காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ‘போர் நிறுத்தத்திற்கு’ அழைப்பு விடுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் மற்றொரு தீர்மானத்தை அமெரிக்க அரசாங்கம் நேற்று இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது.

காசாவின் குடிமக்களுக்கு எதிராக இஸ்ரேலின் தற்போதைய அழித்தொழிப்பு போரைப் பாதுகாக்க பைடன் நிர்வாகம் தனது ஒருதலைப்பட்ச இரத்து அதிகாரத்தை இத்துடன் மூன்றாவது முறையாகப் பயன்படுத்தியுள்ளது.

பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு பேரவை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் சாசனத்தை அமல்படுத்துவதற்கும், இராணுவ நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உறுப்பு நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதிகாரம் இதற்கு உள்ளது.

பதினைந்து உறுப்பினர்களில் ஐந்து பேர் ‘நிரந்தரமானவர்கள்’ மற்றும் எந்தவொரு தீர்மானத்தையும் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்ய அதிகாரம் பெற்றவர்கள். அவை சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவும் ஆகும்.

அக்டோபரில் இருந்து, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கிட்டத்தட்ட 30,000ம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு 70,000 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலர் கடுங் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டவையாக இருக்கலாம்.

இஸ்ரேலிய படைகள் பாரியளவில் அழிவுகரமான ஆயுதங்களைக் கொண்டு முழு நகர்ப்புற பகுதிகளையும் திட்டமிட்டு நாசமாக்குகின்ற நிலையில், ஏறத்தாழ 1.9 மில்லியன் மக்கள், அல்லது ஒட்டுமொத்த காஸா பகுதியிலும் ஐந்தில் நான்கு பேர் வீடற்றவர்களாக ஆகியுள்ளனர்.

மேலும் மேலும் சிறிய பகுதிகளுக்குள் தள்ளப்படும் தப்பிப்பிழைத்தவர்கள் இடைவிடாமல் படுகொலை செய்யப்படுவதோடு உணவு மற்றும் மருந்து வினியோகங்கள் தீர்ந்து வருகின்ற நிலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ஸ்னைப்பர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.

காஸாவில் வேண்டுமென்றே பாலஸ்தீனிய குடிமக்கள் படுகொலை செய்யப்படுவது, போரை நிறுத்த வேண்டும் என்ற உலக பொதுக் கருத்தையும் டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கால்வாசிக்கும் அதிகமான வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த தீர்மானத்தையும் மீறி தொடர்கிறது.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், ‘நம்பத்தகுந்த வகையில்’1948 இனப்படுகொலை தீர்மானத்தின் கீழ் வரக்கூடும் என்று ஜனவரியில் ஐ.நா. சாசனத்தின் கீழமைந்த மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் கண்டறிந்தது.

ஆனலும், இதனால் இஸ்ரேல், அமெரிக்கா அல்லது அவற்றின் நேட்டோ கூட்டாளிகளோ தடுக்கப்படவில்லை.

சமீபத்திய போர்நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிரான தனது வாக்களிப்பை நியாயப்படுத்த, பைடன் நிர்வாகம் தீர்மானத்தின் மாற்றீடு பதிப்பை முன்மொழிந்ததுடன் அதன் வார்த்தைகள் புரியாத வகையில் தெளிவற்றதாக இருந்தன.

அது வெளிப்படையாக ‘சாத்தியமான அளவுக்கு விரைவில் காஸாவில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு’ அழைப்புவிடுத்ததுடன், ‘தற்போதைய சூழ்நிலைகளின் கீழ்’ ஒரு மில்லியன் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கான இஸ்ரேலின் திட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அதன் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்திய அதேநேரத்தில், சர்வதேச நீதிமன்றில் தனியான சட்ட நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தன, இது பல தசாப்தங்களாக பாலஸ்தீனிய பிராந்தியத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதற்கான அதன் உந்துதலில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை எந்த அளவிற்கு மீறி வந்திருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இனப்படுகொலை ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக குற்றம் சாட்டி கடந்த மாதம் உலகளாவிய கவனத்தை ஈர்த்த சர்வதேச நீதிமன்றின் முன் நிலுவையில் உள்ள வழக்கைப் போலல்லாமல், இந்த வார நடவடிக்கைகள் 2022 டிசம்பர் இறுதியில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்திலிருந்து உருவான ஒரு தனி முந்தைய ‘ஆலோசனை நடவடிக்கையின்’ ஒரு பகுதியாகும்.

இந்த தீர்மானமானது, “பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து இஸ்ரேல் மீறுவது தொடக்கம், 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தை அது நீண்டகாலமாக ஆக்கிரமித்து வத்திருப்பது,

குடியேற்றம் செய்வது மற்றும் இணைத்துக்கொள்வது முதல், ஜெருசலேம் புனித நகரத்தின் மக்கள்தொகை அமைப்பு, தன்மை மற்றும் அந்தஸ்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் உட்பட, தொடர்புடைய பாரபட்சமான சட்டம் மற்றும் நடவடிக்கைகளை நிறைவேற்றுவது வரையான பிரச்சினைகள் தொடர்பாக எத்தகைய ‘சட்ட விளைவுகளை’ முன்கொணர வேண்டும் என்று ஹேக்கில் (நெதர்லாந்து) அமர்ந்திருக்கும் சர்வதேச நீதிமன்றத்திடம் கேட்டது.

அந்த வழக்கின் ஒரு பகுதியாக, இந்த வாரம் பாலஸ்தீனத்தின் சார்பாக வழங்கப்பட்ட விளக்கங்கள் வரலாற்று பதிவுகளின் துல்லியமான விளக்கத்தை உள்ளடக்கியிருந்தது.

இந்த விளக்கக் காட்சிகள், “பாலஸ்தீனிய மக்களில் முழுமையாக பாதி பேர் ‘1948 நக்பாவில் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது அவர்களின் நிலத்திலிருந்து விரட்டப்பட்டனர்’, அதன் பின்னர் அவர்களின் நிலம் ‘பிரிக்கப்பட்டதுடன் அதில் பாதி ஒரு புதிய அரசுக்கு ஒதுக்கப்பட்டதோடு அது உடனடியாக கொடூரமான படைகளால் 78 சதவீதமாக நீட்டிக்கப்பட்டது.

1967 ஆம் ஆண்டு… எஞ்சியுள்ள பாலஸ்தீன நிலப்பரப்பு முழுவதையும் இஸ்ரேல் மேலும் தொடர்ந்து ஆக்கிரமித்துக்கொள்ளத் தொடங்கியது,” என்பதை ஸ்தாபித்தன

அதிகரித்து வரும் இந்த இன சுத்திகரிப்பு செயல்முறை இன்றுவரை தொடர்வதுடன் இது வேறெங்குமின்றி ‘ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கையில் தெளிவாக காணப்படுகிறது.

2004 இல் சுமார் 424,000 ஆக இருந்த குடியேற்றப்பட்டோர் எண்ணிக்கை இன்று சுமார் 700,000 வரை வளர்ந்துள்ளது.‘ இந்த ஆயுதம் ஏந்திய பாசிசக் குடியேற்றக் குழுக்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தண்டனையின்றி வன்முறையில் ஈடுபடுவதோடு இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பையும் இஸ்ரேலிய அரசின் ஒப்புதலையும் அனுபவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தூக்கிப் பிடிக்கும் அதே சர்வதேச சட்டக் கொள்கைகளின் கீழ், இந்த நடத்தை தெளிவாக சட்டவிரோதமானதாகும்:

இது ஐ.நா. சாசனத்தையும், அத்துடன் சுய-நிர்ணயம் மற்றும் தேசிய இறையாண்மையின் கோட்பாடுகள் என்று கூறப்படுவதையும் மீறி, ஒருதலைப்பட்சமான பலப்பிரயோகத்தைக் கொண்டு பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதையும் இணைத்துக்கொள்வதையும் உள்ளடக்கி உள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் கீழும் சர்வதேச நீதிமன்றின் முன் நடக்கும் நடவடிக்கைகள் முழுவதிலும் உண்மையானதாக எடுத்துக்கொள்ளப்பட்டவாறு, இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களின் இந்த வரலாறு மிகவும் நன்கு நிறுவப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2022 இல், ஏனைய அனைத்து நாடுகளையும் விட, ஐ.நா. இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதைக் கண்டிக்கின்ற அதிகளவான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

‘இரண்டு-அரசு தீர்வு’ என்று கூறப்படுவது பற்றி அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் பெயரளவில் குறிப்பிடுவது ஒருபுறம் இருக்க, ‘ஜோர்டான் நதியில் இருந்து மத்தியதரைக் கடல் வரையில்’ அப்பகுதி முழுவதிலும் இஸ்ரேலிய மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான அபிலாஷைகள் இஸ்ரேலிய அரசியலில் ஒருபோதும் இரகசியமாக இருந்ததில்லை என்பதை பாலஸ்தீனத்தின் சார்பாக இந்த வாரம் வழங்கப்பட்ட முன்வைப்புகள் விரிவாக ஸ்தாபித்தன.

ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விவிலிய அடைமொழிகளால் குறிப்பிட்டு இஸ்ரேலின் அமைச்சரவை செயலாளர் யொஸ்ஸி ஃபுச்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பின்வருமாறு எழுதினார:

யூதேயாவும் சமாரியாவும் சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இறையாண்மை அரசிடமிருந்து கைப்பற்றப்படவில்லை, மற்றும் யூத மக்களின் வரலாற்றின் தொட்டிலாகவும், இஸ்ரேல் தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பதால் இஸ்ரேல் அரசு இந்த பகுதிகள் மீது தனது இறையாண்மையை திணிக்க உரிமை உண்டு.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், இஸ்ரேலின் இராணுவ வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ஒரு செய்தியில், ‘இறையாண்மை மேற்குக் கரையின் எல்லைகளுக்குள் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த இடம் எங்களுடையது என்ற சர்வதேச அங்கீகாரத்தை உருவாக்க வேண்டும்” என இஸ்ரேலின் மரபுரிமைகள் அமைச்சர் கூறினார்.

தானே ஒரு சட்டவிரோத குடியேற்றக்காரரான, தீவிர வலதுசாரி இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெஸலெல் ஸ்மொட்ரிச், கடந்தாண்டு மார்ச் மாதம், ‘பாலஸ்தீன மக்கள் என்று எதுவும் இல்லை’ என்று கூறும் அளவுக்குச் சென்றார். முன்னதாக, அவர் கூறியதாவது:

‘நாங்கள் தங்குவதற்கே இங்கே இருக்கிறோம். எங்கள் தேசிய லட்சியமான நதி முதல் கடல் வரையிலான யூத அரசு என்பது பேச்சுவார்த்தைக்கோ கலந்துரையாடலுக்கோ இடமில்லாத, நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதை நாங்கள் தெளிவுபடுத்துவோம்.”

சர்வதேச நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள், காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளை அக்டோபர் 7 சம்பவங்களுக்கு பதிலடியாக முன்வைக்கும் முயற்சிகளை பெருமளவில் மறுதலிக்கின்றன.

உண்மையில், இஸ்ரேலிய அரசாங்கம் நீண்ட காலமாக இடைவிடாத ஆத்திரமூட்டல்கள் மூலம் அக்டோபர் 7 எழுச்சியை தூண்டிவிட தன்னுடைய சக்திக்குட்பட்ட அனைத்தையும் கொண்டு முயன்ற அதே வேளை, காஸா முழுவதிலும் இஸ்ரேலிய இறையாண்மையை தினிப்பதற்கான நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதன் பேரில் ஒரு போலிக்காரணத்தை ஸ்தாபிப்பதற்காக அதன் சொந்த துருப்புக்களை நிறுத்தி வைத்திருந்தது.

குறிப்பாக சர்வதேச நீதிமன்றுக்கு அளிக்கப்பட்ட விளக்கக்காட்சிகள், ‘நதியிலிருந்து இருந்து கடல் வரை’ என்ற பாலஸ்தீனிய சுலோகத்தை யூத விரோதமாக முத்திரை குத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும், யதார்த்தத்தை தலைகீழாக்குவதற்கான முயற்சிகளாக அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்க அரசாங்கம் பெரும்பாலும் தந்திரோபாயம் சம்பந்தமான குறிப்புகளுக்கு மட்டுமே ஒரு விடயமாக இருந்த, கடந்த மாதம் நடந்த நீதிமன்ற நடவடிக்கைகளைப் போல் அல்லாமல், பைடென் நிர்வாகம் இந்த வாரம் சர்வதேச நீதிமன்றில் நேரடியாக அவமானகரமான எதிர்த்துரைப்புகளுக்கு உள்ளானது.

‘சர்வதேச சட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் எத்தகைய குற்றங்களை இழைத்தாலும், அமெரிக்கா அதை பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்க முன்வருகிறது’ என்று பாலஸ்தீனத்தின் சார்பாக வாதாடிய அமெரிக்க வழக்கறிஞரும் அமெரிக்க உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உறுப்பினருமான போல் ரீச்லர் அறிவித்தார்.

சர்வதேச நீதிமன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளில் ரீச்லர் கூறுகையில், இஸ்ரேல் அதன் சொந்த நடத்தையின் சட்டபூர்வ தன்மைக்காக வாதிடக் கூட அக்கறை காட்டாமல், அதற்கு பதிலாக தன்னை விமர்சிப்பவர்கள் அனைவரையும் யூத எதிர்ப்பு சார்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டியது.

அமெரிக்க அரசாங்கமே கூட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியத்தை இணைத்துக் கொண்டதன் சட்டபூர்வ தன்மைக்காக வாதிட முடியவில்லை, அதற்கு பதிலாக ‘இது சட்டபூர்வமானதோ அல்லது சட்டவிரோதமானதோ அல்ல’ என்று வலியுறுத்துகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைத் தவிர, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்த ஒரே நாடு பிஜி மட்டுமே.

இது, சர்வதேச சட்டம் என்று எதுவும் கிடையாது என்று மறுப்பதற்கு சமமாகும் என பைடென் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை ரீச்லர் கேலி செய்தார். ‘இதுபோன்ற சட்டவிரோதமான -மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இல்லாத- ஒரு உலகில்தான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ‘சட்டவிரோதமானது அல்ல’ என்று விவரிக்க முடியும்’ என்று ரீச்லெர் கூறினார்.

ரீச்லரின் ஆவேசமான மறுப்பு, நூரெம்பேர்க் விசாரணைகளில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரொபர்ட் ஜாக்சனின் புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவூட்டுகிறது. அவருக்கு எதிரே அமர்ந்திருந்த உயர்மட்ட நாஜி போர் குற்றவாளிகளைக் குறிப்பிட்டு, ஜாக்சன் அறிவித்ததாவது:

இதுதான் சட்டம் என்று இந்த மனிதர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்; உண்மையில் சட்டம் என்ற ஒரு விடயம் இருப்பதைப் பற்றியே அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்த பிரதிவாதிகள் எந்த சட்டத்தையும் நம்பியிருக்கவில்லை. அவர்களின் வேலைத்திட்டம் அனைத்து சட்டங்களையும் புறக்கணிப்பதும் மீறுவதாகும்…. சர்வதேச சட்டம், இயற்கை சட்டம், ஜெர்மன் சட்டம், அனைத்து சட்டங்களும் இந்த மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்போது செயல்படுத்தப்படவும் அவர்கள் செய்ய விரும்புவதைக் கண்டிக்கும்போது புறக்கணிக்கப்பட வேண்டிய” ஒரு பிரச்சார கருவியாக மட்டுமே இருந்தது.

இதே வார்த்தைகள், நெதன்யாகு மற்றும் அவரது முழு ஆட்சியும் மட்டுமன்றி, வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லினில் உள்ள அவர்களின் இரத்தக்கறை படிந்த கூட்டாளிகளும் 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு முழு பலத்துடன் பொருந்தும்.

கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நடந்தவை, உலகளாவிய மேலாதிக்கத்திற்கான தேடலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி உலகம் முழுவதும் அச்சுறுத்தல், குண்டு வீச்சுக்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற நிலையில், ‘விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு’ என்றழைக்கப்படுவதை நிலைநிறுத்துவதாக காட்டும் பாசாங்குத்தனங்களை முழுமையாக அம்பலப்படுத்துகின்றன.

பட்டப்பகலில் இனப்படுகொலை செய்து வரும் ஒரு அமெரிக்க கூட்டாளி மீது அதே ‘விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு’ கையிலெடுக்கப்படும் போது, நேட்டோவுடன் இணைந்த இராஜதந்திரிகள் விழி பிதுங்குகிறார்கள்: ‘விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, என்றா சொல்கிறீர்கள்? கேள்விப்பட்டதே இல்லையே,’ என்கிறார்கள்.

போர்நிறுத்த தீர்மானத்தின் மீதான அமெரிக்காவின் இரத்து அதிகாரமும், அத்துடன் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இஸ்ரேலின் இனப்படுகொலையை அது பாதுகாப்பதும், உலகெங்கிலும், குறிப்பாக அமெரிக்காவிற்குள்ளேயே கூட பாரியளவில் மதிப்பிழக்கச் செய்யும்.

சமீபத்திய எகனாமிஸ்ட்/யூகோவ் கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்காவில் 18-29 வயதுடையவர்களில் 49 சதவீதத்தினர், காஸாவில் இஸ்ரேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகிறதா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்தனர், 24 சதவீதத்தினர் ‘இல்லை’ என்று பதிலளித்தனர்.

2020 இல் பைடனுக்கு வாக்களித்த அனைத்து வயதினரிலும், 50 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதிலளித்தனர், 20 சதவீதம் பேரே ‘இல்லை’ என்று பதிலளித்தனர்.

ஐ.நா.வில் விவாதங்களை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யாவிட்டாலும் குறைத்துக் காட்டும் அமெரிக்க ஊடகங்கள், அதன் பங்கிற்கு, ‘ஜனநாயகமற்ற’ ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வைத் தூண்டிவிடுவதில் கவனம் செலுத்தும் ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளன.

ஆனால் உலகில் அதன் சொந்த மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் அக்கறை காட்டாத ஒரு அரசாங்கம் உள்ளது என்றால், அது பைடென் தலைமையிலான ஆட்சிதான், புட்டின் அல்ல.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும், குற்றவாளிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் ஐ.நா.வின் நிறுவனங்களில் நம்பிக்கை வைக்க முடியாது.

இந்த வாரம் சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் ஒரு நீடித்த சட்ட செயல்முறையின் ஒரு பகுதியாகும். இன்னும் பல மாதங்களுக்கு ஒரு முடிவை கூட எட்டாத இது, பன்பில் ‘ஆலோசனை’ மட்டுமே ஆகும்..

கடந்த வெள்ளிக்கிழமை, ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிய படைகள் தயாரிப்பு செய்து கொண்டிருந்த நிலையில், இனப்படுகொலை உடன்படிக்கை வழக்கில், அவர்களைக் கட்டுப்படுத்த இன்னும் அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு தென்னாப்பிரிக்கா விடுத்த வேண்டுகோளை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்ததுடன் அதற்கு பதிலாக சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் இப்போதைய கடமைப்பாடுகளை வெறுமனே மீளக் கூறியது— பல தசாப்தங்களாக இதேபோன்ற எச்சரிக்கைகளை புறக்கணித்து வந்துள்ள இஸ்ரேல் இந்த எச்சரிக்கைகளை புறக்கணிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அவ்வாறு செய்தது.

நெதன்யாகு கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி உரையில் அறிவித்தது போல், சர்வதேச நீதிமன்றம் இறுதியில் என்ன முடிவுகளை எட்டினாலும் தாக்குதல் தொடரும். ‘ஹேக், பொது எதிரிகள் அல்லது வேறு யாரும், எங்களைத் தடுக்க மாட்டார்கள். வெற்றி பெறும் வரை தொடர்வது சாத்தியமானதும் அவசியமானதும் ஆகும், நாங்கள் அதைச் செய்வோம்.’

அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய எல்லா இடங்களிலும் காஸா படுகொலைக்கு எதிராக அபிவிருத்தி அடைந்து வரும் உலகளாவிய எதிர்ப்பானது, உடந்தையாக இருப்பதால் அல்லது செயலின்மையால் மதிப்பிழந்துள்ள அனைத்து தனிநபர்கள், கட்சிகள் மற்றும் ஸ்தாபனங்களில் இருந்து விலகிக் கொண்டு, அதற்கு பதிலாக ஐக்கியப்பட்ட புறநிலை நலன்களை மற்றும் சோசலிசத்தை நோக்கிய சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் பாதையில் பயணிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

Share.
Leave A Reply