தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் “ஆட்சி தொடர்வதற்கான” வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிடைத்த ரஷ்ய அரசாங்க ஆவணங்கள் விவரிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூனில் ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ’வாக்னர்’ கூலிப்படையின் வணிகங்களை ரஷ்ய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் இது.

`வாக்னர்` குழுவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நடவடிக்கைகள், தற்போது `ரஷ்யன் எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்` எனும் பெயரில் செயல்படுகின்றன.

பிரிட்டன் தெருக்களில் நோவிசோக் எனும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி செர்ஜேய் ஸ்க்ரிபாலைக் கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைவழிப் போர் நிபுணரும் இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக் வாட்லிங் கூறுகையில், “இது ரஷ்ய அரசு அதன் ஆப்பிரிக்கக் கொள்கையின் நிழலில் இருந்து வெளிப்படுவதைக் காட்டுகிறது” என்றார்.

ஜூன் 2023-ல், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அநேகமாக உலகில் மிகவும் அஞ்சப்படும் பிரபலமான கூலிப்படை தலைவராக இருந்திருக்கலாம்.

அவரது வாக்னர் குழு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

அதேநேரத்தில், அக்குழுவின் போராளிகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மையமாக இருந்தனர்.

பின்னர், அவர் மாஸ்கோவில் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார் பிரிகோஜின். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் தலைவரை அகற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதுவரை யாரும் தராத அச்சுறுத்தல் அது.

சில வாரங்களுக்குள் அவர் மிகவும் சந்தேகத்திற்கிடமான விமான விபத்தில் இறந்தார். வாக்னர் குழுவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அந்த நேரத்தில் பரவலான ஊகங்கள் இருந்தன. இப்போது, அதற்கு பதில் இருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டம் என்ன?

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, “ப்ரிகோஜினின் கலகத்திற்குப் பிறகு கிரெம்ளினில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் வாக்னரின் ஆப்பிரிக்க நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-ன் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வரும் என்று முடிவு செய்யப்பட்டது” என்றார்.

யூனிட் 29155-ன் தலைவரான ஜெனரல் ஆண்ட்ரே அவெரியனோவிடம், ‘குறிவைக்கப்பட்ட கொலைகள்’ மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ரகசிய நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஜெனரல் அவெரியனோவின் புதிய பணி, அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதாக இல்லை. மாறாக, தங்களுக்குப் பணம் செலுத்தும் வரை ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் அரசைப் பாதுகாப்பதாகத் தெரிய வருகிறது.

செப்டம்பர் தொடக்கத்தில், துணை பாதுகாப்பு அமைச்சர் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் உடன், ஜெனரல் அவெரியனோவ் ஆப்பிரிக்காவில் முன்பு நடந்த வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

அவர்கள் லிபியாவில் போர்த் தளபதி ஜெனரல் கலீஃபா ஹஃப்தாரை சந்தித்தனர். அடுத்ததாக புர்கினா ஃபாசோவில் 35 வயதான தலைவர் இப்ராஹிம் ட்ரேரே அவர்களை வரவேற்றார்.

அதன் பிறகு, அவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு சென்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட வாக்னர் நடவடிக்கைகள் அங்குதான் செயல்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர், மாலிக்கு சென்று அங்குள்ள ராணுவ ஆட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.

‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள இந்த பேனரில், `ரஷ்யா வாக்னர், நாங்கள் ரஷ்யாவை நேசிக்கிறோம், வாக்னரை நேசிக்கிறோம்` என எழுதப்பட்டுள்ளது.

இன்னும் ஆழமான நடவடிக்கைகள்

அடுத்த பயணத்தில், கடந்த ஆண்டு நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ வீரர்களில் ஒருவரான ஜெனரல் சாலிஃபோ மோடியையும் அவர்கள் சந்தித்தனர்.

ப்ரிகோஜினின் மறைவு அவரது வணிக ஒப்பந்தங்களின் முடிவைக் குறிக்கவில்லை என்று, வாக்னரின் கூட்டாளிகளுக்கு இருவரும் உறுதியளித்தனர் என்பதை பல்வேறு சந்திப்புகள் நிரூபிக்கின்றன.

புர்கினா ஃபாசோவின் தலைவர் இப்ராஹிம் ட்ரேரே உடனான சந்திப்பு பற்றிய அறிக்கைகள், “விமானிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் ராணுவ பயிற்சிக்கான” ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது.

சுருக்கமாக, ப்ரிகோஜினின் மரணம் ரஷ்யாவுடனான ராணுவ ஆட்சிக்குழுவின் உறவின் முடிவைக் குறிக்கவில்லை. சில வழிகளில், அது இன்னும் ஆழமாகியுள்ளது.

வாக்னருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர் மற்றும் புர்கினா ஃபாசோ, அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக்குள் சென்றன.

பின்னர் அவர்கள் பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் (Ecowas) எனப்படும் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலிருந்து விலகுவதாகவும் தங்களுக்கென சொந்தமாக “சஹேல் நாடுகளின் கூட்டணியை” உருவாக்குவதாகவும் அறிவித்தன.

கூலிப்படையினருடன் மிகவும் பின்னிப்பிணைந்த மாலிக்கு, முன்னதாக, பிரெஞ்சு ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையுடன் மினுஸ்மா எனப்படும் ஐ.நா. திட்டத்தின் வடிவத்தில் பாதுகாப்பு உதவி வந்தது.

ஆனால் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மீது மாலி ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, ரஷ்ய ஆதரவுடன் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற வாக்னர் குழு முன்வந்தபோது, ​​​​அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

’ஆம்பர் அட்வைசர்ஸ்’-க்காக பணிபுரியும் ஆப்பிரிக்க அரசியல் குறித்த ஆய்வாளர் எட்விஜ் சோர்கோ-டெபக்னே கூறுகையில், “பிரெஞ்சுக்காரர்கள் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக் கொள்ளப்பட்டனர்” என்றார்.

“சஹேலில் பயங்கரவாத நெருக்கடிக்கு உதவுவதற்கான பிரெஞ்சு திட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டது. எனவே, நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலம், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பது பயன்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

எவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் நினைவாக இந்த மலர்கள் CAR-ல் உள்ள ரஷ்ய கூலிப்படையினரின் நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டன.
மனித உரிமை மீறல்கள்

மாலியில் நடைமுறைக்கு அப்பால், ஏக்கமும் இருந்தது. “இந்த நாடுகளில், ரஷ்யா ஒரு புதிய கூட்டாளி அல்ல. முன்பு 1970 மற்றும் 1980களில் இங்கு இருந்திருக்கிறது” என்கிறார் அவர்.

“இது பெரும்பாலும் ரஷ்யாவுடனான உறவுடன் தொடர்புடையது” என எட்விஜ் சோர்கோ கூறுகிறார்.

ஆனால், இந்த நாடுகளை இயக்கும் ராணுவ ஆட்சிக்குழுக்களுக்கு, ரஷ்யாவின் ராணுவ பரவல் வெளிப்படையான நன்மைகள் இருக்கின்றன.

“ஆரம்பத்தில், இந்த ஆட்சியாளர்கள் இடைநிலைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தேர்தல்களை ஒழுங்கமைத்து ஜனநாயக நடைமுறைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்” என்கிறார் அவர்.

“ஆனால், இப்போது ரஷ்யக் கூலிப்படைகள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் விரும்பும் வரை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர்.”

பிரெஞ்சுப் படைகளை வெளியேறுமாறு மாலி ராணுவ ஆட்சிக் குழு உத்தரவிட்டது. இப்போது அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வாக்னரைச் சார்ந்துள்ளது. இது சாதாரண மாலியர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“ரஷ்யா மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களுடன் கூடிய அதிரடிப் படையை வழங்கியது” என்கிறார் டாக்டர் வாட்லிங்.

“அவர்கள் பாரம்பரிய சோவியத் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். போராளிகளையும், போராளிகளுடன் தொடர்புடைய பொதுமக்களையும் தூக்கிலிடப்படுவதை நீங்கள் காணலாம்” என்கிறார் அவர்.

ஆப்பிரிக்க கண்டத்திலும், யுக்ரேன் மற்றும் சிரியாவிலும் வாக்னர் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக பல கூற்றுகள் உள்ளன.

மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, மத்திய மாலி நகரமான மௌராவில் நடந்தது. ஐ.நா அறிக்கையின்படி, குறைந்தது 500 பேர் மாலி துருப்புக்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

“தெரியாத மொழி” பேசிய “ஆயுதமேந்திய வெள்ளையர்களால்” இவை நிகழ்த்தப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்”.

இதற்கு சுயாதீன சரிபார்ப்பு சாத்தியமில்லை என்றாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறியப்படாத தாக்குதல்காரர்களை ரஷ்ய கூலிப்படையினர் என்று அடையாளம் கண்டுள்ளது.

நூறு ரஷ்ய ராணுவ வல்லுநர்கள் கடந்த மாதம் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் புர்கினா ஃபாசோவிற்கு வந்தனர், மேலும் பலர் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளங்களின் மூலம் வருவாய்

மாலி, பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மரம் மற்றும் தங்கம் முதல் யுரேனியம் மற்றும் லித்தியம் வரையிலான இயற்கை வளங்கள் நிறைந்தது. சில மதிப்புமிக்கவை. மற்றவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, வாக்னர் கூலிப்படை நன்கு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தில் இயங்குகிறது: “ஒரு நிலையான ரஷ்ய செயல் முறை உள்ளது. செயல்பாட்டுக்கான செலவுகளை வணிக நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்வது. ஆப்பிரிக்காவில், அவை சுரங்கங்களால் ஈடுசெய்யப்படுகின்றன” என்றார்.

வாக்னர் குழு செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும், மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செலவுகளை மட்டும் ஈடுசெய்யாமல், கணிசமான வருவாயையும் ஈட்டுவதாக தெரிகிறது.

பிளட் கோல்ட் ரிப்போர்ட்டின் படி, (Blood Gold Report) ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்துள்ளது, இது யுக்ரேனில் நடந்த போருக்கு நிதியளித்திருக்கலாம்.

இந்த மாதம், முன்பு வாக்னர் கூலிப்படையினராக இருந்த ரஷ்ய போராளிகள், புர்கினா ஃபாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள மாலியின் இன்டஹாகா தங்கச் சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.

வடக்கு மாலியின் மிகப்பெரிய சுரங்கம், இப்பகுதியில் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், புவிசார் அரசியல் முக்கியத்துவத்துடன் வேறு ஒன்று உள்ளது.

“முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் மீதான மேற்கத்திய கட்டுப்பாட்டை யுக்தி ரீதியாக இடமாற்றம் செய்ய ரஷ்யர்கள் முயற்சிப்பதை நாங்கள் இப்போது கவனித்து வருகிறோம்” என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார்.

மாலியில், இயற்கை வளங்கள் மீது ராணுவ ஆட்சிக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக சுரங்கக் குறியீடு சமீபத்தில் மீண்டும் எழுதப்பட்டது.

அந்த செயல்முறை ஏற்கனவே ஒரு ஆஸ்திரேலிய லித்தியம் சுரங்கம், குறியீட்டை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, அதன் பங்குகளின் வர்த்தகத்தை இடைநிறுத்தியுள்ளது.

லித்தியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் முக்கியமானவை என்றாலும், டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, இன்னும் பெரிய மூலோபாய தலைவலி இருக்கலாம் என்கிறார் அவர்.

“நைஜரில் ரஷ்யர்கள் இதேபோன்ற சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றனர். இது யுரேனியம் சுரங்கங்களை பிரான்ஸ் பயன்படுத்துவதை தடுக்கும்” என்கிறார் அவர்.

மாலி நாட்டில் பலர் தங்க சுரங்கம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

 

“தீவிர அச்சுறுத்தல்”

மாலியில் செய்யப்பட்டதை நைஜரில் அடைய முயற்சி செய்வதில் கவனம் செலுத்திய ரஷ்ய குறிப்புகளை இந்த அறிக்கை விவரிக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்காவின் யுரேனிய சுரங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை ரஷ்யா பெற முடிந்தால், ஐரோப்பா மீண்டும் ரஷ்ய “எனர்ஜி பிளாக்மெயில்” என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தலாம்” என்றார்.

உலகின் மற்ற எந்த நாட்டையும் விட பிரான்ஸ் அணுசக்தியை அதிகம் சார்ந்துள்ளது, 56 உலைகள் நாட்டின் ஆற்றலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன.

அதன் ஐந்தில் ஒரு பங்கு யுரேனியம் நைஜரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நைஜர் போன்ற நாடுகளை முன்னாள் காலனித்துவ சக்தி சுரண்டுகிறது என்ற கருத்துகளுடன், வர்த்தக விதிமுறைகள் குறித்து முன்பு புகார்கள் வந்துள்ளன.

“மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறை அடிப்படையில் காலனித்துவமாக இருக்கின்றன என்ற கருத்தை ரஷ்யா முன்வைக்கிறது” என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். “இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இந்த ஆட்சிகளைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பது போன்ற ரஷ்ய அணுகுமுறை தான் மிகவும் காலனித்துவமானது” என்றார்.

உண்மையில், “எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்” என்பது ரஷ்ய வெளியுறவுக் கொள்கைக்கான தீவிரமான புறப்பாட்டைக் காட்டிலும் “வாக்னர் 2.0” என்பது போலவே தோன்றுகிறது.

ப்ரிகோஜின் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை உருவாக்கினார். எனவே, இந்த சிக்கலான வலையை அகற்றுவது கடினமாக இருக்கும்.

“எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்” அதே நாடுகளில், அதே கருவிகளுடன் அதே இறுதி இலக்குடன் செயல்படுகிறது.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, அடிப்படை மாற்றம் “ரஷ்யா தனது கொள்கையைப் பின்பற்றும் வெளிப்படையான தன்மையில்” உள்ளது.

ப்ரிகோஜினின் வாக்னர் குழுமம் எப்போதும் ரஷ்யாவிற்கு செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் செல்வாக்கு ஆகியவற்றில் நம்பத்தகுந்த உதவியை வழங்கியது.

யுக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் ரஷ்யாவின் முகமூடி நழுவிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

“அவர்கள் செய்ய விரும்புவது சர்வதேச அளவில் நமது நெருக்கடிகளை அதிகப்படுத்துவதாகும். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தீயை மூட்ட முயற்சிக்கின்றனர், மேலும் ஏற்கனவே உள்ளவற்றை தீவிரப்படுத்தி பாதுகாப்பில்லாத உலகத்தை உருவாக்குகிறார்கள்,” என்கிறார் டாக்டர் வாட்லிங்.

“இறுதியில், நாம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய போட்டியில் இது நம்மை பலவீனப்படுத்துகிறது. அதனால் தாக்கம் உடனடியாக உணரப்படாது. ஆனால் காலப்போக்கில், இது ஒரு தீவிர அச்சுறுத்தலாக மாறும்” என்றார் வாட்லிங்.

 

Share.
Leave A Reply