சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடைபயிற்சி செய்வதற்கோ, நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான ராபா்ட் பயஸ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன்.

இந்தநிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.28) அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தாக ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அதிகாரப் பூர்வமாக தெரிவித்தார்.

 

சாந்தன் காலமானதை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தோரணி ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சாந்தனுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை 4 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவரது தீவிர சிகிச்சை கொடுத்து கண்காணிப்பில் வைத்திருந்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணிக்கு காலமானார் என்று தெரிவித்தார்.

சாந்தன் காலமானதை தொடர்ந்து அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இலங்கை வாழ் மக்களுக்கும், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை வாழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

சாந்தன் அவரது தாயை பார்ப்பதற்காக பலமுறை விண்ணப்பித்திருந்தும் அனுமதி கொடுக்காத மத்திய அரசு அவரது இறப்புக்கு இரண்டு நாள் முன்னதாக சாந்தன் கோமாவில் இருந்தபோது கடந்த 24-ம் தேதி இலங்கைக்கு செல்ல அனுமதி அளித்தது. அப்பொழுதே இந்த அனுமதியால் எந்த ப்ரயோஜனமும் இல்லை என அவரை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தாங்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து ராபா்ட் பயஸ் இம்மாத தொடக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதில், சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடை பயிற்சி செய்வதற்கோ, நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் இருந்த அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

எனது உடல் நலத்தை சரி செய்ய நடை பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இதனால் எனது உடலில் பல நோய்கள் வந்துள்ளது. கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடை பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

மேலும் இந்த முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ, எந்த மதிப்பும் இல்லை. அதனால் தான் சாந்தன் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாம் இங்கேயே இறப்பது உறுதி என்ன கடிதம் எழுதி இருந்தார். அவரது கடிதத்திற்கு ஏற்றவாறு இன்று சாந்தன் உயிரிழந்தது முகாம் மக்களிடையேயும், ஈழத் தமிழர்கள் இடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

யார் இந்த சாந்தன் ?

.

1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் வந்த அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்திய பிரதமர் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டது என்பது உலகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நளினி கைது செய்யப்ட்டார்.

இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்தான் சாந்தன். சுரேந்திர ராஜா என்று அழைக்கப்பட்ட சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இவர் இலங்கையில் பிறந்தவர்.

சாந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவில் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் ஜூலை 22, 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மரண தண்டணை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், சாந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Share.
Leave A Reply