ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், மருத்துவர்களின் ஆலோசனைக்கு எதிராக 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வினோதமான சம்பவம் குறித்து ‘தி லான்செட்’ (The Lancet) எனும் மருத்துவ ஆய்வு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை வருட காலத்தில், தனியாரிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் இதுவரை எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
‘பரிசோதனையின் போது மீண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது’
எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் கிலியன் ஸ்கோபர் கூறுகையில், “நாங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி செய்தித்தாள் மூலம் அறிந்து கொண்டோம். பின்னர் அவரைத் தொடர்புகொண்டு, பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள எர்லாங்கனுக்கு அழைத்தோம். அவர் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்,” என்கிறார்.
அந்த நபரின் இரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் பெறப்பட்டன. இதற்கு முன்பாக அவரே சேமித்து வைத்திருந்த சில உறைந்த இரத்த மாதிரிகளையும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.
“அந்த நபரின் சொந்த வற்புறுத்தலின் பேரில் ஆய்வின் போது மேலும் ஒரு தடுப்பூசி அவருக்குச் செலுத்தப்பட்டது. இதனால் புதிய இரத்த மாதிரிகளை எங்களால் எடுக்க முடிந்தது. தடுப்பூசிக்கு நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைத் தீர்மானிக்க இந்த மாதிரிகளைப் பயன்படுத்த முடிந்தது,” என்கிறார் மருத்துவர் ஸ்கோபர்.
அந்நபர் செலுத்திக்கொண்டதாகத் தெரிவிகும் 217 தடுப்பூசிகளில், 130-க்கான ஆதாரங்கள் ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் அரசு வழக்கறிஞரால் சேகரிக்கப்பட்டன. அதை வைத்து அவர் தடுப்பூசி விவகாரத்தில் நடந்த மோசடிகள் குறித்த விசாரணையைத் தொடங்கினார். ஆனால் அந்நபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
கோவிட் தடுப்பூசிகளால் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியாது, ஆனால் நோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை உடலுக்கு கற்றுக்கொடுக்க முடியும், என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
வைரஸிலிருந்து பெறப்பட்ட சிறிதளவு மரபணுக் குறியீட்டை உடலின் செல்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், வைரஸை எதிர்த்து வேலை செய்கின்றன தூது-ஆறனை (Messenger RNA, mRNA) தடுப்பூசிகள்.
கோவிட் தொற்றை உண்மையாக எதிர்கொள்ளும்போது அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை நமது நோயெதிர்ப்பு அமைப்பு அறிந்து கொள்ள வேண்டும்.
நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மீண்டும் மீண்டும் தடுப்பூசி டோஸ்களை அளிப்பது, சில செல்களை சோர்வடையச் செய்திருக்கலாம் என்று டாக்டர் ஸ்கோபர் கருதுகிறார்.
ஆனால் 62 வயது நபரின் உடலில் இருந்து இதற்கான எந்த ஆதாரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அவருக்கு இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
கோவிட் தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
“முக்கியமாக, மீண்டும் மீண்டும் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை,” என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
62 வயது நபர் மூலம் செய்யப்பட்ட சோதனைகளின் முடிவுகள் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கப் போதுமானதாக இல்லை, என்கின்றர் அவர்கள்.
“வழக்கமான டாப்-அப் தடுப்பூசிகளுடன் சேர்த்து மூன்று-டோஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதே பரிந்துரைக்கப்படும் அணுகுமுறையாக உள்ளது என்று தற்போதைய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஒருவருக்கு அதை விட அதிக தடுப்பூசிகள் தேவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்று பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
“கோவிட் தடுப்பூசிகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகின்றன, ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட சிலருக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படலாம். அவ்வாறு தேவைப்படுபவர்களை நாங்களே தொடர்பு கொண்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை செலுத்துகிறோம்,” என தேசிய சுகாதார அமைப்பு கூறுகிறது.
கோவிட் தடுப்பூசிகள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு பொதுவான பக்கவிளைவு, ஊசி செலுத்தப்பட்ட கையில் ஏற்படும் கடுமையான வலி.
பிபிசி தமிழ்