“இந்த பிரபஞ்சத்திலே இறைவனால் படைக்கபட்ட தோற்ற பொருட்களிலே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தத்துவம் உண்டு.

உதாரணத்திற்கு பச்சை மிளகாய் என்றால் அதன் தத்துவம் காரம், நெல்லிக்காய் என்றால் துவர்ப்பு, ஆப்பிள் என்றால் இனிப்பு என்று சொல்லுவோம்.

ஆனால் மனிதன் என்றால் நமக்குள்ளாக வெவ்வேறு விடைகள் வரும். அது தான் மனிதனின் சிறப்பு.

இறைவனுடைய கருணையினால் இந்த பிரபஞ்சத்திலே தோற்றுவிக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை 84 லட்சம் ஆகும். அதில் 3.84 லட்சம் யோனி பேதங்கள் உள்ளது.

இதில் கடைசியாக தோற்றுவிக்கப்பட்ட உயிரினம் தான் நாம் என்று சொல்லக்கூடிய மனிதர்கள், மனிதருக்கு பிறகு இறைவன் எந்த உயிரினத்தையும் படைக்கவிலலை.

ஆனால், மனிதன்தான் இறையின் வேலையை மெய்ஞான, விஞ்ஞான உதவியோடு பல கண்டுபிடிப்புகளை படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு காரணம், மற்ற தோற்ற பொருட்களுக்கு ஒரு தத்துவம் என்றால், மனிதருக்கு மட்டும் 96 தத்துவங்கள் அடங்கி இருக்கிறது.

இவை அனைத்தையும் நமக்குள் உள்ள அறிவே ஆண்டு கொண்டு இருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் அந்த அறிவே நமக்குள் தெய்வமாக விளங்கி கொண்டு இருக்கிறது.

இந்த தத்துவத்தை தெரிந்து கொண்டால் தான் நான் யார் என்பது புரியும்.அன்பர்களே, இந்த 96 தத்துவங்களில் முக்கியமானது தச வாயுக்கள் (பத்து) மற்றும் தச நாடிகளும் (பத்து) ஆகும்.

இந்த ஆயுளை நிர்ணயிக்கின்ற தச வாயுக்கள் மற்றும் தச நாடிகளையும் நாம் தெரிந்து கொண்டால் தான் நாடி சுத்தி பிராணாயாமத்தின் மூலம், மரணத்தை வெல்ல முடியும்.தச

வாயுக்கள்:1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 6. ஞாகன் 7. கூர்மன் 8. கிருகரன் 9. தேவ தத்தன் 10 தனஞ்செயன்.

பிராணனின் இருப்பிடம் இருதயம். இரத்தத்தை அடித்து வெளித்தள்ளி, உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் செலுத்துதல் மற்றும் நமக்கு பசி, தாகத்தை உண்டாக்குதல், ஆகாரத்தை ஜீரணிக்க செய்தல்.

அபானன் என்பது மூலாதாரமாகிய குதத்துக்கும், குய்யத்துக்கும் இடைப்பட்ட இடம் ஆகும். இது சிறுநீர், மலம், சுக்கில சுரோணிதமாகிய விந்து நாதத்தை வெளியேற்றும்.

உதானன் என்பது நமது தொண்டை பகுதியில் இருந்து சாப்பிடும் உணவை விழுங்கி, சப்த தாதுக்கள் என்று சொல்லப்படுகின்ற இரசம்-ரத்தம்-தசை-, கொழுப்பு-எலும்பு-மஜ்ஜை,- விந்து நாதமாக பிரிந்து, பிறகு மலச்சுழிவை மலப்பையில் தள்ளும்.

சமானன் என்பது நாபி சக்கரத்தில் உள்ளது. பசி, தாகம், செரிமானம் மற்றும் உடலின் வெப்பமாகிய 98.4 க்கு சரி செய்யும்.

வியானன் என்பது உடல் எங்கும் நிறைந்து, உடலின் மேல் விழும் தோல் உணர்ச்சியாகிய ஸ்பரிசம் உணர்வை உணர்வதற்கு உதவி செய்கிறது.

நாகன் என்பது தொண்டை பகுதியில் இருக்கும். இது நமது வாய் வழியாக எந்த திட, திரவ உணவு உள்ளே சென்றாலும் அது நமக்கு ஒத்து வராது என்று தெரிந்துவிட்டால், உடனே வாந்தி உணர்ச்சியை தூண்டி, இந்த உடலுக்கு உதவாத தீமையை ஏற்படுத்த கூடிய அந்த திட, திரவ உணவை வெளியே தள்ள உதவி செய்யும்.

கூர்மன் என்பது நமது வலது, இடது கண்களை திறந்து மூடவும், கண்ணீரை வெளியே தள்ளுவதற்கும் உதவி செய்கிறது.

கிருசுரன் என்பது மூக்கில் இருந்து கொண்டு, வாசனை உணர்வை உண்டாக்கி, நுகர்வதற்கும் ஒவ்வாத பொருள் உள்ளே செல்லும் போது தும்மலை உண்டாக்கவும் செய்யும்.

தேவ தத்தன் என்பது மார்பில் இருந்து கொண்டு கொட்டாவியையும் மற்றும் விக்கலையும் உண்டாக்க செய்யும்.

தனஞ்செயன் என்பது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை வெளியே தள்ளும். இந்த வாயுவை தவிர, மற்ற 9 வாயுக்களும், மரணத்தின் போது பிராணனுடன் சேர்ந்து வெளியேறிவிடும்.

இந்த தஞ்செயன் வாயு மட்டும் வெளியேறாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நாம் பொதுவாக இறைவனை தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வோம்.

அது போல் தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் ஒரு இறந்த சடலத்தில் உள்ளும் இருக்கிறார் என்ற தத்துவத்தை உணர செய்வதற்காக இருக்கும்.

இது ஒருவர் இறந்தவுடன் இந்த வாயு மட்டும் வெளியேறாமல் அந்த உடலை வீங்க செய்யும். நம் உடலில் உள்ள நவ துவாரங்கள் (9 ஓட்டைகள்) வழியாக நுரை, மற்றும் நீரை வரசெய்யும். மேலும் உடலை நாற்றம் அடிக்க செய்யும்.

உடலை இடுகாட்டுக்கு கொண்டு போய், தீ மூட்டியவுடன் பாதி உடல் தீயில் வெந்த பிறகு டப் என்ற சத்தத்துடன் வெடித்து பிரியும்.

உதே உடலை எரிக்காமல், புதைக்கும்போது, உடலின் மாமிசம் மண்ணாகும் வரை இருந்து பிறகு பிரியும்.

இறந்த ஒரு நபரை உயிருடன் மீண்டு வர செய்த யோகிகள் இந்த தனஞ்செயன் வாயு உதவியுடன் தான் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் இந்த வாயு ஆனது ஒரு இறந்த உடலில் 72 மணி நேரம் இருக்கும். ஜீவ சமாதியில் இருக்கும் யோகிகளுக்கு உடலில் இருந்து இந்த பத்து வித வாயுக்களும் வெளியேறுவது இல்லை.

அவர்களுக்கு உடல், மன இயக்கம் இருக்காது, உயிர் இயக்கம் மட்டும் இருக்கும்.அடுத்ததாக தச நாடிகள் என்று சொல்லப்படுகின்ற 10 நாடிகளை பற்றி பார்ப்போம்.

1. இடகலை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. சிகு பை 5. புருடன் 6. காந்தாரி 7. அத்தி 8. அலம்புடை 9. சங்கினி 10. குகு.

இடகலை என்பது வலது கால் பெருவிரலில் தொடங்கி இடது பக்க நாசியில் (மூக்கு) முடியும் (இடது பக்க நரம்பு) இதை சந்திர நாடி என்றும் மாத்ரு (அம்மா) நாடி என்றும் அழைப்பர்.

பிங்கலை என்பது இடதுகால் பெரு விரலில் தொடங்கி வலது நாசியில் முடியும் (வலது பக்க நரம்பு). இதை சூரிய நாடி என்றும் பித்ரு (அப்பா) நாடி என்றும் அழைப்பர்.

சுழுமுனை என்பது மூலாதாரத்தில் தொடங்கி, முதுகு தண்டின நடுவே பிரயாணம் செய்து 72,000 நாடிகளுக்கும் ஆதாரமாக நடு நிலையாய் இருந்து சிரசில் (தலை) முடியும் (நடு நரம்பு) ஆகும். இதை குரு நாடி அல்லது அருள் நாடி என்று அழைப்பர். நம் மனது அமைதி நிலைக்கு செல்வதற்கும், தியானத்தில் வெற்றி பெறுவதற்கும், சித்தி, அடைவதற்கும் துணை புரியும்.

சிகுவை என்பது உள் நாக்கில் நின்று திடமற்றும் திரவ உணவுகளை விழுங்க செய்யும் (உள் நாக்கு நரம்பு).

புருடன் என்பது வலது கண்ணில் இருந்து செயல்படும் (வலக் கண் நரம்பு)

காந்தாரி என்பது இடக் கண்ணில் இருந்து செயல்படும்

அத்தி என்பது வலது காதில் இருந்து செயல்படும் (வலச் செவி நரம்பு)

அலம்புடை என்பது இடது காதில் இருந்து செயல்படும் (இடச்செவி நரம்பு)

சங்கினி என்பது ஆண், பெண் ஜனன உறுப்பின் வாய் திறக்க உதவும் (சுருவாய் நரம்பு)

குகு என்பது குதத்தில் நிற்கும் (மலவாய் நரம்பு)

அந்த தச வாயுக்கள் மற்றும் தச நாடிகளோடு சேர்த்து நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கின்ற பஞ்ச பூதங்களும் நம் உடலில் இருக்கின்ற ஆதார சுக்கரங்களான மூலதாரம். சுவாதி ஷ்டானம், மணிபூரகம், அனாசுதம், விசுக்தி, ஆக்கினை என்கின்ற 6 ஆதாரங்களும் (7வது ஆதாரமாகிய துரியம் என்பது பரமாத்தா எனவே, இதனோடு சேராது) சேர்த்து 31 தத்துவங்கள் (வாயு – 10, நாடி 10, பஞ்சபூதம் 5 மற்றும் ஆதாரம் 6) தான் நம் அன்றாட வாழ்வையும். நமது விதியையும் நிர்ணயிக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம் பிராணன் என்று சொல்லுகின்ற சுவாசத்தை நிர்ணயம் செய்கிறது. சரி, இப்போது நம் சுவாவத்தை பற்றி தெரிந்து கொள்ள மெதுவாக அகம் நோக்கி பிரயாணத்தை தொடர்வோம்.

நமது உடல் கடந்து வெளியில் இருக்கின்ற வாயுவை வளிமண்டல வாயு என்கிறோம். நாம் ஒரு முறை மூச்சை உள்ளே இழுக்கும் போது எப்படி உள்ளே இழுக்கிறோம்.. அதில் எந்த வாயுக்கள் உள்ளே வந்து பிராண சக்தியாக மாறுகிறது. அதே போல வெளிவிடும் போது எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

இப்படி இந்த பிராணன் என்கின்ற மூச்சு, நமது உடல் முழுவதும் பரவி வியாபிக்கிறது. இது இல்லை என்றால் நாம் இல்லை. எனவே, தான் சித்தர்கள், காயமே (உடல்) இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று சொன்னார்கள்.

இந்த மூச்சு தான் நாம் இறைவனுடைய கணக்குப்படி நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்கள் செய்ய வேண்டும் என்று கணக்கிடப்பட்டு அதன்படி மூச்சை உபயோகம் செய்பவர்களுக்கு 120 ஆண்டுகள் ஆயுள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த 21600 மூச்சுகள் நம்முள் எப்படி இயங்குகிறது. எந்தெந்த நேரத்தில் இயங்குகிறது. அப்படி இயங்கும் போது நம்முடைய ஆயுளை எப்படி நிர்ணயிக்கிறது என்பதை பார்க்கும்போது விந்தையாக இருக்கும்.

இந்த 120 ஆண்டுகள் இறைவனால் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை என்றால் நாம் ஏன் அதற்கு முன்பே இறந்து விடுகிறோம் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அதை தான் நாம் கர்மா என்றும் நம்முடைய பதிவுகள் என்றும் விதி என்றும் கூறுகிறோம்.

இந்த விதி என்கின்ற கர்மா தான் நமது மூச்சின் எண்ணிக்கை வழியாக நமது ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்றால், நம்மில் எத்தனை பேர் நம்புவோம்.

ஆனால் நாம் நம்பிதான் ஆக வேண்டும். அடுத்ததாக இந்த கர்மா என்கின்ற விதி நம்மூச்சோடு எப்படி சேர்க்கிறது. அதிலிருந்து தப்பித்து கொள்ள இந்த பிராணாயாமம் எப்படி அருள் புரிகிறது என்பதை அடுத்த தொடரில் ஆராய்ச்சி செய்வோம்.

Share.
Leave A Reply