அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே உள்ள அபு முரேகாவில் அந்நாட்டின் முதலாவது இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கு 2019-ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

கோயிலின் கட்டுமானப் பணிகளை பிஏபிஎஸ் (BAPS) அமைப்பு மேற்கொண்டது, இந்நிலையில், 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர், கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றார்.

கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, சுவாமி நாராயண் சிலை மீது மலர் தூவி வழிபாடு செய்தார்.

கோயிலுக்கு கங்கை மற்றும் யமுனை நதியின் நீரையும் வழங்கினார். மேலும், வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கோயிலின் மாதிரியையும் பார்வையிட்டார்.

திறப்பு விழாவுக்கு பின், கோயிலில் நடைபெற்ற பிரார்த்தனை மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கோயில் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கோயிலுக்கு நிலம் வழங்கிய அதிபர் பின் சயீத் அல் நஹ்யானுக்கு, எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அபுதாபியிலும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அபுதாபி அருகே அபு முரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

கோயில் கட்ட 2015-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்போதைய பட்டத்து இளவரசரும், தற்போதைய அதிபருமான பின் சயீத் அல் நஹ்யான், 27 ஏக்கர் நிலம் வழங்கினார்.

இந்தக் கோயில் மத நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய மன்னர் இந்து கோயிலுக்காக நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.

கோயிலைக் கட்டியவர் கத்தோலிக்க கிறிஸ்தவர், கட்டடத்தின் திட்ட மேலாளர் சீக்கியர், அடித்தள வடிவமைப்பாளர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். கட்டுமான நிறுவனம் ஒரு பார்சி குழு, நிறுவனத்தின் இயக்குனர் ஜைன பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.

27 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்தக் கோயில், 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற சுவரில், அனைத்து கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வரலாறுகளும், இந்து கடவுள்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன.

கோயிலின் வெளிப்புறத்தில் ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்களும் உட்புறத்தில் இத்தாலியின் வெள்ளை பளிங்கு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் ஒரு இரும்புக் கம்பி கூட பயன்படுத்தப்படவில்லை.

கோயிலின் பீடத்தில் இந்திய நாகரிகம் தவிர, மாயா, எகிப்தி, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க நாகரிக வரலாறுகளும் இடம்பெற்றுள்ளன.
விளம்பரம்

மொத்தமுள்ள 7 கோபுரங்களில் ராமர், சிவன், ஜெகன்னாதர், கிருஷ்ணர், ஏழுமலையான் மற்றும் ஐயப்பன் சிலைகள் உள்ளன. ஏழு கோபுரங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களைக் குறிக்கின்றன.

Share.
Leave A Reply