முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 40 மனித சடல எச்சங்கள் தொடர்பான முதல்கட்ட ஆய்வு அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, குறித்த சடலங்கள் 1994 ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
கொக்குத்தொடுவாயில் கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் திகதி நீர் விநியோக குழாய்களை அமைப்பதற்காக தோண்டியபோது, இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
அதை அடுத்து இரண்டு கட்டங்களாக அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 40 சடலங்களின் எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட எச்சங்கள், ஆண்கள், மற்றும் பெண்களுடையவை என்பதை உறுதி செய்திருக்கின்ற பேராசிரியர் ராஜ் சோமதேவ, அவற்றின் வயது பற்றியோ, இறப்புக்கான காரணங்கள் பற்றியோ அறிக்கையிடவில்லை.
இந்தநிலையில், மார்ச் 4ஆம் திகதி மீளவும் இந்த புதைகுழி அகழ்வு இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட போது, அது, இறுதிக்கட்டப் போரில் வட்டுவாகலில், இராணுவத்தினரிடம், கையளிக்கப்பட்ட, சரணடைந்த போராளிகள், தளபதிகளின் சடல எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது.
ஏனென்றால், அவர்கள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பின்னர், காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களின் கதி, இன்றுவரை அறியப்படாத நிலை நீடிக்கிறது. அவர்களே கொக்குத்தொடுவாய் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது.
சடலங்கள் மீட்கப்பட்ட கொக்குத்தொடுவாய் பிரதேசம், 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்திருக்கிறது.
சடல எச்சங்களுடன், மீட்கப்பட்ட சீருடைகள், சயனைட் குப்பிகள், இலக்கத் தகடுகள் போன்ற தடயப் பொருட்கள் அனைத்தும், அவை விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்களை எழுப்பியிருந்தது.
விடுதலைப் புலிகள் தமது போராளிகளின் சடலங்களை, மாவீரர் துயிலுமில்லங்களில் தான் விதைத்தனர். உரிய மரியாதையுடன் தனித்தனி புதைகுழிகளிலேயே வித்துடல்கள் விதைக்கப்பட்டன.
மேலும், புலிகள், தமது உறுப்பினர்களின் சடலங்களை புதைக்க முன்னர், அவற்றில் இருந்து இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள், உள்ளிட்ட பொருட்களை அகற்றியிருப்பார்கள்.
எனவே, இவை எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளால் புதைக்கப்பட்டதாக இருக்க முடியாது என்ற வலுவாக நம்பப்பட்டது.
பெருமளவில் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட- அவர்களின் சடலங்கள், படையினரிடம் சிக்கிய ஒரு பெரும் தாக்குதல், 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி, மண்கிண்டிமலை, கருநாட்டுக்கேணி பகுதிகளில் அமைந்திருந்த ஐந்து இராணுவ முகாம்களின் மீது, அதிகாலை வேளை அந்தப் பெருந்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் ஆண், பெண் போராளிகளை உள்ளடக்கிய படையணிகள், கடல் வழியாகவும், தரைவழியாகவும், ஊடுருவி அந்த பெரும் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
புலிகள் இந்த தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருந்த போது தான், 1995 ஜூலை 9ஆம் திகதி பலாலியில் இருந்து வலிகாமம் மேற்குப் பகுதியைக் கைப்பற்றும் ஒப்பரேசன் லீப் போவேட் (முன்னேறிப் பாய்தல்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அவசர அவசரமாக புலிகளின் படையணிகள், மணலாறு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பதிலடித் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
அராலி, சண்டிலிப்பாய், அளவெட்டி பகுதிகளை முன்னரண்களாக கொண்டிருந்த இராணுவ அணிகளை ஊடறுத்து ஜூலை 14ஆம் திகதி அதிகாலை புலிப்பாய்ச்சல் என்ற பெயரில்,அந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், கைப்பற்றிய இடங்களில் இருந்து பின்வாங்கிச் சென்றனர். அதன் பின்னர் புலிகளின் அணிகள் மீளமைக்கப்பட்டு மணலாறு பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.
மணலாறில் புலிகள் நடத்தப்போகும், தாக்குதல் பற்றிய தகவல்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருந்தது. அப்போது, வெலிஓயா எனப்படும் மணலாறு பிரதேசத்தில் இருந்த 6ஆவது பிரிகேட்டுக்கு பொறுப்பாக இருந்தவர் பிரிகேடியர் ஜனக பெரேரா.
புலிகளின் அணிகள், தமது நிலைகளை ஊடுருவி உள்ளே வருவதற்கு ஏற்ற வகையில் அவர் இடைவெளிகளை உருவாக்கினார்.
அதன் ஊடாக இலகுவாக உள்ளே நுழையும் புலிகளுக்கு மரண அடி கொடுக்கக்கூடிய வகையில், கண்ணிவெடிகளைப் புதைத்தார். ஆட்டிலறிகள், மோட்டார்களை மழைபோலப் பொழிந்து தாக்குதல் நடத்தக் கூடிய ஒருங்கிணைப்புகளையும் முன்னெடுத்தார்.
தேவைப்படும் நேரத்தில் விமானப்படை, கடற்படையின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தார்.
இதனை அறியாமல் புலிகளின் படையணிகள், ஐந்து இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக முன்னேறிச் சென்றன.
இரண்டு பெண் போராளிகள், ஆட்டிலறிகளை தகர்ப்பதற்காக அதனை நோக்கி ஓடிச் சென்ற போது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரிகேடியர் ஜனக பெரேராவின் வியூகத்துக்குள் சிக்கிய புலிகளின் படையணிகளால், தாக்குதலை தொடர்ந்து முன்னெடுக்கவும் முடியாமல், பின்வாங்கிச் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.
கடல் வழியாக உதவிகளை வழங்க முடியாதபடி கடற்படைப் படகுகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. விமானப்படை ஹெலிகளும், விமானங்களும், குண்டுகளை வீசி புலிகளுக்கு உதவி கிடைக்காதபடி தடுத்துக் கொண்டிருந்தன.
இதனால் உள்ளே நுழைந்த புலிகளின் படையணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதே கடினமானதாக மாறியது. இராணுவத்தின் வியூகத்தில் சிக்கிக் கொண்ட புலிகளின் அணிகள் பல முற்றாகவே அழிக்கப்பட்டன. அவர்களின் சடலங்களை விட்டு விட்டு பின்வாங்கும் நிலை புலிகளுக்கு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில், தங்களின் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வரை காயமடைந்தனர் என்றும், முன்னதாக கூறிய இராணுவத் தரப்பு பின்னர், 2 பேர் மட்டுமே இறந்தனர் என்று அறிவித்தது.
அதேவேளை, புலிகள் 300 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 180 பேரின் உடல்களை கைப்பற்றியதாகவும் இராணுவத்தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், 128 பெண் போராளிகள் உள்ளிட்ட 180 போராளிகள் தமது தரப்பில் சாவடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் கூறியிருந்தனர்.
அதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக, புலிகளிடம் 63 சடலங்களைத் தான், இராணுவம் ஒப்படைத்தது. இராணுவத்தினரிடம் இருந்த எஞ்சிய சடலங்கள் தான், கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
மூன்றாவது கட்ட ஈழப்போரில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், பின்னடைவையும், இழப்புக்களையும், பாடங்களையும் கொடுத்த தாக்குதலாக அந்த தாக்குதல் அமைந்தது.
இதயபூமி – 2 என்ற பெயரில் அந்த தாக்குதலை நடத்த புலிகள் திட்டமிட்டிருந்த போதும், தோல்வியில் முடிந்ததால், அந்தப் பெயர் அறிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலில் பெருமளவில் பெண் போராளிகளின் சடலங்கள் படையினரிடம் சிக்கியமை, புலிகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக கைப்பற்றப்பட்ட பெண் போராளிகளின் சடலங்களை கேவலப்படுத்தி, சிதைத்து, அவற்றை காட்சிப்படுத்தி, ஊடகங்களில் வெளியிட்டது, இராணுவம்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் புலிகள் மத்தியிலும் அது பெரியளவில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
அந்த தாக்குதலின் மூலம், பிரிகேடியர் ஜனக பெரேரா பிரபலமடைந்தார். அவர் அங்கிருந்து, சிறப்புப் படைகளை உள்ளடக்கிய ஆர்எஸ்எவ் எனப்படும், விசேட தாக்குதல் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர், ரிவிரெச நடவடிக்கையில் அவர், 53ஆவது டிவிசனின் தளபதி ஆக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே, இராணுவத்தில் ஒரு நட்சத்திர நிலை தளபதியாக அவர் மாறினார்.
அவர் யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றன.
ஐ.தே.க .ஆதரவாளரான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இராணுவத் தளபதியாக நியமிக்க மறுத்து விட்டார்.
அதனால் ஓய்வுபெற்று அரசியலில் ஈடுபட்ட அவர், அனுராதபுரவில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
மணலாறு இராணுவ முகாம்கள் மீதான தாக்குதலில் உயிரிழந்து, படையினரிடம் சிக்கிய புலிகளின் சடலங்கள் தான், கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப் புதைகுழியை அப்போதிருந்த இராணுவ அதிகாரிகள் அறிந்தேயிருப்பார்கள்.
அதனை ஒரு போர்க்குற்றமாக- போர் விதிமுறை மீறலாக முன்னிலைப்படுத்தும் சூழல் அப்போது காணப்படவில்லை.
தற்போது கண்டெடுக்கப்பட்ட சடல எச்சங்களைக் கொண்டு, அதனை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முந்திய அந்த சம்பவங்களை ஆராய்ந்து, உண்மைகளை கண்டறியும் அளவுக்கு இலங்கை ஒன்றும், நீதி தேவதையின் ஆட்சியில் உள்ள நாடு இல்லையே.
கார்வண்ணன்