பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இன்னும் இரு நாட்களில் வெளியே வர இருக்கும் நிலையில், ஹரி நாடார் அணிந்திருந்த தங்க நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
கழுத்து, கை, விரல்கள் என உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு ஹரி நாடார் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
இந்த வித்தியாசமான கெட்டப் மூலம் மக்கள் நடமாடு தங்க நகைக் கடை என்ற அளவுக்கு பேசப்பட்டார்.
ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹரி நாடார், தேர்தலிலும் போட்டியிட்டார்.
கடந்த 2019 ஆண்டு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பனங்காட்டுப்படை கட்சி சார்பாக போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து ஆச்சர்யப் பட வைத்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார்.
சிறையில் ஹரி நாடார்: சுயேட்சை வேட்பாளராக ஹரி நாடார் போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவராக ஹரி நாடார் இருந்தார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு குற்ற வழக்கில் ஹரி நாடாரை கைது செய்தனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடார் மீது தமிழக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. அடுத்தடுத்து ஹரி நாடார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவர் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வந்தார்.
ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: மற்ற வழக்குகளில் ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், பண மோசடி வழக்கில், ஹரி நாடாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருந்ததால், அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலேயே கடந்த 34 மாதங்களாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி ஹரி நாடார் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம், ஹரி நாடாருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
நகைகள் அனைத்தும் பறிமுதல்: 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடார் ஜாமீனில் விடுதலையாக உள்ளார்.
இதனிடையே, கிலோ கணக்கில் நகைகளுடன் வலம் வந்த ஹரி நாடாரின் மொத்த நகையும் தற்போது கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்களாம்.
ஹரிநாடாரின் நகைகள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கழுத்து, கைகள், தெரியாத அளவுக்கு நகைகளை அணிந்து கொண்டு வலம் வந்த ஹரி நாடாரை தங்க ஆபரணமே இன்றி வெளியில் விட போகிறதாம்.
இன்னும் இரு தினங்களில் சிறையில் இருந்து ஹரி நாடார் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.