வைகை புயல் வடிவேலுவின் நடிப்பில் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் அடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெளியான சம்பவம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
இது குறித்து பேசிய வடிவேலு, “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெளிவரும் நேரத்தில் ப்ளூ க்ராஸில் இருந்து சிக்கல் வந்தது. மன்னர் குதிரை ஓட்டக் கூடாது என்றார்கள்.
இது பற்றி பேச கருணாநிதியிடம் நேரம் கேட்டேன். போனை அவரது உதவியாளர் சண்முகம் எடுத்தார். உடனே அவர் கருணாநிதியிடம் கொடுத்தார்.
அவர் வாங்கியதும் என்னயா வடிவேலு எதுவும் பிரச்னையா என்றார். நான் ராஜா குதிரையில் செல்லக் கூடாதாம் என்றேன். அதைக் கேட்டுவிட்டு ராஜா குதிரையில் செல்லாமல் குவாலிஸிலா செல்வான்? என்றார்.
உடனே ஆ.ராசாவுக்கு போன் செய்து இந்தப் பிரச்னையை பார்த்துக் கொள்ள கூறினார். அப்போது, நீயும் ராஜாதான் யா.. என அவரை பார்த்துக் கூறினார்.
இந்தப் படம் கருணாநிதியால் வெளிவந்தது. இல்லையெனில் படம் படுத்திருக்கும். மேலும், எம்.ஜி.ஆர் படம் நடிக்கும்போதும் இப்படி ஓர் பிரச்னை இருந்ததாக கருணாநிதி கூறினார்.
நான் அவரை சந்திக்க 7 நிமிடம்தான் ஒதுக்கினர். ஆனால் அவர் என்னிடம் 22 நிமிடங்கள் பேசினார்” என்றார்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ஆகும். இந்தப் படத்தில் வடிவேலு இரட்டை கதாபாத்தில் நடித்திருப்பார். இன்றளவும் இந்தப் படத்தின் காட்சிகள் அரசியல் மீம்ஸ் உருவாக்க டெம்ளேட் ஆக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.