மீள்ஆயுதமயமாக்கலுக்கு போதுமானளவு செலவிடத் தவறும் நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க இராணுவ பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய சக்திகள் வெளிப்படையான போர் வெறியைக் கொண்டு பதில் அளித்துள்ளன.
இராணுவ தன்னுரிமையில் இருந்து ஒரு சுதந்திரமான ஐரோப்பிய அணு ஆயுத அமைப்புமுறையை அபிவிருத்தி செய்வது வரையில் அதன் கோரிக்கைகள் நீள்கின்றன.
நேட்டோ உறுப்பினர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தையாவது ராணுவத்தில் முதலீடு செய்யாத நேட்டோ உறுப்பு நாடுகள் மீது ரஷிய தாக்குதல் நடந்தால், ஜனாதிபதி என்ற முறையில் தாம் உதவ மாட்டோம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் கூறினார்.
“அவர்கள் [ரஷ்யா] என்ன விரும்புகிறார்களோ அதைச் செய்வதற்கு நான் அவர்களை ஊக்குவிப்பேன்” என்று அவர் மேலும் கூறினார்.
ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்தக் கருத்துக்களுக்கு பதிலளிப்பதன் மூலம், தங்கள் மீள்ஆயுதமயமாக்கலை மேலும் விரைவுபடுத்தி, ரஷ்யாவிற்கு எதிரான அணுவாயுதப் போரைத் தயாரித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் ஏற்கனவே உக்ரேனில் பினாமி போரை நடத்தி வருகின்றனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, முன்னணி ஐரோப்பிய சக்திகள், ஜேர்மனியை முன்னணியில் கொண்டு, “பெரும் சக்திகளுக்கு” எதிராக போரை நடத்துவதற்கான தயாரிப்பில் இராணுவ மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
ஆனால் ட்ரம்பின் கருத்துக்களுக்கு விடையிறுக்கும் வகையில், ஐரோப்பிய அரசியல்வாதிகள், ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் இராணுவமயமாக்குவது, கட்டாய இராணுவ சேவையை அறிமுகப்படுத்துவது மற்றும் இப்போது ஒரு ஐரோப்பிய அணுஆயுதத்தின் சாத்தியக்கூறு குறித்து பகிரங்கமாக பேசி, இது இன்னும் ஒருபடி மேலே செல்ல வேண்டுமென கோருகின்றனர்.
இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர், அரசு ஒடுக்குமுறை மற்றும் அதிவலது பிற்போக்குத்தனத்திற்கான ஒரு செய்முறையாகும்.
இதனை ஜனநாயக ரீதியில் நடைமுறைப்படுத்த முடியாது. இது வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதைத் தூண்டும். இது ஏற்கனவே காசாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் வெளிப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புடன் பிணைந்துள்ளது.
Soviet nuclear warheads under inspection. The US bombs in Europe are thought to date back to Cold War times (Photo: jenspie3
Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் ஜேர்மனிய நிதி மந்திரியும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவருமான கிறிஸ்டியான் லிண்ட்னர், கூட்டு ஐரோப்பிய அணுவாயுதங்களை அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுத்தார்.
இது ஜேர்மனியை அதன் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அணுவாயுத சக்தியாக ஆக்கும். இன்றுவரை, ஜேர்மன் மண்ணில் மட்டுமே அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள அமெரிக்க அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் மூலோபாய அணுஆயுத படைகளை ஒரு ஐரோப்பிய அணுஆயுத தளவாடங்களுக்காக அடித்தளமாக்குவது உட்பட, கூட்டுறவுக்கான பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முன்மொழிவுகளுக்கு விடையிறுக்க லிண்ட்னர் முன்மொழிந்தார்.
அதேநேரத்தில், இது இராணுவவாதத்தின் செலவுகளை தொழிலாள வர்க்கம் தாங்கியாக வேண்டும் என்ற போர் அறிவிப்புடன் இது பிணைந்துள்ளது என்பதையும் லிண்ட்னர் தெளிவுபடுத்தினார்.
“கடந்த காலத்தின் ‘சமாதான ஆதாயம்’ குறிப்பாக, நலன்புரி அரசை விரிவுபடுத்த பயன்படுத்தப்பட்டது, இப்போது நாம் ‘சுதந்திர முதலீடு’ சகாப்தத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம், அதனால்தான் திசை மாற்றம் அவசியமாகிறது” என்று அவர் எழுதினார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவரும் ஐரோப்பிய தேர்தல்களுக்கான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளருமான கத்தரீனா பார்லி மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பழமைவாத குழுவின் ஜேர்மன் தலைவரான மன்ஃபிரட் வேபர் ஆகியோர் சுதந்திரமான ஐரோப்பிய அணுஆயுதங்களின் அபிவிருத்தி குறித்து விவாதித்தனர்.
“ஒரு ஐரோப்பிய இராணுவத்தை நோக்கிய பாதையில், இதுவும் ஒரு பிரச்சினையாக மாறக்கூடும்” என்று பார்லி Tagesspiegel க்கு தெரிவித்தார்.
பாரிசுக்கு தனது முதல் விஜயத்தின் போது, போலந்து பிரதம மந்திரி டொனால்ட் டஸ்க், ஐரோப்பாவின் அரசியல்வாதிகளும் சமூகங்களும் விழித்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பாவிற்கு ஒரு பொதுப் பாதுகாப்புக் கொள்கை தேவை, அது ஒரு வலுவான கண்டமாக ஆக வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
பெர்லினுக்கு அவரது அடுத்தடுத்த விஜயத்தின் போது, பிரெஞ்சு அணு ஆயுதங்களை ஐரோப்பியமயமாக்குவதற்கான மக்ரோனின் முன்மொழிவு “உண்மையில் தீவிரமாக” எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று டஸ்க் கூறினார்.
“ஐரோப்பிய ஒன்றியம் ஏன் ரஷ்யாவை விட இராணுவரீதியில் பலவீனமாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை,” என்றார்.
அணு ஆயுதத் துறையில் ரஷ்யாவின் மேன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த நேரத்தில் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய அணு ஆயுத தளவாடங்கள் குறித்த கேள்வியை இவ்வளவு பகிரங்கமாக எழுப்புவது தந்திரோபாய ரீதியாக விவேகமற்றது என்று மற்றவர்கள் கருதுகின்றனர்,
(ரஷ்யாவிடம் கிட்டத்தட்ட 6,000ம் அணு ஆயுதங்கள் உள்ளன, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து சுமார் 500 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன) ஆனால், அதற்கு பதிலாக அவர்கள் முதல் படியாக விரைவுபடுத்தப்பட்ட மரபார்ந்த மீள்ஆயுதமயமாக்கலுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் .
நேட்டோவின் அணுசக்தித் தடுப்பின் நம்பகத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு எதிராக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் அணுஆயுத குடை மட்டுமே ட்ரம்ப் முகாமின் மூலோபாய ஆவணங்களில் இதுவரை கேள்விக்கு உட்படுத்தப்படாத ஒரே விடயமாக உள்ளது.
ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸும் அணுசக்தி விவாதத்தை “இப்போது நமக்குத் தேவைப்படும் கடைசி விஷயம், இது தொடங்கப்படக்கூடாத ஒரு சிக்கலான விவாதம்” என்று விவரித்தார்.
ஆனால், இவை தந்திரோபாய வேறுபாடுகள் ஆகும். மீள்ஆயுதமயமாக்கல், போர் மற்றும் வர்க்கப் போர் ஆகிய பிரச்சினைகளில், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் உடன்படுகிறது.
புரூசெல்ஸில் நேற்று நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் ஒரு கூட்டத்தில், ஜேர்மனி நேட்டோவில் ஒரு முன்னணி பாத்திரம் வகிக்கிறது என்றும், ஐரோப்பாவின் பாதுகாப்பில் ஜேர்மனி “முதுகெலும்பாகவும்” மற்றும் “தளவாட மையமாகவும்” மாறி வருகிறது என்றும் பிஸ்டோரியஸ் வாதாடினார்.
அடுத்த ஆண்டு தொடங்கி, அது 35,000ம் நிலைநிறுத்தத்தக்க சிப்பாய்களையும், அத்துடன் 200 விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களையும் கூட்டணிக்கு வழங்கும்.
ஏனைய ஐரோப்பிய நேட்டோ அங்கத்துவ நாடுகளும் அவற்றின் இராணுவ செலவுகளை அதிகரித்து வருகின்றன.
31 நேட்டோ உறுப்பு நாடுகளில் 18 நாடுகள் இப்போது 2 சதவீத இலக்கை எட்டியுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று உறுப்பினர்கள் மட்டுமே அவ்வாறு செய்தனர்.
இது வெறும் ஆரம்பம்தான். ஐரோப்பிய ஆயுதத் தொழில்துறையும் பாரியளவில் விரிவாக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி வெடிமருந்துகளும் ஆயுதங்களும் மீண்டும் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
Ursula von der Leyen Présidente de la Commission européenne
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன், வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான யூரோக்கள் பணத்தைக் கொண்டு ஐரோப்பிய பாதுகாப்புத் தொழில்துறைக்கு ஆதரவளிக்கவும் மற்றும் எல்லைகளைக் கடந்து படைகளில் அணிதிரளவும் இம்மாத பிற்பகுதியில் ஒரு திட்டத்தை முன்வைக்க நோக்கம் கொண்டுள்ளார்.
ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மீள்ஆயுதமயமாக்கல் சுழற்சியை இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்துவதற்கான ஒரு தூண்டுதலாக மட்டுமே செயல்படுகின்றன.
எனவே சில கருத்துக்கள் ட்ரம்பின் அறிக்கைகளை “விழிப்பு அழைப்பு” என்று வரவேற்றுள்ளன.
உதாரணமாக, இப்போது ஜேர்மன் ஸ்பிரிங்கர் பதிப்பகத்திற்கு சொந்தமான பொலிடிகோ, “டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பாவிற்கு ஒரு நன்மை செய்தார்,” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிடுமூஞ்சித்தனமான கட்டுரையை வெளியிட்டது.
அது பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ட்ரம்பின் இடிமுழக்கம் ஐரோப்பாவின் மூலோபாய திசைகாட்டியை மீண்டும் மையப்படுத்த உதவும்.”
பிரிட்டிஷ் பத்திரிகை International Affairsல் கருத்துரைக்கையில், ட்ரம்பின் கருத்துக்கள் “ஐரோப்பிய தலைவர்களுக்கு, குறிப்பாக பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸில் உள்ளவர்களுக்கு ஒரு விழிப்பு அழைப்பு… ஐரோப்பாவின் பாதுகாப்பில் டொனால்ட் ட்ரம்பால் ஐரோப்பிய தலைவர்களை ஐக்கியப்படுத்த முடியவில்லை என்றால், உண்மையில் அங்கே சிறிதளவே நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கல் வெறுமனே ரஷ்யாவுக்கு எதிராக மட்டும் செலுத்தப்படவில்லை.
நேட்டோவில் உள்ள ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒத்துழைத்தாலும், அவை பொருளாதார மற்றும் புவிசார் அரசியலில் போட்டியாளர்கள்தான்.
டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது இரு தரப்பினரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை விதித்தனர்.
அவை பைடனின் கீழ் ஒருபோதும் முழுமையாக அகற்றப்படவில்லை. ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயும் கடுமையான பதட்டங்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் இப்போதைய கூட்டாட்சி ஜனாதிபதியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மேயர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் தலைமையிலான முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள், ஜேர்மனி அதன் “இராணுவக் கட்டுப்பாட்டை” கைவிட்டு, ஐரோப்பாவில் முன்னணி சக்தியாக ஆக வேண்டுமென்றும், அதன் பொருளாதார பலத்திற்கு பொருத்தமான ஒரு அரசியல் மற்றும் இராணுவ பாத்திரத்தை உலகெங்கிலும் மீண்டுமொருமுறை வகிக்க வேண்டுமென்றும் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரியிருந்தனர்.
அதே ஆண்டில், அவர்கள் கியேவில் நடந்த வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தனர். இது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு பாதையை அமைத்துக் கொடுத்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவற்றின் உறுப்பு நாடுகள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைக் கொண்டு போருக்கு நிதியளித்து இராணுவரீதியில் அதனைக் கட்டுப்படுத்தியுள்ளன.
இராணுவ தன்னுரிமை மற்றும் அணுவாயுத தன்னுரிமைக்கான அழைப்பு, ஐரோப்பிய சக்திகளும், அத்துடன் அமெரிக்காவும், அவற்றின் ஏகாதிபத்திய இலக்குகளை எட்டுவதை (ஐரோப்பாவைச் சீரழிக்கக் கூடிய மற்றும் மனிதயினத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்தக் கூடிய ஓர் அணுஆயுதப் போரைக் கூட) சாதிக்க தயங்கப் போவதில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத நெருக்கடியே அவர்களை போருக்கு உந்துகிறது.