காசாவில் உணவுவாகனத்தை சூழ்ந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்த பலரின் உடல்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
காசாவின் அல்ஸிபா மருத்துவமனைக்கு சென்றுள்ள ஐநா அதிகாரிகள் இந்த சம்பவத்தினால் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 200க்கும் அதிகமானவர்களை பார்வையிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகம் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டன என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. உணவு வாகனங்கள் மோதியதால் இழப்புகள் ஏற்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உலகதலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வியாழக்கிழமை காலையில் இஸ்ரேலின் பாதுகாப்புடன் நுழைந்த உணவுவாகனத்தொடரணியை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துகொண்டதை தொடர்ந்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
துப்பாக்கிபிரயோக சத்தங்கள் கேட்பதையும் மக்கள் பதறி ஓடுவதையும் லொறிகள் பின்னால் மறைந்துகொள்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
112 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 760 பேர் காயமடைந்துள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பதற்றமடைந்ததை தொடர்ந்து ஏற்பட்டதள்ளுமுள்ளு காரணமாகவே உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வாகனத்தொடரணியை சூழ்ந்துகொண்டதை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து அவர்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என இஸ்ரேலியஅதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை பாலஸ்தீனியர்கள் தரப்பிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என இஸ்ரேலிய பிரதமரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்றைய தினமே ஐநாவின் பிரதிநிதிகள் அல்சிபா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டனர் அன்றைய சம்பவத்தில் சிக்கிய பலர் துப்பாக்கி காயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்தனர் என ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.