின் சின்னமான மீன் கொடி அங்கே பொறிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு முன்னர் மாமன்னர் ராஜராஜ சோழன் இந்த கோவிலில் தங்கி இருந்து இதன் கட்டுமானத்தை பற்றி தெரிந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

உலகபிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் எழுப்ப முக்கிய காரணமாக இருந்தது இந்த கோயில் தான். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வீராட்டனேஸ்வரர் கோவில் தான் அது.

தஞ்சையும் திருவதிகையும் ஒன்று

நீங்கள் உள்ளே சென்று பார்த்த உடனேயே வீராட்டனேஸ்வரர் கோயிலுக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்னவென்று உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

சிற்பங்கள், லிங்கங்கள். கல்வெட்டுகள் அனைத்தும் நமக்கு தஞ்சை கோயிலைப் பிரதிபலித்தாலும், பிரதான கோபுரம் அப்படியே தஞ்சை பெரிய கோவில் கோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது. என்ன ஒரு அதிசயம் அல்லவா?

 

2000 ஆண்டுகள் பழமையான திருவதிகை

7 ஏக்கர் பரப்பளவில் மூன்று பிரகாரங்களுடன் ஆயிரக்கணக்கான சிற்பங்களுடன், குளங்கள், மண்டபங்கள், சன்னதிகள் என இக்கோயில் 2000 வருடங்களுக்கு முன்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் இந்த கோயில் அதைவிட பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து பார்க்கும் போது கோயிலில் பல்வேறு கட்டமைப்புகளை கட்டியதாகவும் நம்பப்படுகிறது.

இக்கோயில் பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. தஞ்சாவூர் மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனித்துவ காலத்தின் போது, இக்கோவில் இராணுவத்தின் கோட்டையாக செயல்பட்டது.

ஆணவத்தை அடக்கி ஆளும் வீராட்டனேஸ்வரர்

ஆணவத்தை அடக்கி அடிபணியச் செய்யும் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈசனின் வீரத்தை வெளிப்படுத்தும் மூன்றாவது ஸ்தலமாக இக்கோயில் அமைந்துள்ளது.

ஒரே சமயத்தில் தேவர்களின் ஆணவத்தையும் அசுரர்களின் அட்டகாசத்தையும் ஈசன் அடக்கினார் என்று இக்கோயில் வரலாறு கூறுகின்றது.

ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அளித்த சிவபெருமானுக்குத் திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோயில் காலத்தில் வென்ற நிற்கும் சிற்பக் களஞ்சியமாக உள்ளது.

மெய்மறக்கவைக்கும் கட்டிடக்கலை கிழக்கு நோக்கி ராஜகோபுரமும் ஏழு நிலைகளுடனும், ஏழு கலசங்களுடனும் கோயிலுக்கு முன்னால் 16 கால் மண்டபத்துடனும் காணப்படுகின்றது.

இம்மண்டப தூண்களில் ரிஷப ரூடர், அப்பர், மயில்வாகனன் ஆகியோரின் சிற்பங்களும், கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரின் சிற்பங்களும் உள்ளன. கோபுர வாயிலில் இருபக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் பெண்களின் அழகிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.

திறந்த வெளி முற்றத்தில் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் ஐந்து அடி உயரமுள்ள பத்மாசனக் கோளத்தில் காணப்படும் புத்தர் சிலையும் உள்ளது.

நீங்களும் சென்று வாருங்கள்

திருவதிகை ஸ்ரீ வீராட்டனேஸ்வரர் திருத்தலத்தில் வழங்கப்படும் திருநீரை நெற்றியில் பூசும் போதும் கூட அண்ணாந்து பூசக்கூடாது, தலை குனிந்து பய பக்தியுடன் பூச வேண்டுமாம்.

தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் சிவன் திருநீறு பூசிக்கொண்டால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கர்வமில்லாமல் சிவனை நாடி வரும் பக்தர்களை சிவபெருமான் சகல சௌபாக்கியங்களுடன் வாழ வைக்கிறார். ஒரு முறை திருவதிகை சென்று வந்தாலும் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது உண்மை

 

Share.
Leave A Reply