திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான தென்னைமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் வழிபாடுகளுக்கு சென்ற மக்களுக்கு புல்மோட்டை பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டு பொங்கல் நிகழ்வை நடாத்த விடாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (23) தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்வினை புல்மோட்டை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த நூறுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலணாய்வாளர்கள் கலகம் அடக்கும் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் காரணமின்றி தடுத்து வைத்தனர்.
புல்மோட்டை பொலிஸாரால் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தென்னமராவடி கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பிரதேசம் சங்கமலை புராதன விகாரைக்குரிய இடமான தொல்லியல் பிரதேசம் என்பதால் அப்பகுதிக்குள் உள்நுழைந்து இந்துமத வழிபாடுகளில் ஈடுபடுவது மற்றும் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆர்ப்பாட்டம் ஏற்படக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு கோரி புல்மோட்டை பொலிஸார் திருகோணமலை நீதவான் மன்றில் செய்த விண்ணப்பத்துக்கு ஏற்றவகையில் நீதிமன்றம் மேற்குறித்தவாறு தடை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரால் பெறப்பட்ட அந்த தடையுத்தரவில் தென்னைமரவாடி பகுதியைச் சேர்ந்த நான்கு தமிழ் மக்களின் பெயர் குறிப்பிட்டும், அகம் அமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் ஆகிய அனைவரும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106 (01) (3) பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என பொலிஸார் தடையுத்தரவை வழங்கி பொங்கல் நிகழ்வுக்கு வந்த தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
தென்னைமரவாடி பிரதேசம் முற்றுமுழுதாக தமிழ் மக்கள் நிறைந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லையில் திருகோணமலை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த தமிழ் கிராமமாகும் இந்த கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் 1984 ஆம் ஆண்டு சிங்கள காடையர்கள் மற்றும் இராணுவத்தினரால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டு கிராமத்தை தீயிட்டு கொளுத்தி கிராமத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர் .
மீண்டும் 2010 க்கு பின்னர் தமிழ் மக்கள் மீள்குடியேறிய பின்னர் அப்பகுதியில் உள்ள பெருமளவான தமிழ் மக்களின் இடங்கள் சிங்களமயமாக்கபட்டிருந்த நிலையில் கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பகுதியும் தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு புல்மோட்டை அரிசிமலை பகுதியில் உள்ள பனாமுரே திலகவன்ச என்ற பிக்குவும் இராணுவத்தினரும் தமிழ் மக்களின் வழிபாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.